Friday, December 11, 2015

முஸ்லீம்களுக்கு வீடு என்ன…. உயிரையே கொடுப்போம் !


சென்னை தாம்பரம் பகுதியில் படகில் சென்று மக்களைக் காப்பாற்றும் த.மு.மு.க தொண்டர்கள்.
சென்னை தாம்பரம் பகுதியில் படகில் சென்று மக்களைக் காப்பாற்றும் த.மு.மு.க தொண்டர்கள்.
வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் முஸ்லீம் அமைப்புகளின் பங்களிப்பு குறித்து மக்கள் மனதார பாராட்டியிருந்ததை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். கழுத்தளவு தண்ணீரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கியதாகட்டும், சாக்கடைகளை சுத்தம் செய்ததாகட்டும் அனைத்தும் அர்ப்பணிப்போடு நடந்தன. பணியில் ஈடுபட்ட முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள், அந்த முனைப்பை இயக்கியது எது? அவர்களை சந்தித்து உரையாடினோம்.
முஸ்லீம் அமைப்புக்கள், இஸ்லாம் மதம் குறித்த விமரிசனங்கள் வினவு தளத்தில் நிறைய இருக்கின்றன. இந்துமதவெறியர் குறித்து எமது விமரிசனங்களை தேடி படிக்கும் பல முஸ்லீம் நண்பர்கள் முதலில் இதை படிக்கும் போது அதிரச்சியடைகிறார்கள். பின்னர் காலக்கிரமத்தில் அந்த விமரிசனங்களின் அடிப்படையை, நேர்மையை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்கிறார்கள்.
ஒரு மனிதனை மதம் சார்ந்து திரட்டக் கூடாது, அப்படி திரட்டுவது ஆளும் வர்க்கத்திற்கே இறுதியில் உதவுவதாய் இருக்கும் என்பதற்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. மத நம்பிக்கையோ, மத சடங்குகளோ, இறை வழிபாடோ அனைத்தும் ஒரு தனிநபரின் உரிமை மட்டுமே. நமது அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்காக எந்த மதத்திலும் தீர்வோ, வழியோ கிடையாது. அதனால்தான் அனைத்து மதங்கள், சாதிகளைச் சார்ந்த உழைக்கும் மக்கள் வர்க்கமென்ற முறையில் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்துகிறோம்.
சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளில் இதுதான் நடந்திருக்கிறது. தாங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்காகத்தான் நிவாரணப் பணிகளை செய்தோம் என்று சில முஸ்லீம்கள் கூறினாலும் அவர்களை அப்படி சேவை செய்ய வைத்தது, மதமல்ல. கஷ்டப்படும் மக்களை நேரில் பார்த்ததாலும், பிறகு மற்ற பிரிவு மக்கள் பாராட்டுவதால் வரும் உற்சாகமுமே முஸ்லீம் அமைப்பு தொண்டர்களை இயங்க வைத்தன என்பது எமது கருத்து.
tntj-releif-work
நிவாரணப் பணியில் ஈடுபடும் டி.என்.டி.ஜே தொண்டர்கள்
மேலும் மதம் சார்ந்து மட்டும் அதிகம் போராடும் அந்த இயக்கங்கள் முதன் முறையாக ஒரு பொதுப் பிரச்சினைக்காக அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பெருமளவில் அணிதிரண்டு வேலை செய்திருக்கின்றனர். இந்த இணைப்பு மக்களிடம் இணக்கத்தையும், ஜனநாயகத்தையும், சகோதர உணர்வையும் ஓரளவிற்கேனும் அறிமுகப்படுத்தும்.
முஸ்லீம் மக்கள் குறித்து இந்துக்களின் பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் வன்மத்தையும் இந்த வெள்ள நிவாரணப் பணி அழித்து விட்டிருக்கிறது. ஊடகங்களில் முஸ்லீம் அமைப்புகள் குறித்த செய்திகள் பெரும்பான்மையாகவும், ஆர்.எஸ்.எஸ் குறித்த செய்திகள் சிறுபான்மையாகவும் வருவதைக் கண்டு இந்துமதவெறியர்கள் தாங்கவொண்ணா எரிச்சலில் இருக்க வேண்டும். உண்மையில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களின் பேரைச் சொல்லி இயங்கும் மதவெறியர்களை தோற்கடித்திருக்கிறார்கள்.
