Sunday, November 29, 2015

முத்துப்பேட்டை கொலை வழக்கில் பாஜக மாவட்ட செயலாளர் கைது.

முத்துப்பேட்டை மதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாவட்ட செயலாளர் உட்பட 2 பேர் கைது.



முத்துப்பேட்டை அதிமுக பிரமுகரின் அண்ணன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக மாவட்ட செயலாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் வடகாட்டை சேர்ந்தவர் மதன் (44). அரசு ஒப்பந்த கான்ட்ராக்டர். இவரது தம்பி ஜெகன், அதிமுக ஒன்றிய கவுன்சிலராகவும், தொகுதி அதிமுக இணை செயலாளராகவும் உள்ளார். கடந்த 25ம் தேதி இரவு மதன், முத்துப்பேட்டைக்கு வந்து விட்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.
சித்தேரி குளத்தை தாண்டி புனித அந்தோணியார் கோயில் அருகில் சென்ற போது காரில் வந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. தகவல் அறிந்த தஞ்சை டிஐஜி செந்தில் குமார், நாகை எஸ்பி அபிநவ் குமார், ஏடிஎஸ்பிகள் தஞ்சை ராஜேந்திரன், திருவாரூர் முத்தரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
இதில் கடந்த 3 மாதங்களுக்கு முன் கோவிலூர் மணல் மேட்டை சேர்ந்த வீரபாண்டியன் (35) என்பவர், குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த போது வெட்டி கொல்லப்பட்டார். இவ்வழக்கில் மதன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். வீரபாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக மதன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து முத்துப்பேட்டை போலீசில் மதனின் தம்பி ஜெகன் புகார் செய்தார். அதில் கோவிலூரை சேர்ந்த சரவணன், வினோத், இளங்கோவன், மந்திரமூர்த்தி, அய்யப்பன், செல்வராஜ், உப்பூரை சேர்ந்த சுதாகர், ஆலங்காட்டை சேர்ந்த மனோகர், மருதங்காவெளியை சேர்ந்த மாரிமுத்து ஆகியோருக்கு கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாரிமுத்து (30), செல்வராஜ் (44) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரதேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மாரி முத்து, பாஜக மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும் முத்துப்பேட்டை பேரூராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். முத்துப்பேட்டை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி -
முத்துபேட்டை பிபிசி 

No comments:

Post a Comment