Saturday, September 28, 2013

பாஜகவுடன் கூட்டணி இல்லை: அன்புமணி ராமதாஸ்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக உள்பட எந்தக் கட்சியுடனும் பாமக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித  உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று சென்னை திரும்பிய அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:


ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் கலந்து கொண்டு பேசினேன். சர்வதேச விசாரணை மூலம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அப்போது வலியுறுத்தினேன்.
இலங்கைக்கு நேரில் சென்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை அளித்துள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியேற்றம் ஆகியவற்றை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களின் பிரச்னை தீர இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா அனைத்து கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் பிரதமரைச் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தால் மட்டுமே ஈழத் தமிழர் பிரச்னை தீரும்.
வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் பாமக உறுதியாக உள்ளது. பாஜக உள்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை என்றார் அன்புமணி ராமதாஸ்.

No comments:

Post a Comment