Saturday, September 28, 2013

மே.வ. முஸ்லிம்களின் துயர வாழ்க்கையை சித்தரிக்கும் ஆவணப் படம்: மம்தா அரசு தடை!

கொல்கத்தா: மேற்கு வங்காள முஸ்லிம்களின் துயர வாழ்க்கையை சித்தரிக்கும் டாக்குமெண்டரி படத்திற்கு (ஆவணப் படம்) மம்தா பானர்ஜி அரசு தடை விதித்துள்ளது.
பிரபல தயாரிப்பாளர் சவ்மித்ரா தஸ்திதாரின் ‘முஸல்மானேர் கதா’ (Musalmaner Katha – முஸ்லிம்களின் நிலை) என்ற டாக்குமெண்டரிக்கு மாநில அரசின் திரைப்பட தலைமையகமான நந்தனில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்சர் சான்றிதழ் இல்லை என்று கூறி டாக்குமெண்டரியை திரையிடக் கூடாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு போலீஸ் உத்தரவிட்டது. ஆனால், இதே டாக்குமெண்டரி, கொல்கத்தா ப்ரஸ் கிளப்பிலும், புகழ்பெற்ற பிரசிடென்சி பல்கலைக்கழகத்திலும் திரையிடப்பட்டது.
நந்தன் 3-வது எண் ஹாலில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு சென்சர் சான்றிதழ் தேவையில்லை என்ற நிலையில் வேண்டுமென்றே
இத்தடையைப் போட்டுள்ளது மம்தா அரசு. குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை உள்ளடக்கி 25க்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை தஸ்திதார் தயாரித்துள்ளார்.
இது தொடர்பாக தஸ்திதார் கூறுகையில், “இம்மாதம் 24-ஆம் தேதி இரவு நேரத்தில் அமலாக்கப் பிரிவைச் சார்ந்த 2 அதிகாரிகள் வந்து ஆவணப் படத்தின் டி.வி.டி. நகலை கேட்டனர். இதன் மூலம் ஆவணப் படத்தை திரையிட தடை விதித்தன் பின்னணியில் உள்ள சதித் திட்டம் தெளிவாகிறது. டாக்குமெண்டரியை தயாரிப்பவர் அரசின் ஊதுகுழலாக செயல்பட்டால் மட்டுமே திரையிட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.


பல தசாப்தங்களாக மேற்கு வங்காள முஸ்லிம்களை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி ஏமாற்றிய அரசுகளின் செய்திகள், இந்த ஆவணப் படத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் முஸ்லிம்களின் துயர வாழ்வைக் குறித்து உதாரணத்துடன் தயாரிப்பாளர் விவரிக்கிறார். கடந்த இடதுசாரி அரசும், தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் அரசும் முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலையை மாற்ற எதுவும் செய்யவில்லை என்ற மூத்த போலீஸ் அதிகாரி நஸ்ருல் இஸ்லாமின் பேட்டியும் இந்த ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ளது.
முந்தைய இடதுசாரி அரசு மற்றும் தற்போதைய மம்தா அரசிற்கு நஸ்ருல் இஸ்லாம் என்றால் பிடிக்காது. அதேவேளையில் இந்த ஆவணப் படத்தை திரையிட தடை விதித்த அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு சமூக -கலாச்சார அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பிரபல திரைப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் ஆதரவு தெரிவித்ததாக தஸ்திதார் கூறியுள்ளார். மே. வங்காளத்திற்கு வெளியே ஆவணப் படத்தை வெளியிட ஏற்பாடு செய்து தருவதாக பட்வர்தன் கூறியுள்ளார். மே. வங்காளத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸும், எதிர்க்கட்சியான சி.பி.எம்.மும் தவிர இதர கட்சியினர் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment