Saturday, May 7, 2011

கலைஞர் டிவி பண பரிமாற்றத்தில் போலி ஆவணங்கள்-கனிமொழியை சிறையில் அடைக்க வேண்டும்: சிபிஐ

புதுதில்லி, மே 7: 2ஜி வழக்கு தொடர்பாக தம்மைக் கைது செய்யாமலிருக்க கனிமொழி எம்.பி. தாக்கல் செய்திருக்கும் மனுவை தள்ளுபடி செய்துவிட்டு அவரை காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது.

இதனிடையே, கனிமொழியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு மே 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.



2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் சார்பில் இந்திய குற்றவியல் சட்டம் (சி ஆர்.பி.சி) 88சி-யின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுவை சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று விசாரித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் நேற்று வாதிட்டனர்.
 இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும் தொடர்ந்தது.  விசாரணைக்கு ஆஜராவதற்காக கனிமொழி இன்று காலை 9.40 மணி அளவில் தமிழ்நாடு பவனில் இருந்து பாட்டியாலா வளாகத்துக்கு வந்தார்.
  சிபிஐ சார்பில் வழக்கறிஞர் யூ.யூ.லலித் வாதிட்டார். கலைஞர் டி.வி.யில் அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாரைப் போலவே கனிமொழிக்கும் 20 சதவீத பங்குகள் இருக்கின்றன. கனிமொழி வெறும் பங்குதாரராக மட்டுமே இருந்தார் என்பதை ஏற்க முடியாது. கலைஞர் டி.வி.யின் நிர்வாகத்தில் கனிமொழி முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.
 வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கும் கனிமொழிக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவதற்காக அரசியல் தரகர் நீரா ராடியா மூலமாக கனிமொழி பரிந்துரை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.




கலைஞர் டி.வி. தொடங்கப்படும்போது ராசாவுடன் கனிமொழி அடிக்கடி பேசியிருக்கிறார். இவற்றின் காரணமாக எந்த ஆவணமும் இல்லாமல் கலைஞர் டி.வி.க்கு பணம் கைமாறியிருக்கிறது.

கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் குற்றவியல் சட்டம் 88சியின் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டு அவரைக் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும். வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்ய மட்டுமே அவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது.

No comments:

Post a Comment