Saturday, September 24, 2011

முஸ்லிம் என்பதற்காக பள்ளி மாணவனைத் தாக்கிய ஆஸி. இனவெறியர்கள்

சிட்னி: தான் ஒரு முஸ்லிம் என்பதற்காக உடன் பயிலும் சக மாணவர்கள் 20 பேர் தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி தாக்கினர் என்று சிட்னி பள்ளி மாணவன் ஹமித் மாமோசாய் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பவர் ஹமித் மாமோசாய் (15). அவரை அதே பள்ளியில் படிக்கும் 20 மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில்,

20 பேர் என்னைத் தாக்கினர். அடி நன்றாக அடி. அவனுக்கு இது தேவை தான். ஏய், தீவிரவாதி எங்கிருந்து வந்தாயோ அங்கேயே சென்றுவிடு. அங்கு போய் எதையாவது வெடிக்கச் செய் என்று அந்த மாணவர்கள் கூறினார்கள் என்றார்.

இந்த தாக்குதலில் ஹமித் சுயநினைவை இழந்தார். உடனே சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பெரிய காயம் ஏதும் இல்லை.

கடந்த 2 ஆண்டுகளாகவே எனது சகோதரனை இனத்தைக் கூறி திட்டி வந்துள்ளனர். இதனால் அவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளான் என்று ஹமிதின் சகோதரி நாஜியா தெரிவித்தார்.


அவன் பள்ளியில் இது குறித்து புகார் கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. தலைமை ஆசிரியர் ஏன் இப்படி இருக்கிறார், அவர் ஏன் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்த முயற்சிப்பதில்லை. இந்த தாக்குதல் எதற்காக நடந்தது என்பது மற்ற பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஹமிதின் தாய் ஹஸ்னா தெரிவித்தார்.

ஒரு மாணவன் 20 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருவதாகவும் கல்வித் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஹமித் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கவுன்சிலிங் கொடுக்க பள்ளி ஏற்பாடு செய்துள்ளது. அஸ்கித் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இன வெறி தாக்குதல்களை சகித்துக்கொள்ளாது. இதற்கு முன்னதாக மாணவர்களை இனத்தின் பெயரைக் கூறி திட்டியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போலீஸ் வழக்காகிவிட்டதால் இது குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment