Thursday, November 26, 2015

முத்துப்பேட்டை அருகே பயங்கரம்


முத்துப்பேட்டை அருகே உள்ள வடகாடு கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். அ.தி.மு.க. பிரமுகர். திருத்துறைப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. இணை செயலாளராக இருந்து வருகிறார். மேலும் முத்துப்பேட்டை ஒன்றிய  கவுன்சிலராகவும்  உள்ளார். 



இவரது அண்ணன் மதன்(45) காண்டிராக்டர். இவர் நேற்று இரவு முத்துப்பேட்டை  பழைய பஸ்  நிலையத்தில்  இருந்து மோட்டார் சைக்கிளில் வடகாடு  கோவிலுருக்கு  சென்று  கொண்டிருந்தார். அங்குள்ள மாதா கோவில் பகுதியில் சென்ற போது 10 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அக்கும்பல் தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்களால் மதனை தாக்கியது.

அக்கும்பலில்  இருந்து தப்பிக்க மதன் மாதா கோவிலுக்குள் ஓடினார். அவரை அக்கும்பல் விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவரது  வலது கை  மணிக்கட்டு, இடது கால் ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது.


 மேலும் ஆத்திரம் தீராமல் மதனின் தலையில் சரமாரி வெட்டி சிதைத்தது.
 இதில் அவர்  சம்பவ  இடத்திலே  ரத்த  வெள்ளத்தில் பிணமானார்.

 பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இது குறித்து முத்துப்பேட்டை  போலீசில்  மதன் தம்பி  ஜெகன்  புகார்  செய்தார்.

தஞ்சை சரக டி.ஐ.ஜி. செந்தில் குமார், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (திருவாரூர் பொறுப்பு)  அபினவ்  குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  பார்வையிட்டனர். மதன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக மணல் மேடு ராஜேஷ், சரவணன், வினோத், இளங்கோ, மந்திர மூர்த்தி, அய்யப்பன், உப்பூர் சுதாகர், ஆலங்காடு மனோகர், செல்வராஜ், மாரிமுத்து மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முத்துப்பேட்டையில்  கடந்த  3 மாதத்திற்கு முன் வீரபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டார்.  இக்கொலை  தொடர்பாக  மதன்  மீது  வழக்கு  பதிவு செய்யப்பட்டது. எனவே பழிக்குப் பழியாக இக்கொலை நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அ.தி.மு.க. பிரமுகர் அண்ணன் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து முத்துப்பேட்டையில்   பதட்டம்  நிலவி  வருகிறது. தஞ்சாவூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், திருவாரூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கொலை செய்யப்பட்ட மதனுக்கு செல்வி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

No comments:

Post a Comment