Wednesday, August 31, 2011

செப்டம்பர் 2 முதல் அரசு கேபிள் டி.வி.

சென்னை, ஆக.30: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மூலமான கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2) தொடங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் அறிவித்தார்.

பேரவை விதி 110-ன் கீழ் தாமாக முன்வந்து அவர் சமர்ப்பித்த அறிக்கை:
"முந்தைய அரசால் 2007-ல் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. 2008 ஜூலையில் ஒளிபரப்பைத் தொடங்கியது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகளை அந் நிறுவனம் வழங்கியது. பின்னர் முந்தைய ஆட்சியாளர்களின் சுயநலம் காரணமாக, இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. 31.3.2011 தேதியில் இது 432 இணைப்புகள் என்ற அளவில் சுருங்கிவிட்டது. திமுக அரசு தொடங்கிய அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அந்த அரசாலேயே முடக்கப்பட்டுவிட்டது.




இப்போது அரசு கேபிள் டி.வி. நடவடிக்கைகளை புனரமைக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஏற்கெனவே தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவை, வேலூர் நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள் பராமரிப்பு செய்யப்பட்டுள்ளன. மீதி 27 மாவட்டங்களில் தனியார் வசம் உள்ள தலைமுனைகள் வாடகைக்கு பெறப்பட்டும், புதிதாக அனலாக் தொழில்நுட்ப கேபிள் டி.வி. கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டும் அரசு கேபிள் டி.வி. புனரமைக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் டி.வி. சேவையைத் தொடங்கும் பொருட்டு, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.க்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி 34,344 கேபிள் ஆபரேட்டர்கள், எம்.எஸ்.ஓ.க்கள் இந் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களிடம் 1.45 கோடி கேபிள் இணைப்புகள் உள்ளன.


தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பின் மூலம் கட்டணச் சேனல்கள் உள்பட 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். கட்டணச் சேனல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 2 முதல் ஒளிபரப்புச் சேவைகள் தொடங்கப்படும்.
இதற்காக சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக ரூ.70 மட்டும் ஆபரேட்டர்கள் வசூலிப்பார்கள் என
ஜெயலலிதா தெரிவித்தார்.

No comments:

Post a Comment