தவ்ஹித் ஜமா அத் அமைப்பினரை ஆபாசமாக வசைபாடிய கல்யாணராமன் எனும் பா.ஜ.க மதவெறியனுக்கு இந்துக்களே திருப்பி அடித்திருக்கின்றனர், முகநூலில். இவையெல்லாம் தமிழக மண்ணில் இந்துமதவெறிக்கு எதிராகவும் அதே நேரத்தில் ஜனநாயக உணர்வின் அடிப்படையிலும் மக்கள் திரள்வதற்கும் சேர்வதற்கும் வழியெடுத்துக் கொடுக்கும்.
இனி அந்த இளைஞர்கள் பேசுவதைக் கேட்போம்.
சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோடு – மசூதி தோட்டம் பகுதி. இப்பகுதியில் கடந்த ஏழு நாட்களாக உணவு உறக்கம் மறந்து வேலை செய்து கொண்டிருக்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் வட்ட செயலாளர் சேட் (எ) அஷ்ரப் உசைன். நாம் சென்ற போது அங்கே போர்வைகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.
muslims-flood-relief-photos-21
சேட் என்ற உசைன், ஆட்டோ தொழிலாளி, மனித நேய மக்கள் கட்சியின் வட்டச் செயலாளர்.
“பாய் தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க மாடி வீடு. கீழ் வீடுகளில் தான் பாதிப்பு உங்களக்கு கொடுக்க முடியாது”- என்று உரிமையோடு ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார், உசைன். இதைக் கேட்டு மாடியில் வசிக்கும் பாய் பின்னால் செல்ல தரைதளங்களில் வசிக்கும் ஏனைய ‘இந்து’, மற்றும் ‘முஸ்லீம்கள்’ நிவாரணப் பொருட்களை பெற்று செல்கிறார்கள். அவரிடம் பேசினோம்.
கேள்வி : கடந்த ஒரு வாரமா நீஙக செய்து வரும் பணிகள் குறித்து சொல்லுங்க?
உசைன்: முதல் நாள் பகலில் தண்ணீர் கரண்டை கால் வரை தான் வந்தது. மக்களும் இதுக்கு மேல வராதுனு நெனச்சிட்டு இருந்தாங்க. நைட்டு திடீருனு தண்ணி அளவு அதிகரிக்க ஆரம்பிச்சிருச்சு. உடனடியா மக்களை வெளியேற்றினோம். நடக்க முடியாத பெரியவர்களை டிரை சைக்கிளில் ஏற்றி கூட்டிச் சென்றோம். சீக்கிரமாகவே இந்த பகுதி தண்ணீரால் சூழப்பட்டு விட்டது.
காப்பாற்றப்பட்ட மக்களை தங்க வைக்க இடமில்லை. மசூதிக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று இருந்தது. அது பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைக்க காவலாளி எதிர்ப்பு தெரிவித்தார். “போலீஸ் கேஸ் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் மக்களை தங்க வைக்கணும்” என்று காவலாளிக்கு எடுத்துச் சொல்லி துணிந்து பூட்டை உடைத்து மக்களை தங்கவைத்தோம்.
சில பகுதிகளில் மக்கள் வெளியேற முடியாமல் மாடிகளில் சிக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு நாட்கள் உணவு, பால் வீடு வீடாக கொடுத்தோம். இது சபரிமலை சீசன். ஏரியா இந்து சகோதரர்கள் பலர் மாலை போட்டிருந்தார்கள். அவங்களுக்கு பிரியாணி கொடுத்தால் நம்மை தப்பா நினைக்கமாட்டார்களா. அவர்களுக்காக பிரிஞ்சி , லெமன் சாதம் சமைத்து கொடுத்தோம்.
ஓ.எம்.ஆர் கந்தன்சாவடி அருகிலிலுள்ள பகுதிகளிலும் மீட்பு பணியில் ஈடுபட்டோம். விநாயகபுரம் பகுதியில் கரண்டைகாலுக்கு மேல்வரை சேறு. அன்சர்பாஷா, அலாவுதீன் மற்றும் பகுதி இளைஞர்கள் சிறப்பாக உதவினார்கள்.
muslims-flood-relief-photos-13
நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு சேற்றுப் புண்!
