Tuesday, January 18, 2011

அருணாசலப் பிரதேசம் சர்ச்சைக்குரிய பகுதியே: சீனா பிடிவாதம்

பெய்ஜிங், ஜன. 17: அருணாசரப்பிரதேசம் சர்ச்சைக்குரிய பகுதிதான். சீனாவின் இந்த கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
அருணாசலப்பிரதேசம் தென் திபெத் என்றும் சீனா கூறியுள்ளது.
 கடந்த வாரம் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு விளையாட்டு வீரர்களுக்கு சீன அரசு தனித் தாளில் அச்சடிக்கப்பட்ட விசாவை வழங்கியது. இது தொடர்பாக இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.

 இந்த விவகாரம் எழும்பிய சில தினங்களில் அருணாசலப் பிரதேசம் தொடர்பான தமது கொள்கை எப்போதும் போலத்தான்.அதில் எந்த மாற்றமும் இல்லை என்கிற முடிவை சீனா அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலுவலக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
 கிழக்கு பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதி உள்ளிட்ட சீன-இந்திய எல்லை பிரச்னையில் சீனாவின் கொள்கை எப்போதும் ஒன்றுதான். இதை இந்திய தரப்பும் நன்கறியும். இந்த நிலை மாறாது. இந்திய-சீன எல்லையில் உள்ள கிழக்குப்பகுதியில் அருணாசலப்பகுதியும் அடங்கும். எல்லை பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா-சீனா நடத்திவரும் பேச்சுவார்த்தையில் இதுவும் அடங்கி உள்ளது. இதுவரை இருதரப்பும் 14 தடவை பேச்சு நடத்தி எந்த வித தீர்வையும் எட்டவில்லை.
 பியூஜியான் மாகாணத்தில் நடக்கும் பளு தூக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த வாரத்தில் அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 விளையாட்டு வீரர்களுக்கு சீனா, தனி தாளில் அச்சடிக்கப்பட்ட விசாவை வழங்கியது.

 இந்த செயல் இந்திய தரப்பை ஆத்திரத்தில் ஆழ்த்தியது. தனது எதிர்ப்பை இந்தியா பதிவு செய்தது. இந்நிலையில் தமது நிலையை சீனா தெளிவுபடுத்தியுள்ளது.
 விளையாட்டு போட்டியில் பங்கேற்க அருணாசலப் பிரதேச விளையாட்டு வீரர்கள் விமான நிலையம் சென்றபோது அந்த இருவரையும் குடியேற்றத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். தனித்தாளில் அச்சடிக்கப்பட்ட விசாவை சீனா வழங்கியதே இதற்கு காரணம். இவ்வாறு வழங்கப்படும் விசாவை இந்தியா அங்கீகரிக்காது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
 இதனிடையே,எல்லைப் பிரச்னை தீராத நிலையில் இத்தகைய விசா வழங்குவதை அனுமதித்தால்தான் அந்த பகுதி மக்கள் சீனா செல்லமுடியும். இதுதான் நடைமுறை ரீதியில் சாத்தியமானது என்பதால் இந்த ஏற்பாட்டை ஏற்க வேண்டும் என சர்வதேச சீன ஆய்வு நிறுவன ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment