Sunday, January 16, 2011

பெட்ரோல் விலை ரூ.2.54 உயர்வு: விலைவாசி மேலும் அதிகரிக்கும் அபாயம்!

புதுதில்லி, ஜன.15: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


எண்ணெய் நிறுவனங்கள் நேற்று பெட்ரொல் விலையை உயர்த்தி அறிவித்தன. லிட்டருக்கு ரூ. 2.50 முதல் ரூ. 2.54 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இது இரண்டாவது முறையாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்த விலையேற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், ரூ. 2.50 என்ற அளவிலும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் லிட்., லிட்டருக்கு ரூ.2.54 என்ற அளவிலும் விலையை உயர்த்தி அறிவித்தன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.2.53 என்ற அளவில் உயர்த்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மத்தியில், மிகப்பெரிய உயர்வாக ரூ. 2.94 முதல் 2.96 வரை உயர்த்தி அறிவிக்கப்பட்ட பிறகு தற்போது இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை ஏற்றத்துக்குப் பிறகு, டெல்லியில் ஐ.ஓ.சி விற்பனை மையங்களில் ரூ.58.37 ஆகவும்,
ஹெச்பிசிஎல், பிபிசிஎல் பம்ப்களில் ரூ.58.39 ஆகவும் விலை இருக்கும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 92 டாலர் விலை அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment