Thursday, March 31, 2011

சட்டங்களின் சலுகைகள் முஸ்லிம்களுக்கு எட்டாக்கனியோ..?

ஒரு குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு
அவசிய நிமித்தமாக வெளியே வரும் நிலை
ஏற்பட்டால் வழங்கப்படுவதுதான் 'பரோல்' என்பதாகும். இந்த பரோல் விசயத்தில் கூட
அரசு முஸ்லிம்கள் விசயத்தில் பாராமுகமாக நடந்து வருகிறது.

ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜாகிர் உசேன் சென்னை
ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் கொலை வழக்கு தொடர்பாக 1999 ம் ஆண்டு
முதல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
என்னை தமிழக அரசாணைப்படி முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று
விண்ணப்பித்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் எனக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருமண
கொண்டாட்டங்களுக்காக எனக்கு ஒரு மாதம் பரோல் தர வேண்டும் என்று உள்துறை
செயலாளர், டி.ஜி.பி., கோவை ஜெயில் சூப்பிரண்டு ஆகியோருக்கு எனது சகோதரர் கடந்த
1 ம் தேதி விண்ணப்பித்தார். எனக்கு பரோல் கொடுக்கும் பட்சத்தில்தான் திருமணம்
நடக்கும். இவ்வாறு அதில் அவர் கூறி இருந்தார்.

இதற்கு சிறப்பு அரசுப் பிளீடர் கே.பாலசுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு
தெரிவித்தார். கொலை வழக்கில் சிக்கியுள்ள ஜாஹீரை வெளியே கொண்டு வருவதற்கு அதிக
போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இருக்கும். தேர்தல் நடக்கும் நேரத்தில்
அந்த பணிக்கு அதிக போலீசார் சென்றுவிடுவதால், ஒரு மாதத்துக்கு ஒரு கைதியை
பாதுகாப்பதற்கு போலீசாரும் கிடைக்க மாட்டார்கள்.சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காக
மட்டுமல்ல, அவர் ஈடுபட்டிருந்த குற்றத்தின் தன்மையையும் கருதும்போது அவருக்கு
ஒரு மாதம் பரோல் அளிப்பது நல்லதல்ல என்று வாதிட்டார்.இரு தரப்பு வாதத்தையும்
கேட்ட நீதிபதி பி.ஜோதிமணி,

ஜாகிர் உசேன் பரோல் கேட்பது தனது திருமணத்துக்காகத்தானே தவிர வேறெதற்கும் அல்ல.
எனவே 3 நாட்களுக்கு பரோல் அளித்து உத்தரவிடுகிறேன்.அவருக்கு தேவையான போலீஸ்
பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

ஜாஹிரின் ஒரு மாத கால பரோல் கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறப்பு அரசுப்
பிளீடர் கே.பாலசுப்பிரமணியன் கூறிய காரணத்தில் ஒன்று, ''ஜாஹீரை வெளியே கொண்டு
வருவதற்கு அதிக போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இருக்கும். தேர்தல்
நடக்கும் நேரத்தில் அந்த பணிக்கு அதிக போலீசார் சென்றுவிடுவதால், ஒரு
மாதத்துக்கு ஒரு கைதியை பாதுகாப்பதற்கு போலீசாரும் கிடைக்க மாட்டார்கள்
என்பதாகும்.

தமிழகத்தில் 1 ,04 ,783 காவலர்கள் பணியில் இருக்கும் நிலையில், ஜாஹிரின்
பாதுகாப்புக்கு போலிஸ் கிடைக்க மாட்டார்களாம். நல்ல வேடிக்கைதான் போங்க.
போலீஸ் கிடக்கவில்லை என்றால் அரசியவாதிகள் பின்னாடி பாதுகாப்புன்ற பேருல ஒரு
படை போலீஸ் அலையுதே; அதிலிருந்து ரெண்டு பேரை போடவேண்டியதுதானே! மேலும்,
ஜாஹிரின் குற்றத்தின் தன்மை குறித்தும் ப்ளீடர் பேசுகிறார். இதுபோன்ற கொலைக்
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்பாக பரோலில் வந்ததே இல்லையா? அல்லது
பிளீடருக்கு தெரியாதா? பிளீடரின் உப்புச்சப்பில்லாத காரணத்தின்
அடிப்படையில் ஒரு திருமணம் செய்யவுள்ளவருக்கு மூன்று நாள் பரோல் என்பது
மாபெரும் அநியாயமாகும்.

கடந்த காலங்களில், ஜாஹிரை விட கடுமையாக குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு
வழங்கப்பட்ட பரோலை பார்வைக்கு வைக்கிறோம்;


- கொலை மற்றும் கற்பழிப்பு ஆகிய குற்றத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற
சாமியார் பிரேமானந்தாவுக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்கிய நீதிமன்றம்.
- இதே பிரேமானந்தாவுக்கு சிவராத்திரி பூஜையில் கலந்து கொள்ள இவருக்கு 6
நாட்கள் பரோலில் விடுதலை.
- மதவெறியை தூண்டும் வகையில் தேர்தல் நேரத்தில் பேசிய வருண் காந்திக்கு 15
நாட்கள் பரோலில் விடுதலை செய்த உச்சநீதிமன்றம்.
- முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனனை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆயுள்
தண்டனை அனுபவித்து வரும் அவரது சகோதரர் பிரவீன் மகாஜன் 14 நாள் பரோலில் விடுதலை
செய்த மும்பை நீதிமன்றம்.

இவ்வாறு பட்டியல்கள் நீளும். ஏற்கனவே மதானிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுப்பதன்
மூலம் அநீதியை காட்டிவரும் நீதித்துறை, இப்போது இந்த வழக்கில் குறைந்த நாள்
பரோல் வழங்கி தனது அநீதியை தொடர்கிறது. என்ன செய்வது! சட்டத்தின்
சலுகைகள் முஸ்லிம்களுக்கு எப்போதுமே எட்டாக்கனிதானே!

No comments:

Post a Comment