Showing posts with label அன்னா ஹசாரே. Show all posts
Showing posts with label அன்னா ஹசாரே. Show all posts

Friday, October 11, 2013

மோடி பிரதமரானால் கலவர வழக்குகள் மறக்கடிக்கப்படும் – குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீகுமார்!

கொச்சி: நரேந்திர மோடி பிரதமரானால் குஜராத்தில் அவர் தலைமை வகித்த கலவரம் தொடர்பான வழக்குகள் காணாமல் போகும் என்று மோடிக்கு எதிரான சட்ட ரீதியான போராட்டங்களின் மூலம் பிரசித்தி பெற்ற குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.



கொச்சிக்கு வருகை தந்த ஆர்.பி. ஸ்ரீகுமார் தேஜஸ் மலையாள நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியது: வழக்குகளை அழித்தொழிக்கவே மோடியை பிரதமராக்க பா.ஜ.க. படாத பாடு படுகிறது. மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்கள் தற்போது அச்சத்தால் மெளனம் சாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் நாட்டு மக்களிடையே மோடி தங்களது பாதுகாவலன் என்ற எண்ணத்தை ஏற்படுத்த பா.ஜ.க. மற்றும் மோடியால் முடிந்துள்ளது.

சங்க் பரிவார் அல்லாத சாதாரண இந்துக்கள் மத்தியிலும் அத்தகையதொரு பிரச்சாரம் செல்வாக்கு பெற்றுள்ளது. அவ்வளவு தூரம் நாட்டு மக்களின் உள்ளங்கள் வகுப்புமயமாக்கப்பட்டு வருகின்றன. குஜராத்தின் பொய்யான வளர்ச்சிவாதங்கள் ஒரு புறம் வேகமாக பரப்புரை செய்யப்படுகின்றன.
தற்போது மூன்று வகையான மக்கள் நாட்டில் உள்ளனர். 1. என்ன நடந்தாலும் சங்க் பரிவாரத்தையும், மோடியையும் ஆதரிப்பவர்கள். 2. நடுநிலையான மோடியை எதிர்ப்பவர்கள். 3. மோடியை மகானாக கருதும் கற்பனையில் உழலுபவர்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். முன்பு ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரச்சாரத்திற்கு உபயோகித்தது போலவே அனைத்து விதமான பிரச்சார உத்திகளையும் பயன்படுத்தி இந்த 3-வது பிரிவினரை ஈர்ப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளும் நடந்து வருகின்றன.
அதில் அவர்கள் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளார்கள். குஜராத்தில் 90 சதவீத ஹிந்துக்களும் வகுப்புமயமாக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

Monday, February 6, 2012

அன்னா ஹஸாரே மீது ஆர்.எஸ்.எஸ் கோபம்


புதுடெல்லி:அன்னா ஹஸாரேயின் நன்றிக் கெட்டத் தனத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முக்கிய பங்கை வகித்தபோதும் அதனை ஹஸாரே அங்கீகரிக்கவில்லை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் சர் சங்க் சாலக்கின் கோபத்திற்கு காரணமாம். பாட்னாவில் அன்னா ஹஸாரேயை கடுமையாக விளாசினார் பாகவத்.
அவர் கூறியது:
“ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே தேசம் தழுவிய அளவில் நடத்திய போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தீவிரமாக பங்கேற்றனர். ஆனால் ஏன் ஹஸாரே இதனை அங்கீகரிக்க முன்வரவில்லை என்பது குறித்து எனக்கு புரியவில்லை. தேசம் முழுவதும் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்த கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றி போதும் அன்னா ஹஸாரேயின் இயக்கத்தில் ஓர் அமைப்பு என்ற நிலையில் ஆர்.எஸ்.எஸ் அதிகாரப்பூர்வமாக சேரவில்லை.

ஆர்.எஸ்.எஸ் அதிகாரப்பூர்வமாக கட்டளை பிறப்பிக்காவிட்டாலும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தனிப்பட்ட ரீதியில் ஹஸாரேயின் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்க சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வகித்த பங்கினை அங்கீகரிக்க ஹஸாரே தயாராகவில்லை. ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவை பெற்றதற்கு காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தை சந்தித்ததால் அவர் இவ்வாறு நடந்திருக்கலாம்.
நிதின் கட்கரியை பா.ஜ.க தலைவராக நியமித்தது ஆர்.எஸ்.எஸ் அல்ல. 2009-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பிறகு ராஜ்நாத் சிங்கை மாற்றக்கோரி பா.ஜ.க தலைவர்கள் என்னை சந்திக்க வந்தனர். ஆகையால் பேச்சுவார்த்தைக்கான களத்தை உருவாக்கி கொடுத்தோம். பா.ஜ.க தலைவர்கள் பரிந்துரைத்த பல பெயர்களில் கட்கரியும் அடங்குவார். ஹிந்து பயங்கரவாதம் என ஒன்று கிடையாது. தீவிரவாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வகுப்புவாத நிறத்தை அளிக்கும் முன்பு வழக்கை நிரூபிக்கவேண்டும்.” இவ்வாறு மோகன் பாகவத் கூறியுள்ளார்.

Saturday, January 7, 2012

தோல்வியை நோக்கி செல்லும் அன்னாவின் ஊழல் எதிர்ப்பு நாடகம்-ர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் உள்ளோம்- கேஜ்ரிவால்



டெல்லி: அடுத்து என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த நேரத்தில் நாங்கள் ஏதாவது தவறான முடிவை எடுத்து விட்டால் அது ஒட்டுமொத்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கும் பெரும் சீரழிவாக அமைந்து விடும் என்று அன்னா ஹஸாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தோல்வியைத் தழுவி விட்டதை அரைமனதோடு ஒப்புக் கொண்டுள்ளார் அந்தக் குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அரவிந்த் கேஜ்ரிவால்.


அன்னா தொடங்கிய ஊழல் எதிர்ப்பு இயக்கம் இன்று பெரும் குழப்பத்தில் மூழ்கியிருப்பதை கேஜ்ரிவாலின் பேச்சு வெளிப்படுத்துவதாக உள்ளது. ஏற்கனவே ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் அன்னா பங்கேற்பார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அவர் வர மாட்டார் என்று நேற்று கிரண் பேடி கூறியிருந்தார். இந்த நிலையில் அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று கேஜ்ரிவால் கூறியிருப்பதன் மூலம் அவர்களின் பெரும் குழப்பம் உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து தங்களுக்கு ஆலோசனை கூறுமாறு மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது அன்னா ஹஸாரே குழு.

ஊழல் எதிர்ப்பு இயக்கமாக மட்டும் இருந்நதவரை அன்னா குழுவுக்கு மக்கள் மகத்தானதாக இருந்தது. ஆனால் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கமாக அது மாறியபோதுதான் பெரும் எதிர்ப்புகளை சந்திக்க ஆரம்பித்தது. அன்னாவுக்கு தீவிரமாக ஆதரவு கொடுத்தவர்கள் கூட ஊழல் ஒழிப்பு என்பதிலிருந்து தடம் மாறி அரசியல் பாதைக்குள் நுழைவது தவறு என்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் இதை அன்னா குழுவினர் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. தொடர்ந்து காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கினர். இது அவர்களுக்கே பாதகமாக தற்போது அமைந்து விட்டது.

குறிப்பாக ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸை எதிர்த்து தீவிரமாகப் பிரசாரம் செய்வோம் என்று அன்னாவும், அவரது குழுவினரும் கூறியதை மக்களில் பெரும்பாலனோர் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அன்னா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரான அரவிந்த் கேஜ்ரிவாலிடம், பாஜகவுக்கு உ.பி. தேர்தலில் ஆதரவு தருவீர்களா என்று கேட்டனர் செய்தியாளர்கள். அதற்கு அவர் பதிலளிக்கையில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு முன்னாள் பகுஜன்சமாஜ் கட்சி அமைச்சரை தனது கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ள கட்சிக்கு எப்படி நாங்கள் ஆதரவு தர முடியும் என்று கேட்டார்.

அன்னா ஹஸாரேவின் குழுவுக்கு தற்போதுதான், இந்தியாவில் உள்ள எந்தக் கட்சியும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு தரும் தகுதியுடன் இல்லை என்பதே தெரிய வந்துள்ளது. பாஜக சுத்தமான கட்சி என்று நம்பி அந்தக் கட்சிக்கு மறைமுகமான ஆதரவு கொடுத்து வந்த அன்னா குழுவினர், பாஜகவும் அப்படித்தான் என்ற கருத்துக்கு இப்போதுதான் வந்துள்ளனர்.

மேலும் குழு உறுப்பினர்களும் கூட இப்போது ஆளுக்கு ஒரு கருத்தாக பேச ஆரம்பித்துள்ளனர். கிரண் பேடி ஒன்றைப் பேசுகிறார். சந்தோஷ் ஹெக்டே நான் சொல்வதைக் கேளுங்கள் என்று சில ஆலோசனைகளை முன்வைக்கிறார். கேஜ்ரிவால் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார். ஒரே மாதிரியான குரல் இப்போது அன்னா குழுவிலிருந்து வருவதில்லை.

கேஜ்ரிவால் மேலும் கூறுகையில், அன்னாவுக்கு உடல் நலம் சரியல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தான் மிகவும் மோசமான முறையில் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற வருத்தம்தான் அதிகம் வாட்டுகிறது. எந்தக் கட்சியும் அவருக்கு ஆதரவு தர முன்வரவில்லை. இதுதான்அவருக்கு வேதனையாக உள்ளது.

சிலர் நாங்கள் தனிக் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்கள். ஆனால் அதற்கான வலிமை எங்களிடம் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அடுத்து என்ன செய்வது என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. இந்த நேரத்தில் எந்த முடிவு எடுத்தாலும் அது தவறாகவே போய் முடியும் என்றார் கேஜ்ரிவால்.



Tuesday, January 3, 2012

தேசியக் கொடியை அன்னா எப்படி பயன்படுத்தலாம்: தடைவிதிக்கக் கோரி சென்னை ஐகோர்டில் வழக்கு

சென்னை: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் தங்கள் போராட்டங்களின்போது தேசியக் கொடியை பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இது குறித்து வழக்குரைஞர் என். ஜான் செல்வராஜ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது,


ஊழலுக்கு எதிரான போராட்டங்களை அன்னா ஹசாரே நடத்தி வருகிறார். ஊழலுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது ஏற்கக் கூடியதே. அந்தப் போராட்டம் மரியாதைக்குரியது ஆகும்.




எனினும், அன்னா ஹசாரேவோ அல்லது அவரது இயக்கத்தினரோ தங்களது போராட்டங்களில் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. மூவர்ண தேசியக் கொடி என்பது இந்த நாட்டின் பெருமைகளைப் பறைசாற்றுவது.


அத்தகைய பெருமை மிக்க தேசியக் கொடியை அன்னா ஹசாரே தனது போராட்டங்களில் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tuesday, December 27, 2011

அன்னா ஹசாரேயின் வேஷம் கலைந்தது!

DEC 27: ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்குடன் அன்னா ஹஸாரே இணைந்து பணியாற்றிய செய்தி ‘நய் துன்யா’ என்ற ஹிந்தி பத்திரிகையில் வெளியானது.
1) ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் என்பவரின் செயலராக பணியாற்றி உள்ளார் 
அன்னா ஹஸாரே



2) 1983-ல் 
உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில்ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூன்று நாள் பயிற்சி பாசறையில் பங்கு கொண்டுள்ளார். 



3) 1965 ல் இந்தியா, பாகிஸ்தான்  யுத்தம் நடக்கும் போது அதில் பங்கெடுக்காமல் இந்திய ராணுவத்தில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டார்.

4) நாட்டை பாதுகாக்க நடக்கும் யுத்தத்தில்  பங்கு கொள்ளாமல் ஒளிந்து கொண்ட ஒரு கோழை ராணுவவீரர்தான் 
அன்னா ஹஸாரே. 
அன்னா ஹஸாரேவை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். இயக்கதான் என்ற திக்விஜய்சிங்கின் குற்றச்சாட்டை இவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.


இந்த செய்திகளை பார்பன தினமணி, தினமலர் போன்றவை இருட்டடிப்பு செய்கின்றன.  "தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்" என்பதை மறைக்க ஆயிரம் பொய் சொல்கிறார் அன்னா ஹஸாரே. இதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதுதான் என்ன? இப்படி பட்ட ஒரு பெய்யரை நம்பி நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். அன்னா ஹஸாரே தனது வேஷத்தை கலைத்து வெளியே வருவாரா! தன்னை யாரென்று அறிவிப்பாரா!