(நாம் பார்த்த வரை மீட்பு பணியில் ஈடுபட்ட முஸ்லீம் இளைஞர்கள் பலரும் காலில் சேற்றுப்புண் மற்றும் மீட்பு பணியின் போது அடிபட்ட காயங்களோடு இருப்பதைப் பார்க்க முடிந்தது.)
கேள்வி : நீங்க என்ன தொழில் செய்யறீங்க? இந்த உதவி வேலைகள் செய்யுறதால உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதிப்பில்லையா?
உசைன்: ஆட்டோ வெச்சிருக்கேன். 7 நாள் வேலைக்கு செல்லவில்லை. பலரும் உதவி செய்து வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் சில நகைகளை அடகுவைத்திருக்கிறேன்.
கேள்வி: மறுமையில் சொர்க்கம் கிடைக்குமுனு உதவி செய்யுறதா சில முஸ்லீம் தொண்டர்கள் சொல்லுறாங்க. உங்க கருத்து என்ன?
உசைன்: மனுசனுக்கு மனுசன் மனிதநேயம் தான் சார் முக்கியம். மார்க்கம் இரண்டாவதுதான். எங்க மார்க்கமும் மனிதநேயத்தை தான் சொல்லுது. இப்போ உங்க அப்பா அம்மாவை உங்க கண் முன்னால யாராவது அடிச்சா எந்த உணர்ச்சி வருமோ அப்படி தான் சார் மக்கள் இப்படி துயரப்படும்போது இருக்கும்.
கேள்வி: எப்போதும் அடித்தட்டு மக்கள் பகுதியிலேயே வெள்ளம் வருதே, போயஸ் தோட்டம் பகுதியில வெள்ளம் ஏன் 
வருவதில்லை?
உசைன் : சட்டம்னா என்ன சார்? இங்க எல்லாருக்கும் ஒரே சட்டம் கிடையாது. கனிமொழி எவ்ளோ கொள்ளையடிச்சி இப்போ வெளியே இருக்கு. ஜெயலலிதாவ ஒரு நீதிபதி ஜெயில்ல போட்டா இன்னொருத்தர் விடுதலை பண்ணிட்டார். போலீஸ் நினைத்தால் தவறுகளை தடுக்க முடியும் ஆனா அவர்களுக்கு கட்டிங் செல்கிறது. அரசு மருத்துவமனைக்கு போங்க. குழந்தை பிரசவத்துக்கு ஆண் குழந்தைக்கு 2000, பெண் குழந்தைக்கு 1000 ரூபா கொடுக்கணும். அதை கொடுக்கலேன்னா நம்மை மதிக்கவே மாட்டாங்க. என் காலுல் அடிபட்ட போது அரசு மருத்துவமனையில் கட்டு போடவே பல மணி நேரம் ஆக்குறாங்க. சாதாரண ஜனங்கள்னாலே அலட்சியம் தான்.
முஸ்லீம்ல கூட கொஞ்சம் பேரு பாதுகாப்பா வெளியூருக்கு கிளம்பிட்டாங்க. திருநெல்வேலி அங்க இங்கனு. போன் போட்டு திட்டுனேன். அங்கயும் தண்ணிவந்துட்டா எங்கடா போவீங்கணு.
கேள்வி: முஸ்லீம்களில் பலர் கோவில் பிரசாதம் சாப்பிடுவதில்லை. ஆனால் இந்த நிவாரணப் பணிகளில் பல கோவில்கள் மற்றும் சிலைகளை சுத்தம் செஞ்சுருக்கீங்க? அதை எப்படி பாக்குறீங்க?
உசைன்: பல அமைப்புகள் நிவாரணப் பணி செய்யுறாங்க. இந்து, முஸ்லீம் என்று தனித்தனியாக பிரிச்செல்லாம் சுத்தம் செய்ய முடியாது. இஸ்லாம் ஒரிறை கொள்கை கொண்டது. பிரசாதம் சாப்பிடக் கூடாது தான். ஆனா சில சமயங்களில் நண்பர்களில் மனது கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சாப்பிட்டிருக்கிறேன். ஐந்து வேளை தொழுவதால் மட்டும் யாரும் சொர்க்கத்திற்கு போக முடியாது. அடுத்தவர் மனது புண்படுத்தக்கூடாதுனும் மார்க்கம் சொல்கிறது. சமூகத்திற்கு என்ன செய்தோம், குடும்பத்தை எப்படி வழிநடத்தினோம்னு பல விசயம் இருக்கிறது.
muslims-flood-relief-photos-19
நிவாரணப் பொருட்களை பெற்றுச் செல்லும் பெண்கள்!
கேள்வி : இப்போது முஸ்லீம் அமைப்புகள் பாராட்டப்படுவதற்கு காரணம் வெள்ளம் என்ற அனைத்து மக்களுக்குமான பொதுப்பிரச்சனையில் இறங்கி உதவி செய்திருப்பதால் தான். ஆனால் சில முஸ்லீம் அமைப்புகள் மதம் சார்ந்த பிரச்சனையை மட்டும், முஸ்லீம் மக்களுக்கான கோரிக்கைகளை மட்டும் எடுத்து போராடுவது சரியா?
உசைன்: பிராபகரன் பையன் கொல்லப்பட்ட செய்த வந்த போது நாங்கள்தான் முதலில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டோம். எங்களுக்கு அடுத்து தான் வை.கோ-வே வந்தார். பொதுப் பிரச்சனைகளுக்கும் செல்கிறோம். நாலு பேரும் நமக்கு தேவைதான். மற்ற சமுதாயத்தை சேக்காம பண்றது தவறு.
கேள்வி : அப்படியே சென்றாலும் விஸ்வரூபம் பிரச்சனைக்கும், கார்டூன் பிரச்சனைக்கும் திரள்கிற பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்கு வருவதில்லையே ?
உசைன்: எங்க பகுதியிலிருந்து எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே அளவு எண்ணிக்கையில தான் செல்கிறோம். ஆனாலும் நபிகள் நாயகம் கார்டூன் எல்லாம் உணர்வு ரீதியான பிரச்சினை அதனால் மக்கள் அதிகமாக வருவாங்க.
கேள்வி : நீங்கள் பொதுப் பிரச்சனைக்கு வருவதாக சொல்கிறீர்கள். நல்ல விசயம்தான். சில முஸ்லீம் அமைப்புகள் பொதுப் பிரச்சனைக்கு வரலேன்னாலும், உங்கள மாரி வாரவங்களை முஸ்லீம் இல்லைன்னு சொல்றாங்களே?
உசைன்: தவ்ஹீது ஜமாதை தானே சொல்கிறீர்கள். ஒருத்தர் முஸ்லீமா இல்லையா என்பதை அல்லா தான் முடிவு பண்ணனும். நானும் நீயும் முடிவு பண்ண முடியாது. அங்க பள்ளம் இருக்குப்பா பாத்துப்போ என்று சொல்லத்தான் முடியும். கேக்கமாட்டேன் போய் விழுவேனு போனா நாம என்ன செய்ய முடியும். ஆனா வெள்ள நிவாரண பிரச்சனையில அவங்க நல்லா செயல் படுறாங்க. முதல் முறையா ஒரு சமூக பிரச்சனையில தவ்ஹீது ஜமாதை பாக்குறேன். இதை முதல்லயே செஞ்சிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க. இத தொடர்ந்து செய்யனும்.
கேள்வி : மக்கள் அரசு மீது குற்றம் சாட்டுகிறார்களே, உங்க கருத்து என்ன?
உசைன்: யாருக்கும் அறிவிக்காமல் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத தவறு. இவ்வளவு தண்ணீர் வரும் என்று மக்களுக்கு தெரியாது. கால் அளவு தண்ணீர் வரும் என்று தான் நினைத்தார்கள். நாங்கள் அழைக்கும்போது கூட மக்கள் முதலில் வெளியேறவில்லை. காரணம் இவ்வளவு பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. அப்படி மக்கள் வரவிட்டால் கூட அரசின் கடமை அறிவிப்பதுதானே. அதை ஏன் செய்யவில்லை. அதனால் இது அரசின் மீதான தவறுதான்.
கேள்வி : நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி இதுவரை இதை கண்டிக்கவில்லையே?
