Friday, May 6, 2011

வலுக்கிறது கத்திரி-வெளுக்கிறது வெயில்-இன்றும் பல ஊர்களில் சதம்


சென்னை : தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இன்றும் பல ஊர்களில் வெயில் சதத்தைத் தாண்டி வெளுத்துக் கொண்டிருக்கிறது.

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் தமிழகம் முழுவதும் தொடங்கி வெற்றி நடை போட்டு வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்த போதும் அது வெப்பத்தைக் குறைக்க போதுமானதாக இல்லை. மாறாக, மிகக் கடுமையான வெப்பம் அடித்து வருவதால் மக்கள் மண்டை காய்ந்து போய் உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகர் முதல் பல நகரங்களிலும் கடும் வெயில் அடித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு இப்போதே கடும் வெயில் அடிப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவாக தலைநகர் சென்னையில் மிகக் கடுமையான வெயில் அடித்துக் கொண்டுள்ளது. இப்போதே 105 டிகிரி அளவுக்கு வெயில் அடிப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கத்திரி உச்சத்தை எட்டும்போது வெயில் மேலும் கடுமையாகுமோ என்று மக்கள் பயப்படுகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி சென்னையில்தான் அதிக அளவாக 105.44 டிகிரி வெயில் வெடித்தது. வேலூரிலும் இதே அளவிலான வெயில் பதிவானது.

பாளையங்கோட்டையில் 104, நாகையில் 102, கடலூரில் 102, மதுரையில் 99, கன்னியாகுமரியில் 97, சேலத்தில் 97, கோவையில் 95 டிகிரி என வெயில் பதிவானது.

இன்றும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வெயில் சதத்தைத் தாண்டிப் போயுள்ளது. சென்னையிலும் வழக்கம் போல வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.

தென் மேற்குப் பருவ மழை வருகிற 26ம் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மழை வந்தால்தான் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment