Wednesday, June 1, 2011

பிரதமரும் 2ஜி விசாரணை வளையத்தில்?

புதுதில்லி, மே 31: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக  முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர்  ஆ. ராசா கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக  திகார் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ஆ. ராசாவின் சார்பாக  தில்லி உயர் நீதிமன்றத்தில் அவரது சார்பாக மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



தில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும்போது, இந்த விவகாரத்தில் தான் அமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு எழுதிய 18 கடிதங்களுடன் தானே வாதாட ராசா திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





இந்த முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது. அடிப்படையில் ராசா ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஜாமீன் மனு  விசாரணைக்கு வரும்போது தனது வாதத்திற்கு ஆதரவாக குறிப்பிட்டுப் பேசவும் சில முக்கிய ஆதாரங்களை அவர் திரட்டி வருகிறார். குறிப்பாக 18 முக்கிய கடிதங்களை வைத்து அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார் என்று தெரியவருகிறது.



இந்த 18 கடிதங்களும் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை வரையிலான காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ராசாவுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களாகும். மேலும் இந்தக் கடிதங்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடமும் ஆ.ராசாவால் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. 2  ஜி அலைகற்றை ஒதுக்கீட்டை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சரவையின் ஒப்புதலின் பேரில்தான் மேற்கொண்டார் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்த 18 கடிதங்களையும் அவர் முக்கிய ஆதாரமாகக் காட்டக்கூடும் என்று தெரிகிறது.



"இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை, அதற்கு உரிய அனுமதியைப் பெற்றிருந்தேன், எனவே நான் நிராபராதி' என்று வாதாட ராசா தீர்மானித்துள்ளார். இவை தவிர  மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோருக்கு தான் எழுதிய கடிதங்களையும் ராசா ஆதாரமாகக் காட்டக் கூடும் என்று தெரிகிறது. இது போன்ற வாதங்களை முன் வைக்கும்போது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படலாம்.





கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்ட ராசா 4 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். இந்த விசாரணைக்காக பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு  நீதிமன்றத்துக்கு நாள்தோறும் அழைத்து வரப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந் நிலையில் இந்த விவகாரத்தில்  ஜூன் மாதத்தின் இரண்டாவது  அல்லது  மூன்றாவது வாரத்தில் சிபிஐ தனது 3வது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்றாவது குற்றப் பத்திரிகையில் யார், யாருடைய பெயர்கள் இடம் பெறுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாமீன் மனு மீதான ஆ.ராசாவின் வாதம், பிரதமர் மன்மோகன் சிங்கையும், அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தையும் 2ஜி முறைகேடுகள் பற்றிய சிபிஐ விசாரணைக்கு உள்படுத்தக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே காணப்படுகிறது.

No comments:

Post a Comment