உசைன்: அது பற்றி தெரியவில்லை. நிவாரணப்பணியில் இருக்கிறேன். கட்சி தலைவர்களை சந்தித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறது. இது கண்டிக்க வேண்டிய ஒன்று. நாங்கள் கண்டிக்கச் சொல்லி வலியுறுத்துவோம்.
கேள்வி : அப்படி கண்டிக்காவிட்டால் என்ன செய்யவீர்கள்?
உசைன் : மக்களுக்கு வேலை செய்யத்தான் கட்சி. எங்கள் கட்சியில் அனைவரும் கருத்து சொல்ல முடியும். 17 வயது பையன் கூட சொல்லலாம். அப்படி சொல்லுவோம். கேட்கவில்லை என்றால் வெளியேறிவிடுவேன். இது அரசின் தவறுதான்.
அப்துல் மஜித், எஸ்.டி.பி.ஐ – சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா.
muslims-flood-relief-photos-12
இடமிருந்து இரண்டாவதாக நிற்பவர் (சட்டை, பேண்ட் அணிந்திருப்பவர்) அப்துல் மஜித், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தென் சென்னை வர்த்தக பிரிவில் பொறுப்பு வகிக்கிறார்.
சைதாப்பேட்டை செட்டித்தோட்டம் பகுதிக்கு சென்ற போது கழுத்தளவு தண்ணீரில் முஸ்லீம் இளைஞர்கள் உணவு கொண்டு தந்ததை மக்கள் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்கள். விசாரித்த போது அப்பகுதியில் இருக்கும் எஸ்.டி.பி.ஐ -யின் ஆட்டோ சங்கமும் அதோடு தொடர்புடைய இளைஞர்கள் குறித்தும் கூறினார்கள். அவர்களிடம் பேசினோம். அக்கட்சியின் அப்துல் மஜித், தென்சென்னை வர்த்தக அணியை சேர்ந்தவர் பேசினார்.
“செவ்வாய் இரவு இப்பகுதி முழுவதும் வெள்ளம் நிறைந்து விட்டது. மக்கள் மாடிகளில் தஞ்சம் புகுந்திருந்தார்கள். செய்தி அறிந்ததும் உடனடியாக கிச்சடி தயார் செய்தோம். ரப்பர் டியூப்கள் தயார் செய்து அதை கொண்டு உணவுப் பொருட்களை வீட்டிற்கு வீடு கொண்டு சேர்த்தோம். சிறிய குறுகலான சந்துகளில் கயிறு கட்டி சென்றோம். தண்ணீர், வத்திபெட்டி, சின்ன டார்ச், மெழுகுவர்த்திகளை விநியோகித்தோம். இரவு எங்களால் முடிந்த அளவுக்கு செய்தோம். மறுநாளும் தொடர்ந்தோம்.
தெருவில் மக்கள் அடித்துக்கொள்ளும் வகையில் கொடுக்ககூடாது என்பதால் வீடு வீடாக கொண்டு சென்றோம். மழை முடிந்ததும் சாக்கடை அள்ளும் பணியில் ஈடுபட்டோம். சந்துகளில் இருந்த குப்பைகள், சாக்கடைகளை வாரி அரசு ஊழியர்கள் கொண்டு செல்ல வசதியாக தெருமுனைகளில் குவித்து வைத்தோம்.
மக்களை எங்களை பாராட்டும் போது இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.”
கேள்வி : முஸ்லீம் அமைப்புகளை மக்கள் பாராட்டுவதற்கு காரணம் பொதுப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதால் தான். ஆனால் சில அமைப்புகள் மதம் சார்ந்த பிரச்சனையை மட்டும் , இஸ்லாமியர்கள் சார்ந்த கோரிக்கைகளை மட்டும் எடுத்து போராடுவது சரியா?
மஜித்: எங்கள் அமைப்பை பொறுத்தவரை நாங்கள் எல்லா அரசியல் விசயங்களுக்கு குரல் கொடுக்கிறோம். சமீபத்தில் கூட டாஸ்மாக் பிரச்சனைக்கு ஒரு மாதமாக போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தினோம். ஈழம் முதலிய எல்லா விசயங்களுக்கும் போராடுகிறோம்.
