Monday, April 18, 2011

அன்னா ஹசாரே: வெளியே வரும் பூனை!



மந்திரம் போலிருக்கிறது. இரண்டு வாரம் முன்னால் வரை,  இந்த அன்னா ஹசாரே யார் என்று எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும். இன்று  இந்தியாவின்  நாயகர் போல முன்னிற்கிறார்.  தேசத்தின் ஊழல் கறையை அகற்ற வந்த உத்தமர் அவர்  என்று முழக்கங்கள் கேட்கின்றன. தொலைக்காட்சி, பத்திரிகைகள், ஃபேஸ்புக், டுவிட்டர் என எங்கெங்கு காணினும் ‘அன்னா ஹசாரே;, ‘அன்னா ஹசாரே’.  திடுமென இப்படியொருவர் எங்கிருந்து குதித்து வந்தார் என்று யாரும் கேட்கவில்லை. மக்கள் அனைவரும் அவர் பின்னால் திரண்டு நிற்பதாய் என்.டி.டி.வி, டைம்ஸ் நௌவும் காட்சிகளை ஒளிபரப்புகின்றன. இவர்தான் நம் நம்பிக்கை என கைகாட்டுகின்றன.  சாத்தூரின் ஒருச் சின்ன டீக்கடையில் பேப்பர் படிக்கும் நான்கைந்து பேரின் விடிகாலைப் பேச்சில் இப்போது அன்னா ஹசாரேவும் இருக்கிறார்.

எல்லோரும் பேசிக்கொண்டு இருந்த விஷயத்தைத்தான் அவரும் பேசினார். “ஊழலை ஒழிக்க முடியும்” என பேசியபோதெல்லாம்  ஏளனமாய் சிரித்த அலுவலக நண்பன் இப்போது அன்னா ஹசாரேவின் விசிறி. ஊழலை அதிகாரபூர்வமாக்கிவிடலாம் என சுப்ரீம் கோர்ட்டே வேதனைப் பட்டபோது, “ஆமாம், வேறு என்ன செய்ய முடியும்?” என அங்கலாய்த்தவர்கள் இப்போது அன்னா ஹசாரேவின் பேரை உச்சரித்தபடி  ஊர் ஊருக்குக் கூட்டம் நடத்துகிறார்கள். மக்களின் மனமாற்றங்கள்  இங்கு ‘உடனடி’யாக நடந்துவிடுகின்றன.


நீண்ட காலமாக, இடதுசாரி கட்சிகள் ஊழல் தடுப்புச் சட்டமான லோக்பாலைக்  கொண்டு வர முயற்சித்த போதெல்லாம் உலக அழகிப் போட்டிகளையும்,  சினிமா  நடிக நடிகையரையும், பங்குச் சந்தைக் கோடுகளையும் வெட்டி வெட்டிக் காட்டிக்கொண்டிருந்தன தொலைக்காட்சிகள்.  தேவகவுடா அரசை ஆதரிக்கும்போதும், பிறகு ஐக்கிய முன்னணி அரசில் காங்கிரஸை ஆதரிக்கும் நிலை வந்தபோதும் இடதுசாரிக் கட்சிகள் ‘லோக்பால் மசோதா’நிறைவேற்றப்பட வேண்டுமென நிபந்தனைகள் விதிக்கத்தான் செய்தன.  ஊழலில் திளைக்கும்  காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளே ஆளும்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்துகொண்டு அந்த மசோதாவைப் பற்றி கவனமாக பேசாமல் இருந்தன.  இதெல்லாம் ஊடகங்களுக்கு தேவையில்லாதவை. அன்னா ஹசாரே என்னும் தேவதூதர் வந்து ஊழல் பற்றிப் பேச வேண்டும். அதற்காக காத்திருந்தார்கள் போலும்.

