Saturday, October 2, 2010

அயோக்கியத் தீர்ப்பு

அயோக்கியத் தீர்ப்பு

குதிரை ஒன்று குட்டிப் போட்டது. குதிரையைக் கட்டியிருந்த செக்குக்குச்
சொந்தக்காரன் அந்தக் குட்டியை எடுத்துக்கொண்டு, “இது தனது குட்டி” என
சொந்தம் கொண்டாடினான்.

குதிரைக்காரன் வழக்கு தொடுத்தான்.

மத்தியஸ்தர் செக்குக்காரனை அழைத்து விசாரித்தார்.

“எனது செக்கு போட்ட குட்டி இது” என்றான் அவன்.

“செக்கு எப்படி குட்டி போடும்” என்றார் மத்தியஸ்தர்.

“போடும். என்னிடம் சாட்சி இருக்கு!” என்றான் செக்குக்காரன்.

“சிக்கலான விவகாரம். சாட்சி இல்லாம தீர்ப்பு சொல்ல முடியாது. சீக்கிரம்
போய் அவுங்க அவுங்க சாட்சியை கூட்டிட்டு வாங்க” என்றார் மத்தியஸ்தர்.

மாலையில் பஞ்சாயத்து கூடியது. செக்குக்காரன் அவனுடைய செல்வாக்கினால் பல
சாட்சிகளோடு  வந்தான். அவர்கள் அடித்துச் சொன்னார்கள். “செக்குதான்
குட்டி போட்டது. நான் ரெண்டு கண்ணால பார்த்தேன்” என்றார்கள்.
குதிரைக்காரனுக்கு ஆதரவாக ஒன்றிரண்டே பேரே நியாயம் பேசினார்கள்.

அதிகம் பேர் சொன்னதை வைத்து மத்தியஸ்தம் செய்தவரும் செக்குக்காரனுக்கு
ஆதரவாகவே தீர்ப்பு சொன்னார்.

மரத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்த குருவி ஒன்று “மத்தியஸ்தரே
இப்படியா தீர்ப்பு சொல்வது” எனக் கேட்டதாம்.

“பின் எப்படிச் சொல்வதாம்” என்று கோபமாய்க் கேட்டார் மத்தியஸ்தர்.

“குதிரைக்குட்டிக்கு தாய்ப்பால் செக்கு வந்து கொடுக்குமா? குதிரை வந்து
கொடுக்குமா? யோசியுங்கள் ஐயா, யோசியுங்கள். உண்மை என ஒன்று எப்போதும்
இருக்கிறது” என பறந்து சென்றதாம் குருவி.

நன்றி:

http://mathavaraj.blogspot.com/2010/09/blog-post_30.html

No comments:

Post a Comment