சங் பரிவாரம் நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றி பெறுகிறான். ஏன் கேரளாவில் கூட கால் ஊன்றிவிட்டான். தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. இதற்கு இஸ்லாமிய அமைப்புகளா காரணம்? இல்லை. பெரியார் நாடு என்பதால் தான் முடியவில்லை. முஸ்லீம் நினைத்து மட்டும் சி.எம் ஆக முடியுமா சார். நடக்ககூடிய காரியமா? மற்றவர்களுடன் சேர்ந்து செய்வது தான் காலத்தின் கட்டாயம். சங் பரிவாரத்திற்கு எதிரானவர்களை அனைவரையும் இணைத்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு ஏற்படுத்தி போராடுகிறோம்.
muslims-flood-relief-photos-17
நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள்.
கேள்வி : ஆனால் சில இஸ்லாமிய அமைப்புகள் மதப் பிரச்சினைகளைத்தானே பிரதானமாக செய்கிறார்கள்.? இப்போது கூட தவ்ஹித் ஜமாஅத் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தப் போகிறார்கள்.?
மஜித் : மார்க்கம் தனிப்பட்ட விசயம். அரசியல் பொதுவான விசயம். நான் விரலை ஆட்டி தொழுவேன். தொப்பி போட்டு தொழுவேன், போடாமல் தொழுவேன். இப்படி செய்தால் தான் முஸ்லீம் செய்யாவிட்டால் முஸ்லீம் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது.
கேள்வி : மற்ற கடவுள்களுக்கு படைக்க்ப்பட்ட பிரசாதங்களை சாப்பிடக் கூடாத நீங்கள் கோயிலை சுத்தப்படுத்துவது மார்க்கப்படி சரியா?
மஜித் : இஸ்லாம் ஒரிறை கொள்கை கொண்டது. சிலை வணக்கம் தான் செய்யக்கூடாது. கோவிலை சுத்தம் செய்வதில் பிரச்சனை இல்லை. இஸ்லாமியர் ஒருவர் அப்படி வணங்கினாலும் அவரை இஸ்லாமியரல்ல என்று சொல்ல நமக்கு உரிமை கிடையாது. அதை அல்லா தான் முடிவு செய்வான். அவரை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது.
கேள்வி : மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்கிறீர்கள். சரியானதுதான். இதற்கு காரணமான அரசுக்கு எதிராகவும் போராடுவீர்களா?
மஜித் : இந்த அரசு மக்களை அலட்சியமாகத்தான் கருதுகிறது. கடந்த நாலரை ஆண்டுகளில் தொழில் பாதிப்பு, வருவாய் இழப்பு என பல வகைகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். டாஸ்மாக்கிற்கு எதிராக பலரும் போராடினார்கள். அரசு அதை மதிக்கவிலை. இந்த அரசுக்கு மக்கள் மீது அக்கறையில்லை.
முஸ்லீம் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பகுதி மக்களான ‘இந்துக்கள்’ சிலரிடம் கருத்து கேட்டோம்.
muslims-flood-relief-photos-2
முஸ்லீம்களுக்கு வீடு என்ன உயிரையே கொடுப்போம் என்று சொன்ன அம்மா.
முஸ்லீம்கள் என்றால் பயங்கரவாதிகள், குண்டு வைப்பார்கள், நம்மிடம் ஒட்டமாட்டார்கள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால்
இப்பொழுது உங்கள் தெரு சாக்கடையை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டோம்.
தாங்கள் அப்படி கருதவில்லை என்று பலர் கூறினார்கள். முன்னாடி எங்களுக்கு அப்படிதான் சொன்னாங்க. நாங்களும் அப்படி தான் நினைத்திருந்தோம். வீடு வாடகைக்கு விடும்போது கூட யோசிப்போம். அத எல்லாம் காதால்தான் கேட்டிருந்தோம். அது தவறு என்பதை இப்போ கண்ணால் பாக்றோம் என்றார்கள்.
அப்படியானல் இனி வாடகைக்கு வீடு கொடுப்பீர்களா? என்று கேட்ட போது, “வீடென்ன உயிரையே கொடுப்போம்” என்றார் ஒரு பெண்மணி.
–    வினவு செய்தியாளர்கள்

No comments:

Post a Comment