Saturday, September 3, 2011

அன்னா உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் – கொதிக்கிறார் மணிப்பூர் இரும்புப் பெண்



இம்பால்:அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி விமர்சித்துள்ளார்.
அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது. 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.
அன்னாவின் உண்ணாவிரத போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வேளையில், மணிப்பூரில் ஒரு பெண் அந்த மாநில மக்களுக்காக கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் வெறும் திரவ உணவுடன் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பெண்ணின் பெயர் இரோம் சர்மிளா. மணிப்பூர் மக்களின் நலனுக்காக, ராணுவத்தின் அட்டகாசத்தை எதிர்த்து குரல் கொடுப்பதில் முன்னணியில் உள்ளவர் இவர். மணிப்பூரில் பிரிவினைவாதத்தை ஒழிக்க பாதுகாப்பு படைக்கு சிறப்பு அதிகாரங்கள் அளித்தது மத்திய அரசு.
இதுதொடர்பாக சட்டம் உள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தி, ராணுவ வீரர்கள் யாரும், சாதாரண மக்களை கைது செய்யலாம்; பிரிவினைவாதி என்று சொல்லி தண்டனை வாங்கி தரலாம். இதுபோலவே, பெண்களை செக்ஸ் ரீதியாக சித்ரவதை செய்வதும் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், இரோம் சர்மிளா, தொடர்ந்து போராடி வருகிறார். அவர் 3765-வது நாளாக பட்டினி கிடந்து வருகிறார். அவர் இப்போது நீதிமன்ற காவலில் உள்ளார். ஆண்டுக்கணக்கில் பாதுகாப்பு படையினர் அவரை காவலில் வைத்துள்ளனர்.
அவரை அன்னாவின் ஆதரவாளர்கள் சிலர் அணுகி, நீங்களும் அன்னாவின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டனர். ஆனால், சர்மிளாவால் போக முடியவில்லை.
அன்னாவின் உண்ணாவிரதத்தை பிரபலப்படுத்திய நிலையில், இவரின் 11 ஆண்டு கால பட்டினிப்போராட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த பரபரப்புக்கு இடையே, ஓசைப்படாமல் ஹரித்வாரில் நிகமானந்தா என்ற ஒரு 38 வயதான சாமியார், கங்கை தூய்மைக்காக 68 நாள் உண்ணாவிரதம் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். அவர் இறந்த பின்புதான் மீடியாக்களின் வெளிச்சமே அவர் பக்கம் திரும்பியது.
இதுபோல, அன்னாவின் உண்ணாவிரதத்துக்கு பின்புதான் மணிப்பூர் இரும்புப் பெண் 11 ஆண்டாக உண்ணாவிரதம் இருந்த விவரம் மீடியாக்களின் கவனத்துக்கு வந்துள்ளது.
அவரை அணுகி கேட்டபோது, மணிப்பூரில் உள்ள மக்களின் நிலை பற்றி வெளி மாநிலங்களில் பலருக்கும் தெரியவில்லை. பாதுகாப்புப் படையினர் நடத்தும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2004 ம் ஆண்டு வந்து சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை அவர் வாய்திறக்கவே இல்லை என்று இரோம் வருத்தப்பட்டார்.

அன்னாவின் போராட்டம் பற்றி கூறுகையில், அவர் போராட்டம் செயற்கை தனமானது. என்னையும் கூப்பிட்டனர். ஆனால், நீதிமன்ற காவலில் உள்ள நான் எப்படி போக முடியும்? அவர் இங்கு வந்து எங்களுடன் போராடினால் வரவேற்பேன் என்றும் இரோம் தெரிவித்தார்.

Saturday, August 27, 2011

அன்னா ஹசாரே - காந்தி தாத்தாவா அல்லது பாசிச தாதாவா



வெள்ளையர்களை விரட்ட மகாத்மா காந்தியின் தலைமையில் நடந்த முதல் சுதந்திர போருக்கு ஒப்பானதாக ஊழலுக்கு எதிராக தற்போது இந்தியாவின் தாத்தாவாக காந்தியின் அவதாரமாக மீடியாவால் சித்தரிக்கப்படும் அன்னா ஹசாரேயின் தலைமையில் நடக்கும் போராட்டத்தை இரண்டாம் சுதந்திர போராட்டமாக மீடியா பிரபலப்படுத்தி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் அன்றைய சுதந்திர போரை விட மிக பிரபலமான ஒன்றாக தேச எல்லைகளை தாண்டி சர்வதேச ஊடகங்களின் கதாநாயகனாக மாறியிருக்கிறார் இந்த தாத்தா.
இன்று பத்திரிகைகள், முக புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இப்புரட்சிக்கு எதிராக பேசுபவர்கள் சமூக விரோதிகளாக, தேச துரோகிகளாக சித்தரிக்கபடும் காட்சியை பார்த்துகொண்டிருக்கின்றோம். புக்கர் பரிசு பெற்ற பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் சொன்னதை போல் இன்று அன்னாவின் குழுவால் முன்வைக்கப்படும் ஜன் லோக்பால் மசோதா நிறைவேறினால் என்ன கிடைக்கும் என யோசித்தால் பின்வருபவை கிடைக்கலாம் a. வந்தே மாதரம் b. பாரத் மாதா கி ஜெய் c. இந்தியா தான் அன்னா, அன்னா தான் இந்தியா d. ஜெய் ஹிந்த்
இன்று ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் அன்னாவின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் படித்த மேல்தட்டு ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்களே. எலக்ட்ரிக் பேன்கள் வீச, தில்லி மாநகராட்சியின் 250 ஊழியர்கள் இரவு பகலாக பணி புரிந்து இடத்தை சமப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களில் ஸ்பான்ஸர்ஷிப்பில் நடைபெறும் உண்ணாவிரதத்தின் மூலம் அன்னாவின் எடை சில கிலோக்கள் குறைந்தது தவிர வேறொன்றும் சாமானியனுக்கு நடக்க போவதாக தெரியவில்லை.
ஏற்கனவே இருக்கும் சட்டங்களே நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் போது ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் மறைந்து விடும் அளவுக்கு ஊழல் எளிதானதல்ல என்று இன்போஸிஸின் முன்னாள் தலைவர் நந்தன் நிலேகினியே சொல்வதை கவனிக்க வேண்டியுள்ளது. உண்மையிலேயே ஊழலை ஒழிப்பது தான் அன்னாவின் பணி என்றால் இவரின் அணியின் உள்ள சந்தோஷ் ஹெக்டேவை தலைவராக கொண்ட லோக் ஆயுக்தா மூலம் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ரெட்டி சகோதரர்களைஉள்ளடக்கிய பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்காமல் காங்கிரஸை மட்டும் எதிர்ப்பதன் மர்மம் புரியவில்லை. தலைவரே சூட்கேஸில் பணம் வாங்குவதில் தொடங்கி சவப்பெட்டி வரை ஊழல் நடத்திய பரிசுத்த பா.ஜ.கவும் இவரின் போராட்டத்தை வெற்றி பெற வைக்க மெனக்கெடுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இவரின் போராட்டம் ஊழல் எதிர்ப்பா அல்லது வெறும் காங்கிரஸ் எதிர்ப்பா என்று?
அன்னாவை ஆதரிப்பதாக சொல்லும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூட அவரின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்பதில்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் சந்தோஷ் ஹெக்டே அறிக்கையால் ஊழல் புரிந்ததாக குற்றம் சுமத்தப் பட்டு பதவி பறிக்கப் பட்ட எடியூரப்பா அமைச்சரவையில் பதவி வகித்த கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீ ராமுலு ஆகியோர் மீண்டும் அமைச்சர் பதவி கேட்டு பாஜக வை மிரட்டி வரும் நிலையில் வேறு யாருக்கும் அவர்கள் முன்னர் வகித்து வந்த இலாகாவை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வரும் பாஜக மறு பக்கம் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் வேண்டும் என அண்ணா ஹசாறேவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலே. மேலும் நல்லாட்சி நடத்துகிறோம் என முழங்கும் மோடியின் குஜராத்தில் கூட இன்னும் லோக் ஆயுக்தா அமைப்பு தோற்றுவிக்கப் பட வில்லை என்பதை விட வேறென்ன வேண்டும் இவர்களின் நேர்மைக்கு.


உடல்தகுதி அடிப்படையில் தகுதி பெறாமலேயே அவசர தேவையிருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்த அன்னா ஹசாரே தன் கிராமத்தை சீர்படுத்தியது குறித்து இந்திய மீடியாவே புகழ்ந்து தள்ளுகிறது. ஆனால் அவரின் கிராமத்தில் இன்னும் தீண்டாமை கொடுமைகள் தொடர்வது குறித்தும் தலித்துகள் ஜாதி பெயர் கொண்டே அழைக்கபடுவது குறித்து ஊடகங்கள் மறைப்பது நெருடலை ஏற்படுத்துகிறது. இன்னும் அம்மாதிரி கிராமத்தில் உள்ள பள்ளிகூடங்களில் விவேகானந்தர், சத்ரபதி சிவாஜி போன்றவர்களே சுதந்திர வீரர்களாக கற்பிக்கப்படுதலையும் அங்குள்ள சினிமா தியேட்டரில் கூட இந்து கடவுள்களின் மேன்மைகளை சொல்லும் படங்கள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்படுவதையும் வசதியாய் மறைத்து விடுகின்றன.
தன்னை காந்தியவாதியாக காட்டி கொள்ளும் அன்னா ஹசாரே காந்திய கோட்பாடுகளுக்கு எதிராக ஊழல் செய்பவர்களுக்கு உடனே மரண தண்டனை, மக்கள் தொகையை குறைக்க கட்டாய குடும்ப கட்டுப்பாடு என சர்வதிகார தோரணையில் செயல்படுதலை பார்க்க முடிகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் இருக்கும் போது வீதியில் போராட்டம் நடத்துவதன் மூலம் தான் விரும்பும் சட்டத்தை கொண்டு வருவது அதே எதேச்சதிகார மனப்பான்மையை காட்டுகிறது. அதனால் தான் எமர்ஜென்ஸியின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த பரூவாவால் முன் வைக்கப்பட்ட “இந்தியாவே இந்திரா, இந்திராவே இந்தியா” எனும் முழக்கத்தை போன்று முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண் பேடி “அன்னா தான் இந்தியா, இந்தியாதான் அன்னா” என்று முழங்கியது கவனிக்கப்பட வேண்டியதாகும். தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஷா அன்னா ஹசாராவின் போராட்ட நடைமுறைகள் எமர்ஜென்ஸியை நினைவுபடுத்துவதாகவும் என்னை பின்பற்றியே ஆகவேண்டும் என்ற சர்வதிகார தன்மை கொண்டதாகவும் உள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
தனக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் அதை நிறைவேற்ற அழுதாவது காரியம் சாதிக்கும் குழந்தையை போல் உண்ணாவிரதத்தை ஒரு பிளாக்மெயில் ஆயுதமாகவே அன்னாபயன்படுத்துவதாக தெரிகிறது. இப்போது மக்கள் ஆதரவு இருப்பதால் ஜெயிலை விட்டு வர மறுத்த அன்னா ஏப்ரல் 1998ல் மும்பை காவல்துறையால் கைது செய்யப்பட்ட போது 5000 ரூபாய் ஜாமீன் கட்டி வெளி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கோரிக்கையின் பேரில் 2003ல் அமைக்கப்பட்ட பி.பி. சாவந்த் கமிஷன் அன்னாவின் டிரஸ்டுகளை பற்றியும் புகார்களைகூறியது. அன்னா ஹசாரேவின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவரின் டிரஸ்டான ஹிந்து சுவராஜ் டிரஸ்ட் 2,20,000 ரூபாய் செலவு செய்தது சட்டத்துக்கு புறம்பானது என்றும் ஜில்லாபரிஷத்துக்கு தன் டிரஸ்ட் சார்பாக 11 ஏக்கர் நிலம் ஒதுக்கியது விதிமுறைகளுக்கு மாற்றமானது என்றும் பிரஷ்டிச்சர் விரோதி ஜனன்தோலன் டிரஸ்டின் கணக்குகள் ஒழுங்காகபராமரிக்கப்படவில்லை என்றும் மதசார்பற்ற கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை கொண்டு சாந்த் யதவ்பாபா ஷிக்ஷன் பிராசரக் மண்டல் டிரஸ்டின் மூலம் கோவிலை புதுப்பித்ததுபோன்றவை தவறென்றும் அவ்வறிக்கையில் புகார் கூறப்பட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துக்கு காலக்கெடு விதிப்பது ஒரு ஆபத்தான முன்மாதிரியை ஏற்படுத்தும் என்று பல்வேறு மனித உரிமை குழுக்கள் குறை கூறியுள்ளன. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், அப்சல் குரு போன்றவர்களை தூக்கிலிடக் கூடாது என்று கூக்குரல் வலுக்கும் இந்நேரத்தில் தூக்கிலிடுவதை வலியுறுத்தும் அன்னாஹசாரேவின் போராட்டம் சர்ச்சைகளை வலுப்படுத்துகிறது.


பாபா ராம்தேவின் போராட்டத்தை மத்திய அரசு அடக்க முயன்ற போது போராட்டக்காரர்களின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை ஜனநாயகத்தை நசுக்குவதாகும் என்றும் மனித குலத்தின்மீதான வடு என்று ஆவேசப்பட்ட அன்னா நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றவாளியாக்குவதாக குறிப்பிட்டார். ஏன் அன்னா இதே ஆவேசத்தை மஹாராஷ்டிராவில் விவசாயிகள்தற்கொலை செய்து கொண்ட போதோ அல்லது சிவசேனை கும்பல்களால் பிற மாநிலத்தவர்கள் அடித்து விரட்டப்பட்ட போதோ காட்டவில்லை. குஜராத்தின் முதல்வர் மோடியை புகழ்ந்தவர் 3000 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட போது ஏன் ஆவேசப்படவில்லை, மோடியை குற்றவாளியாக்கவில்லை என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அன்னாவின் போரட்டத்தை பிரபலப்படுத்துவதில் மேல்தட்டு ஊடகங்களின் பங்கு முக்கியமானதாகும். மணிப்பூரில் இந்திய ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக பத்து வருடங்களாகபோராடும் ஷர்மிளாவின் போராட்டமோ கூடங்குளத்தில் அணு உலைகளுக்கு எதிராக போராடும் கிராம மக்களின் போராட்டமோ தங்கள் சொந்த இடங்களில் இருந்து தாரளமயமாக்கல்பெயரால் வெளியேற்றப்படுவதற்கு எதிராக ஒரிஸாவில் போஸ்காவுக்கு எதிராக போராடும் போராட்டங்களோ போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தும் போராட்டங்களோ ஊடகங்களின் கண்களில் படுவதில்லை.
மத்திய அமைச்சரவையில் இவர் தான் அமைச்சராக வர வேண்டும் என முடிவு செய்யும் அளவுக்கு சர்வ வல்லமை பெற்ற ஊடகங்களும் உண்டு என்பதை இந்தியாவிற்கு வெளிப் படுத்தியவர் நீரா ராடியா. இந்தியாவில் லாரிகள் வேலை நிறுத்தம் என எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அன்னா ஹசாரேவின் உண்ணா விரதத்தை மட்டும் நேரடி ஒளிபரப்பு என மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகங்களின் நேர்மையும் உரசிப் பார்க்க வேண்டியுள்ளது. 2G ஊழல் வழக்கில் பல்வேறு டாடா, அம்பானி போன்ற பெரிய கார்பரேட் கம்பெனிகளும் கோடி கொடியாக முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கும் அவர்களைப் பற்றியெல்லாம் ஒரு வார்த்தை எழுதி இருக்குமா இந்த ஊடகங்கள். இன்று ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாம்.
இந்தியாவின் அனைத்து பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக அன்னா முன்னிலைப்படுத்தப்படுகிறார். இன்னும் தெளிவாகசொல்ல வேண்டுமென்றால் அன்னாவின் போராட்டங்களுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம், போராட்ட ஒழுங்குமுறைகள், வெறியேற்றப்பட்ட தேசபக்தி போன்றவை இட ஒதுக்கீட்டுக்குஎதிரான போராட்டம், உலக கோப்பை வெற்றி ஊர்வலம், அணு சக்தி வெற்றி கொண்டாட்டம் போன்றவைக்கு ஒத்திருப்பதை தெளிவாக கண்டு கொள்ள முடியும்.
அன்னாவின் கனவு கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 25 வருடங்களாக தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது, காந்தி கனவு கண்டது போன்று அவரவர் ஜாதிக்கு ஏற்ப ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வெட்டியான், துப்புரவு தொழிலாளி, ஒரு நாவிதன் என்று தன்னிறைவு கொண்ட கிராமமாக அன்னாவின் கனவு கிராமம் இருப்பது, சமநிலையை நோக்கிய இளைஞர்கள்எனும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்தோடு அன்னாவின் தளபதிகள் இணைந்திருப்பது, கோகா கோலா, லெஹ்மன் பிரதர்ஸ் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களில் நிதியுதவி பெறும் அன்னாவின் தளபதிகளின் என்.ஜி.ஓக்கள் போன்றவை அன்னாவின் போராட்டத்தின் நோக்கம் குறித்து சந்தேகம் கொள்ள வைக்கிறது. போர்ட் பவுண்டேசனிடம் இருந்து கடந்த 3 வருடமாக கபீர் என்ற அமைப்புக்காக அதனை நடத்தி வரும் அர்விந்த் கேஜ்ரிவால் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்று இருக்கும் நிலையில் நாளை போர்ட் பவுண்டேசன் மீது முறைகேடு புகார் வரும் நிலையில் இவர்களின் நடவடிக்கை எவ்வாறு நேர்மையாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?
பிரதமரும் நீதித் துறையும் தங்களின் ஜன் லோக்பாலுக்குள் வர வேண்டும் என அடம் பிடிக்கும் அன்னா ஹசாரே குழுவினர் தாங்கள் பொறுப்பு வகிக்கும் தொண்டு அமைப்புகள் மட்டும் ஜன் லோக்பால் வரம்புக்குள் வரக் கூடாது என்று சொல்வதில் என்ன நேர்மை இருக்கிறது. சீசரின் மனைவி சந்தேகத்து அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். இவர்கள் என்ன ஊழலே புரிய மாட்டார்கள் என இறைவனிடம் வரம் வாங்கி வந்தவர்களா?
அம்பேத்கர் குறிப்பிட்டதை போன்று இந்திய ஜனநாயகம் தனிமனித வழிபாடால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் என்று சொன்னதை போல் சாதாரண யோகா வாத்தியாரால் சில ஆண்டுகளில் தன் மாணவர்களை சீடர்களாக்கி அவர்களை தொண்டர்களாக்கி பின் அரசுக்கே சவால் விடும் அளவுக்கு உயர முடிகிறது. அப்படி அன்னாவை பின்பற்றும் ஓர் ஆட்டு மந்தை சமூகத்தைசமைக்கும் முயற்சியில் இந்திய ஊடகங்கள் தீவிரமாக குதித்திருக்கின்றன. தலித் சமூக ஆர்வலர் காஞ்சா இலய்யா குறிப்பிட்டதை போல் “அன்னாவின் போராட்டம் சமூக நீதிக்கெதிரானமனுதர்ம இயக்கம். பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினருக்கு இதில் எவ்வித பங்குமில்லை” என்று குறிப்பிட்டதை போல் ஒரு சாராரின் விருப்பத்தை பொது புத்தியில் புகுத்தும் முயற்சியாகவே அன்னாவின் போராட்டம் தெரிகிறது.
அன்னாவின் போராட்டத்தை கண்மூடித்தனமாய் ஆதரிப்போர், அதையே தேச பக்திக்கான இலக்கணமாய் சொல்வோர் ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும். ஆயுத புரட்சியின் மூலம் கடைநிலை மக்களை ஒன்று திரட்டி போராடும் மாவாயிஸ்டுகளின் நோக்கம் இந்திய ஜனநாயகத்தை தூக்கி எறிவது எனில் மேல் தட்டு மக்களை, அறிவு ஜீவிகளை, ஊடகங்களை வைத்துநடத்தப்படும் அன்னாவின் இயக்கம் வெற்றி பெற்றால் அதே விளைவு தான் ஏற்படும். ஆம் எனவே இந்திய ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமெனில் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்பது மாத்திரமல்ல சட்டத்தை தன் கையில் தனிநபர்கள் எடுப்பதும் அனுமதிக்கப்பட கூடிய ஒன்றல்ல.