Saturday, January 15, 2011

கணக்குக் கேட்டால் தப்பா?

இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதல்முறையாக பொதுக் கணக்குக் குழு முன்பாக இந்திய ராணுவத் தளபதிகள் நேரில் சென்று விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இந்த ஆண்டு உருவாகி இருக்கிறது.
 ராணுவத்தினருக்கான கேன்டீன்கள் மூலமாக 2003-ம் ஆண்டு முதல் 2009 நிதியாண்டு வரை, அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 441 கோடி என்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அரசுக்கு அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுக்கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி கடிதம் அனுப்பியதால், தரைப்படை, விமானப்படைத் தளபதிகள் வி.கே. சிங் மற்றும் பி.வி.நாயக், கப்பற்படை துணைத் தளபதி டி.கே. திவான் ஆகியோர் நேரில் சென்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.
 ராணுவம் நடத்தும் கேன்டீன்களுக்கெனத் தனியாகத் தணிக்கை முறைகள் ராணுவத்துக்குள்ளேயே இருப்பதால், ஆய்வுசெய்யும் அதிகார வரம்பு, தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறைக்கு இல்லை என்று தாங்கள் கூறியதாக இந்தத் தளபதிகள் கருத்து தெரிவித்தாலும், அது ஏற்கக்கூடியதாக இல்லை. ராணுவ ரகசியம் மற்றும் உளவுத் தகவல் அறிவதற்காகச் செலவிடப்படும் கணக்கில் காட்டப்பட வேண்டிய அவசியமில்லாத நிதிஒதுக்கீடு ஆகியன தொடர்பாக தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை ஆய்வு நடத்த முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். ராணுவப் பயிற்சிக்காகச் செலவிடப்படும் தொகை மற்றும் இந்தப் பயிற்சிகளில் வீணாகும் ஆயுதத் தளவாடங்கள், துப்பாக்கி ரவை, வெடிகுண்டுகள் குறித்தும் பொது கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்ப முடியாது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ராணுவம் நடத்தும் கேன்டீன்களில் பொருள்கள் வாங்கப்படும், விற்கப்படும் முறைகள் குறித்தும், அவற்றுக்காக மத்திய அரசு வழங்கும் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் கேள்வி கேட்கக் கூடாது, அதற்கான வரம்பு இல்லை என்று ராணுவத் தளபதிகள் சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை.

 தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் இரண்டு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். முதலாவதாக, ராணுவத்தின் மூலம் நடத்தப்படும் சுமார் 3,600 கேன்டீன்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கான சலுகைகளில் விதிமீறல் நடந்துள்ளது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக, ராணுவ கேன்டீனுக்குக் கொள்முதல் செய்யும் விலை, நடைமுறைக்குப் பொருந்தாததாக இருக்கிறது. இதனால், கேன்டீனுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெற வழி ஏற்படுகிறது.
 ராணுவ வீரர்களுக்கான மதுவிற்பனை இந்தக் கேன்டீன்கள் மூலம் நடைபெறுகிறது. இங்கு விற்கப்படும் மதுபானங்களுக்கு விற்பனை வரி, உற்பத்தி வரி ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு விலக்கு அளிப்பதால் ராணுவ வீரர்களுக்கு மிகக் குறைந்த விலையில் இந்த மதுபானங்களை விற்பனை செய்ய முடிகிறது. ராணுவம் எந்த அளவுக்கு மதுபானங்களைக் கொள்முதல் செய்யலாம் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறி, மதுபானங்களைக் கொள்முதல் செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
 தணிக்கைக் குழுவினர் ஆய்வு செய்ய பல கேன்டீன்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றாலும், இக்குழு புதுதில்லியில் 3 கேன்டீன்களில் மட்டுமே ஆய்வு செய்தவரையில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக இந்த மூன்று கேன்டீன்களும் ரூ. 8 கோடி மதிப்புள்ள மதுபானங்களை வாங்கி விற்றுள்ளன. இந்த ரூ. 8 கோடி மதுபானங்கள் வரிகளுடன் வெளிச்சந்தையில் விற்கப்பட்டிருந்தால் இதன் மதிப்பு ரூ.19.45 கோடி! அதாவது அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய வரி இழப்பு ரூ.11.45 கோடி இந்த 3 கேன்டீன்கள் மூலமாக மட்டுமே ஏற்பட்டுள்ளது.
 மதுபான விற்பனையில் மட்டும்தான் வரிவிலக்கு மூலம் குறைந்த விலை சாத்தியமாகிறது என்றல்ல. வாஷிங் பவுடர் முதல் வாஷிங் மெஷின், கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களும், இரு சக்கர வாகனங்களும், ஏன் தற்போது கார்களும்கூட இந்தக் கேன்டீன்கள் மூலமாக வாங்க முடியும். இவை அனைத்துமே வரிச் சலுகைகளால் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன.
 இவற்றை ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் மட்டுமே முழுக்கப் பயன்படுத்தினாலும்கூட இந்த இழப்பை அரசு பொருள்படுத்தாமல் விட்டுவிட முடியும். ஆனால், வெளிச்சந்தையில் அதிக விலை என்கிற ஒரே காரணத்துக்காகத் தங்கள் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுக்க முனையும்போதுதான் அதிகப்படியான கொள்முதலுக்கு வழியேற்படுகிறது. அரசுக்கும் வரி வருவாய் இழப்பதன் மூலம் இழப்பு ஏற்படுகிறது.
 ராணுவத்துக்கு எவ்வாறு மது ஒதுக்கீடு அளவு (லிக்கர் கோட்டா) இருப்பதைப் போன்று ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் ஏன் மது ஒதுக்கீட்டை தேவைக்கேற்ப நிர்ணயிக்கக்கூடாது. ஒரு ராணுவ வீரர் தன் குடும்பத்துக்காக ஒரு வீட்டு உபயோகப் பொருளை வாங்கிவிட்டால், அந்தப் பொருளை அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு வாங்க முடியாத நிலையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் இத்தகைய குளறுபடிகளை தடுத்துவிட முடியுமே.

 தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி முன்வைத்துள்ள இந்த இரு குற்றச்சாட்டுகளும் ராணுவத்தைக் களங்கப்படுத்தும் நோக்கத்தோடு செய்யவில்லை என்பதையும், குறைகளைக் களைய வேண்டிய அவசியம் ராணுவத்துக்கும் இருக்கிறது என்பதையும் பாதுகாப்புத் துறை புரிந்துகொள்ள வேண்டும். ராணுவத்திலும் சில கறுப்பு ஆடுகள் இருக்கவே செய்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ரூ. 4,000 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் காணாமல்போய், அவை அடுத்த சில மணி நேரங்களில் தில்லியின் புறநகர் சாலையில் வீசப்பட்டு கிடக்குமா?
 ராணுவத்தினருக்கும் ராணுவக் குடும்பத்தினருக்கும் அனைத்துவிதமான சலுகைகளையும் அளித்து ஊக்கப்படுத்தினால்தான், ராணுவத்தில் சேர்வதற்கான ஆர்வம் ஏற்படும் என்பது உண்மையே. ஆனால், இந்தப் பயன் ராணுவத்தினரின் குடும்பத்துக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டும் என்பதைக் கண்காணிப்பதிலும் உறுதிப்படுத்துவதிலும் என்ன தவறு இருக்க முடியும்?

No comments:

Post a Comment