Tuesday, September 25, 2012

கலக்கத்தில் பா.ஜ.க:1993-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலக்கரி சுரங்க உரிமம் குறித்து விசாரணைக்கு உத்தரவு!


புதுடெல்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பாக காங்கிரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தை அமளி துமளியாக்கிய பாரதீய ஜனதா கட்சியின் இரட்டை வேடம் கலைய உள்ளது. 1993-ஆம் ஆண்டு முதல் நிலக்கரி சுரங்கத்திற்கு அளிக்கப்பட்ட உரிமங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பா.ஜ.க கலக்கமடைந்துள்ளது.
நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக மத்திய தலைமை தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அறிக்கை கடந்த மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஏலமுறையில் சுரங்கங்கள் ஒதுக்கப்படாததால் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுக்குறித்து தலைமை ஊழல் தடுப்பு ஆணையர்(சி.வி.சி) சி.பி.ஐக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் 2006-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ விசாரணையை துவக்கியது.


இதுத்தொடர்பாக சி.பி.ஐ 7 வழக்குகளை பதிவுச் செய்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலம் துவங்கி 1993-2004-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தவேண்டும். அவர்கள் பின்பற்றிய முறையிலேயே ஐ.மு அரசும் ஒதுக்கீடு செய்ததா? தனியார் நிறுவனங்கள் எந்த அடிப்படையில் தேர்வுச் செய்யப்பட்டன? என்று 7 எம்.பிக்கள் கேள்வி விடுத்தனர். இதுத்தொடர்பாக அவர்கள் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலுக்கு மனு அளித்தனர். அதனை பரிசீலித்த ஜெய்ஸ்வால், மனுவை தலைமை ஊழல் தடுப்பு ஆணையருக்கு அனுப்பி வைத்தார். சி.பி.ஐ விசாரணையை பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ ஆட்சியில் இருந்து துவங்கும்படி கேட்டுக்கொண்டார்.
“நிலக்கரி சுரங்கங்கள் தேசியமய சட்டம் 1973-ஆம் ஆண்டின் படி, நிலக்கரி, மின்சாரம், இரும்பு, சிமெண்டு ஆகிய துறைகளில் தனியார் நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் 1993-ஆம் ஆண்டு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ ஆட்சி காலம் உள்பட 1993-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 39 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கப்பட்டன. ஆகவே அந்த காலக்கட்டத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளனவா? என்று சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் என்று அமைச்சர் ஜெய்ஸ்வால் பரிந்துரைத்துள்ளார்.
அவரது பரிந்துரையை ஏற்று சி.வி.சி ஆணையர் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் குட்டு வெளியாகிவிடுமோ என்ற அச்சம் பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது. சி.வி.சி ஆணையரின் சி.பி.ஐ விசாரணைக்கான உத்தரவு பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
 0 0 0 New

No comments:

Post a Comment