Saturday, May 7, 2011

அமெரிக்கப் படைகளைக் குறைக்க பாகிஸ்தான் முடிவு

இஸ்லாமாபாத், மே 6: ஒசாமா பின்லேடனை ரகசியத் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொன்றுவிட்ட நிலையில், தங்கள் நாட்டுக்குள் இருக்கும் அமெரிக்கப் படைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.





இதுபோன்ற தன்னிச்சையான தாக்குதலை அமெரிக்கா இன்னொருமுறை நடத்த முயன்றால் அந்த நாட்டுடனான உறவை மறுபரிசீலனை செய்யவும் தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி அறிவித்திருப்பதாகவும் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தானின் 138-வது படைக் குழுக்களின் கூட்டம் ராவல் பிண்டி ராணுவத் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. தளபதி கயானி தலைமையில் நடந்த இந்தக் கூட்டம், அபோட்டாபாத்தில் அமெரிக்க கமாண்டோக்கள் ஊடுருவி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற விவகாரம் பற்றி விவாதிப்பதற்காகவே நடத்தப்பட்டது.





அமெரிக்காவுடனான ராணுவ உறவு, பின் லேடன் கொல்லப்பட்டது, அதற்காக அமெரிக்க கமாண்டோக்கள் ரகசியமாக ஊடுருவியது, அவற்றால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற தாக்குதல்கள் பாகிஸ்தானின் இறையாண்மையைப் பாதிக்கும் என்று கூறிய கயானி, மீண்டும் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்காவுடனான ராணுவ, உளவு சார்ந்த ஒத்துழைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

குறைந்தபட்சமாக, இப்போதைக்கு பாகிஸ்தானில் அமெரிக்கா ராணுவ நடமாட்டத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று படைப்பிரிவுத் தளபதிகளை அவர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. ஒசாமா பின்லேடன் வீட்டைத் தாக்கியது போல பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைகள், மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கயானி பேசியிருக்கிறார். குடியிருப்புப் பகுதிகளைத் தாக்குவது போன்று எளிதாகத் தாக்கும் அளவுக்கு நமது பாதுகாப்பு நிலைகள் இல்லை. அவற்றுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்றும் கயானி கூறியதாக அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கு... தங்களாலும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த முடியும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியிருப்பதும் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதம் நடந்தது. இதைக் குறிப்பிட்ட கயானி, அப்படி ஏதாவது சாகசம் செய்ய நினைத்தால் கடுமையான பதிலடி தரப்படும் என்றார்.
அமெரிக்கா கருத்து: அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது பாகிஸ்தானே என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment