புதுதில்லி, டிச.13: இந்தியாவில் 54 சதவீதம் பேர் கடந்த ஓராண்டில் தங்களது வேலைகளை முடிப்பதற்கு லஞ்சம் கொடுத்ததாக "டிரான்ஸபரன்ஸி இன்டர்நேஷனல்" என்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
உலக நாடுகளில் ஊழல் தொடர்பான ஆய்வை இந்த அமைப்பு நடத்தியது. கல்வி, நீதி, மருத்துவம், காவல், பத்திரப் பதிவு உள்ளிட்ட 9 துறைகளில் கடந்த 12 மாதங்களில் லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்தீர்களா என்ற கேள்வி மக்களிடம் கேட்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு மக்கள் தந்த பதில்களின் அடிப்படையில் ஊழல் மலிந்த நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு தினமான கடந்த 9-ம் தேதி இந்தப் பட்டியலைக் கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
86 நாடுகளைக் கொண்ட பட்டியலில் லஞ்சம் கொடுத்ததாக இந்தியாவில் 54 சதவீதம் பேர் பதிலளித்திருந்தனர். இராக்கில் 56 % பேரும், ஆப்கனில் 65% பேரும் லஞ்சம் கொடுத்திருக்கின்றனர். கம்போடியாவில் அதிகபட்சமாக 84 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்திருப்பதாக இந்த ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சிகளே அதிக ஊழல் செய்வதாகவும் கடந்த 3 ஆண்டுகளில் ஊழல் அதிகரித்திருப்பதாகவும் 74 சதவீதம் இந்தியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
உலக அளவில் இந்த ஆய்வுக்காக 91 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் ஆயிரம் பேர் இந்தியர்கள்.\

No comments:
Post a Comment