Tuesday, May 31, 2011

மரியம் பிச்சை விபத்து வழக்கு-பிடிபட்ட லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை

சென்னை: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்து வழக்கில், ஆந்திராவில் வைத்துப் பிடிபட்டுள்ள லாரி டிரைவர் ஷேக் ரகமதுல்லாவிடம் சிபிசிஐடி போலீஸார் சென்னையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்ட மரியம் பிச்சை, எம்.எல்.ஏ பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார். வழியில் பாடாலூர் என்ற இடத்தில் அவரது கார் வந்தபோது கண்டெய்னர் லாரி ஒன்று அமைச்சரின் கார் மீது மோதியது. இதில் மரியம் பிச்சை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


வழக்கமாக இதுபோல விபத்துக்களில் சிக்கும் லாரிகளின் டிரைவர்கள், உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விடுவார்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்குப் போய் சரணடைவார்கள். ஆனால் இந்த விபத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் லாரியுடன் தப்பி விட்டார்.

இதனால் இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கேள்விகள் எழுந்தன. இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் லாரியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட லாரி ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்ததாகும். அந்த லாரியை அன்றைய தினம் ஓட்டி வந்தவர் விஜயவாடாவைச் சேர்ந்த ஷேக் ரகமதுல்லா ஆவார்.

அன்றைய தினம் தூத்துக்குடியில் ஜிப்சம் ஏற்றிக் கொண்டு வந்தபோது பாடாலூர் அருகே அமைச்சரின்கார் மீது மோதி விட்டார் ரகமதுல்லா. பின்னர் அவர் நேராக விஜயவாடா விரைந்தார். அங்கு தனது உரிமையாளரிடம் லாரியை ஒப்படைத்து நடந்ததைக் கூறினார்.

இதையடுத்து ரகமதுல்லாவை அவரது வீட்டில் போய் இருக்குமாறு கூறிய அவரது உரி்மையாளர், லாரியுடன் மேற்கு வங்கம் சென்று ஜிப்சத்தை இறக்கினார்.

இந்த நிலையில் போலீஸாருக்கு தகவல் கிடைத்து அவர்கள் ரகமதுல்லாவை பிடித்தனர். தற்போது அவரை சென்னைக்குக் கொண்டு வந்து விட்டனர். இங்குள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து அவரிடம் கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விசாரணைக்குப் பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு ரகமதுல்லாவை அழைத்துச் சென்று நேரில் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பிடிபட்டுள்ள லாரியும் தற்போது சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதற்காக தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.


No comments:

Post a Comment