ஊழல் தடுப்புச் சட்டமான லோக்பால் மசோதா வரைவை தயாரிக்கும்  கமிட்டியில் சமூக ஆர்வலர்களும் இடம்பெற வேண்டும் என அன்னா ஹசாரே கோரிக்கை வைத்திருந்திருக்கிறார். மத்திய அரசு அதனை நிராகரித்து, ஒரு குழுவை அமைக்க முன்வந்ததும், ஹசாரே காலவரையற்ற  தன் உண்ணாவிரதத்தை ஒருநாள் துவக்கினார். தொலைக்காட்சிகள் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தன.  அவ்வளவுதான் சடசடவென எங்கும் தீப்பற்றிக்கொண்டது. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வேண்டும்.  அது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி தொட்டு நின்ற பிறகு  வந்தது. அன்னா ஹசாரேவும் வந்துவிட்டார். இனி ஊழலை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்பதாய்  வரிந்து கட்டி மெழுகுவர்த்தி ஏற்றினார்கள்.

இந்த அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ வீரராம். அங்கிருக்கும்போதுதான் அவர் மகாத்மா காந்தி,  வினோபா பாவே, விவேகானந்தரையெல்லாம் படித்தாராம்! அவரது கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை ஒழித்தாரம். தீண்டாமையை இல்லாமல் ஆக்கினாராம்.  பசுமைப் புரட்சி செய்தாராம். இப்படி அவரது புராணங்கள் நீள்கின்றன. இந்த தேசத்தில் மதக் கலவரங்கள் தாண்டவமாடிய போது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது, அந்நிய நிறுவனங்கள் சாரி சாரியாய் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிற போதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம். அப்போதெல்லாம் மௌனவிரதம் கடைப்பிடித்த இந்த மகான் திடுமென சிலிர்த்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம்  இருக்க ஆரம்பித்தார்.

நடுத்தர வர்க்கம் அளவுக்கு அதிகமாகவே உணர்ச்சி வசப்படும். பஸ்ஸில் சக இந்தியனை நெட்டித் தள்ளி இடம்பிடிக்கும் இந்தக் கூட்டம், கிரிக்கெட்டில் தேசபக்தியை ஆரவாரமாய்க் கொண்டாடும்.  அருகில் இருப்பவனுக்காக அழவோ, சிரிக்கவோ முடியாத இந்தக் கூட்டம் எங்கோ நடக்கும் போட்டியை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பார்க்கும். அது அட்சரசுத்தமாக அன்னா ஹசாரே விஷயத்திலும் நடந்தது. தேசபக்தி கொட்டோ கொட்டுவென்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. இந்த லோக்பால் மசோதா என்ன, இதன் எல்லைகள் என்ன, இதன் மூலம் எது ,சாத்தியம் என்ன  என்பதைக் கடந்தகாலம், நிகழ்கால அனுபவங்களிலிருந்து பார்க்காமல், வழக்கம்போல் அந்தரத்தில்  வைத்தே பார்க்கத் தலைப்படுகிறார்கள்.

ஊழல், இந்த தேசத்தின் பெரும் நோய். சகல இடங்களிலும், மட்டங்களிலும்  ஊடுருவி நிற்கிறது. எதைத் தொட்டாலும் அங்கு அழுகிப்போன தார்மீக நெறிகளின் நாற்றமடிக்கிறது. மூக்கைப் பொத்திக் கொண்டு வெறுப்புற்றும், சகித்துக்கொண்டும் இருந்த மக்களின்  உணர்வுகளுக்கு அன்னா ஹசாரே  உருவம் கொடுக்கத் தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.  ஊழல் சகதியின் ஊற்றுக்கண்ணை பார்க்காமல் வெற்றிடத்தில் அவரது பார்வை துழாவும்போதுதான் சந்தேகம் வருகிறது. சக மனிதர்கள் ஒருவருக்கொருவரைப் போட்டியாக  பாவிக்கச் செய்து, களத்தில் நிறுத்தி வைத்திருக்கிற இந்த முதலாளித்துவ அமைப்போடு ஒட்டிப் பிறந்ததுதான் ஊழல். தனியார் மயமும், தாராள மயமும் வழங்கிய கொடை அது.  இது விதி.  இந்த வேர்களை அண்டாமல், அன்னா ஹசாரேவும்  கிளைகளை வெட்ட வாளைச் சுழற்றுகிறார். லோக்பால் மசோதாதான் ஊழல் அரக்கனின் உயிரையெடுக்கும் ஆயுதம் என்பதாகச் சித்திரம் தீட்டப்படுகின்றன.

இப்படி ஒரு சட்டம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.இந்த மசோதா சரியாக நிறைவேற்றப்பட்டால்,  ஊழலையே தோலாகவும், ஆடையாகவும் கொண்டிருக்கிற ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தக் கூடும். ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும் கூடும். ஆனால், மசோதாவை வரைவு செய்கிற குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? சமூக ஆர்வலர்கள் ஐவரோடு, தன் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஊழல் செய்து வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஊழல் பேர்வழி பி.ஜே.தாமஸை முன்மொழிந்த வீரப்ப மொய்லி, ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று சத்தியம் செய்த கபில் சிபல் என்று அணி திரண்டு நிற்கிறார்கள் இன்னொரு புறம். இவர்கள்தாம் இந்தச் சட்டத்தை நாளைக்கு  அமல்படுத்தப் போகிறவர்கள். சிரிப்பாக இல்லை?

இந்த தேசத்தில் திண்டாமைக்கு எதிரான வலுவானச் சட்டங்கள் இருக்கின்றன. தீண்டாமை ஒழிந்தாவிட்டது. பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான எவ்வளவோச் சட்டங்கள் இருக்கின்றன. பெண்கள் நலமாகவா இருக்கிறார்கள்? சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடு அமல்படுத்துகிற அரசு வேண்டும். அது எப்போது சாத்தியம் அன்னா ஹசாரே? இதோ, மதுரையில்  அதிகார மையத்திற்கும், ரவுடித்தனங்களுக்கும் எதிராக சகாயம் என்னும் ஆட்சியாளர் சட்டத்தை அமல்படுத்த பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார். அவரது பணியைச் செய்யவிடாமல் அரசு கெடுபிடிகள் செய்கிறது. இந்த இடம்தான் முக்கியமானது. உண்மையில், ஆட்சியர் சகாயத்தை இந்தத் தொலைக் காட்சிகள் தூக்கிப் பிடித்திருக்க வேண்டும். மக்கள் அவருக்குப் பின்னால் திரண்டிருக்க வேண்டும். அப்படியா நடந்தது? நிஜமாகவே களத்தில் நின்று அநியாயங்களுக்கு எதிராக போராடுகிறவர்களை ஏன் அடையாளம் காண மறுக்கிறோம்.  ஊழலில் சகலக் கட்சிகளும் மாறி மாறி  அம்பலப்பட்டுக்கொண்டு இருந்த போது இடதுசாரிக் கட்சிகள் மட்டும் நேர்மையாக தலை நிமிர்ந்து  நிற்கின்றன. அவர்கள் ஏன் கொண்டாடப்படுவதில்லை. இதுதான் கேடு. இதுதான் சாபம்.

அன்னா ஹசாரேதான் பூனைகளுக்கு மணி கட்டப் போகிறார் என்கிறார்கள். ஆனால் அவரே இப்போது பூனையாகி இருக்கிறாரே. முதலில் மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரேவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்கும், அவரது வழிமுறைகள் (violence) தான் எனக்கு ஒத்துவராது என தெரிவித்தார். violence இல்லையென்றால் அது காந்தீயம் போலும் அவருக்கு. ‘மண்ணின் மக்கள்’ என்ற கோஷத்தோடு தமிழ், பீகாரி,  இந்தி பேசும் பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடும் அவரது எந்தக் கொள்கைகள் அன்னா ஹசாரேவுக்குப் பிடித்துத் தொலைத்தனவோ? இனத் துவேஷம், மொழித் துவேஷம் கொண்டு அரசியல் நடத்தும் ராஜ்தாக்கரேவிடம் என்ன காந்தீயத்தை  கண்டாரோ?

இரண்டாவது, முஸ்லீம் மக்கள் நரவேட்டையாடப்பட்ட குஜாரத்தின் முதல்வர் நரேந்திர மோடிதான் இந்தியத் தலைவர்களில் அவருக்குப் பிடித்தமானவராம்.  அன்னா ஹசாரேதான் இப்படி வாய்க் கூசாமல் சொல்லியிருக்கிறார். மதசகிப்புத்தன்மைக்காக குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த மகாத்மா காந்தி எங்கே, இந்த அன்னா ஹசாரே எங்கே? இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள்? 

நன்றி:www.mathavaraj.com 

No comments:

Post a Comment