Saturday, September 24, 2011

சென்னையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வது தவிர்ப்பு-216 பயணிகள் தப்பினர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை மிகப் பயங்கரமான விபத்து மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. ரன்வேயில் ஒரு விமானம் நின்று கொண்டிருந்தபோது இன்னொரு விமானத்தை தரையிறங்க அனுமதி கொடுத்ததால் இந்த விபரீதம் நேர இருந்தது. ஆனால் விமானியின் துரித செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சென்னையிலிருந்து இன்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று டெல்லிக்குப் புறப்பட்டது. ரன்வேயில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே விமானம் ரன்வேயிலேயே நிறுத்தப்பட்டது. அந்த விமானத்தில் 132 பயணிகள் இருந்தனர்.


இந்த நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் இறங்க அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த விமானம், ஜெட் ஏர்வேஸ் விமானம் நின்றிருந்த ரன்வேயில் தரையிறங்க எத்தனித்தது. அப்போது ரன்வேயில் ஒரு விமானம் நின்று கொண்டிரு்பபதைப் பார்த்த ஏர் இந்தியா விமானி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் விமானத்தை தரையிறக்காமல் அப்படியே மேலே ஏற்றி விட்டார். ஏர் இந்தியா விமானம் மட்டும் தரையிறங்கியிருந்தால் மிகப் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். இரு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 216 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அத்தனை பேரும் ஏர் இந்தியா விமானியின் சாதுரியத்தால் உயிர் தப்பினர்.


பின்னர் சிறிது நேரம் ஏர் இந்தியா விமானம் வானில் வட்டமிட்டபடி இருந்தது. பின்னர் ஜெட் ஏர்வேஸ் விமானம் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது. அது பத்திரமாக தரையிறங்கிய பின்னரே விமான நிலையத்தில் அத்தனை பேருக்கும் போன உயிர் திரும்பி வந்தது.

இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

விசாரணைக்கு உத்தரவு

இரு விமானங்கள் மோதவிருந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு விமான நிலைய ஆணையக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

   


No comments:

Post a Comment