Friday, January 14, 2011

பொங்கல்: நிரம்பி வழியும் ரயில், பஸ்கள்

சென்னை, ஜன. 13: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும், பஸ்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.
 


தொழில், வேலைவாய்ப்புக்காக தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை விடுமுறையில் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்கின்றனர்.


 சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை மட்டும் பல ஆயிரங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து விரைவு ரயில்களும் வழக்கம்போல நிரம்பி வழிகின்றன. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏற முண்டியடிக்கும் பயணிகளைக் கட்டுப்படுத்த நீண்ட வரிசையில் நிற்குமாறு ரயில்வே போலீஸôர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை இந்த ஏற்பாடுகள் தொடருமா என்பது சந்தேகமே.




 சிறப்பு ரயில்களிலும் நெரிசல்: கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி முதல் டிசம்பர் வரை மட்டும் 1,310 சிறப்பு ரயில்களை இயக்கியதன் மூலம் ரூ. 36 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 155 சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


 இதுதவிர நெரிசலை சமாளிக்கும் வகையில், பெங்களூர், கோயம்புத்தூர், திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 45 சிறப்பு ரயில்களும் நிரம்பி வழிகின்றன.


 இதில் பொங்கல் நாள்களில் எந்த ரயிலிலும் டிக்கெட் எதுவும் காலியில்லை. மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில்களிலும் 95 சத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.


 சிறப்பு ரயில்களில் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த, தூங்கும் வசதி உள்ள 1.39 லட்சம் இருக்கைகளும் (பெர்த்) முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.


 இதையடுத்து, பொங்கல் விடுமுறை நாள்களில் சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் முக்கிய ரயில்களில் கூடுதலாக 305 ரயில் பெட்டிகளை இணைத்து இயக்கவும் தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.




 பகல் நேர சேர் கார் விரைவு ரயில் சேவை: கடைசி நேர நெரிசலை சமாளிக்க மற்றொரு முயற்சியாக சென்னை- நாகர்கோவில் இடையே பகல் நேர விரைவு ரயில் சேவையை இரு மார்க்கங்களிலும் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ரயிலின் அனைத்து பெட்டிகளும் அமரும் இருக்கைகள் கொண்டதாக (சேர் கார்) இருக்கும். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியாகும் எனத் தெரியவந்துள்ளது.

 
நெரிசலைப் பயன்படுத்தி போலி முகவர்கள் முறைகேடாக பயணிகளிடம் ரயில் டிக்கெட்டுகளை விற்பதைத் தடுக்கும் வகையில், ரயில்வே போலீஸôர்- ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 


சிறப்பு பஸ்களாகும் டவுன் பஸ்கள்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் இதர முக்கிய இடங்களுக்கு அரசு விரைவு பஸ் கழகங்களின் 475 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. 


இதுதவிர 650 சிறப்பு பஸ்களை இயக்க அரசு விரைவு பஸ் கழகம் திட்டமிட்டுள்ளது.


 ரயில்கள் நிரம்பி வழிவதையடுத்து, இப்போது அரசு விரைவு பஸ்களை பயணிகள் முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால், பஸ்களிலும் நெரிசல் அதிகரித்துள்ளது.


 கூடுதல் கட்டண வசூல்: சென்னையில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவு பஸ்களில் இப்போதைய கட்டண விவரம் சாதாரண பஸ் (செமி டீலக்ஸ்) ரூ. 105. சொகுசு பஸ் (அல்ட்ரா டீலக்ஸ்) ரூ. 175. ஆனால், பொங்கல் நெரிசலைப் பயன்படுத்தி கடைசி நேரத்தில் 1,000 டவுன் பஸ்களை சிறப்பு பஸ்களாக இதர போக்குவரத்துக் கழகங்கள் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு இயக்க உள்ளன.


 இதற்காக திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இயக்கப்பட்ட சாதாரண பஸ்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.


 இதில் சென்னை- திருச்சிக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு (சாதாரண) பஸ்களில் கட்டணம் ரூ. 125 என்று முன்புற கண்ணாடியில் எழுதப்பட்டு, இயக்கப்படுகின்றன. இதே போல பிற இடங்களுக்கும் இயக்கப்படும் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், ஆம்னி பஸ்களை சாதாரண மக்கள் நெருங்கக் கூட இயலவில்லை.
 
நன்றி:தினமணி 

No comments:

Post a Comment