Wednesday, February 2, 2011

எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாகட்டும்!!!

எகிப்து ஒரு மக்கள் புரட்சியின் அருகாமையில் உள்ளது. 30 ஆண்டுகளாக தொடரும்
அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர லட்சக்கணக்கான மக்கள்
அணிதிரண்டுள்ளனர். தலைநகரான கெய்ரோவில் மட்டுமின்றி எகிப்தின் பல நகரங்களிலும்
முபாரக்கின் ராஜினாமாவைக்கோரி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத்
துவங்கிவிட்டனர்.

ராணுவத்தை களமிறக்கிய போதும் அவர்கள் மக்களுடன் இணைகின்றார்கள் என செய்திகள்
வெளிவருகின்றன. ஊரடங்கு உத்தரவு பலனற்று போனது. ஆளுங்கட்சியின் தலைமையகம்
தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த அல்பராதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
இணையதளம் முடக்கப்பட்டது. அல்ஜஸீராவுக்கு தடை விதித்த பொழுதும் தொடர்ந்து
செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கிறது.

பல செப்படி வித்தைகளும் பயனற்று போனதால் நகைச்சுவையான நடவடிக்கையொன்றை
மேற்கொண்டார் முபாரக். அது வேறொன்றுமில்லை, ரகசிய புலனாய்வு பிரிவின் முன்னாள்
தலைவரும், இஸ்ரேலுடனான கடத்தல் தொழிலுக்கு இடைத் தரகராகவும் செயல்பட்டுவந்த
வயது முதிர்ந்த உமர் சுலைமானை துணை அதிபராக நியமித்ததுதான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு முறைகேடுகள் நிறைந்த தேர்தலை நடத்தி மீண்டும்
பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அதிபராக எழுந்தருளினார் முபாரக். அவருடைய
'மக்கள் ஆதரவை!' உலகம் தற்பொழுது கண்டுக்கொண்டிருக்கிறது.

கெய்ரோவின் கட்டுப்பாடு முபாரக்கின் கைகளிலிருந்து நழுவிவிட்டது.

1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சியுடன் தற்போதைய எகிப்திய மக்கள் திரள் போராட்டத்தை
அரசியல் நோக்கர்கள் ஒப்பிடுகின்றனர்.

1989-இல் ருமேனிய புரட்சியின் ஒரு பகுதியாக ரெவலூஷன் சதுக்கத்தில் திரண்ட
மக்கள் கூட்டத்திற்கு உதாரணமாக கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கம் காட்டப்படுகிறது.

வரலாறு மீண்டும் ஒருமுறை சர்வாதிகாரத்தை பழிவாங்க துவங்கிவிட்டது. 1981 ஆம்
ஆண்டு எகிப்து நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது ஹுஸ்னி செய்யத்
முபாரக் அதி விரைவாக மக்களின் உள்ளங்களிலிருந்து அகன்றுவிட்டார். இதர
சர்வாதிகாரிகளைப் போலவே முபாரக், மக்களின் விருப்பங்களை அடக்கி ஒடுக்கி,
தேர்தல்களில் முறைகேடுகளை நடத்தி, ஊழலை வழக்கமாக்கி எகிப்தை சுரண்டி சின்னா
பின்னப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஏகாதிபாத்திய நாடுகளுடனும், சர்வாதிகார அரசுகளுடனும் இணைந்துகொண்டு பொருளாதார
நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டார்.

ஈரானின் ஷா, ருமேனியாவின் செஷஸ்க்யுவாவைப்போல் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சியில்
தொடரலாம் என கருதிய முபாரக்கின் ஆட்சிக்கு மக்கள் புரட்சியின் வடிவில் உருவான
ஆபத்து அவரை ஆதரித்த அந்நிய சக்திகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு மத்தியில் அரபு நாடுகளிலேயே
இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற பதவியை ஹுஸ்னி முபாரக்கின் எகிப்திய
அரசு தக்கவைத்துக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் 130 கோடி டாலரை அமெரிக்கா
எகிப்திற்கு உதவித் தொகையாக வழங்கிவருகிறது.

இஸ்ரேலுக்கு அடுத்து அமெரிக்கா வழங்கும் அதிக உதவித் தொகையைப் பெறுவது
எகிப்தாகும். ஆனால், இந்த உதவித் தொகைகள் அனைத்தும் அமெரிக்க கார்ப்பரேட்
நிறுவனங்களுக்குத்தான் செல்கிறது என்பது மற்றொரு உண்மையாகும்.

அடக்குமுறையையும், மக்கள் விரோதத்தையும் வழக்கமாகக் கொண்ட முபாரக் சில
தினங்களுக்கு முன்பாக எகிப்தில் மக்கள் திரள் போராட்டம் உருவாகும் வரை
அமெரிக்காவின் உற்றத் தோழனாகவே இருந்தார். கடுமையான மனித உரிமை மீறல்கள், கொடிய
சித்திரவதைகள், அடக்குமுறைகள் இவையெல்லாம் நிகழும்பொழுது முபாரக்கை
அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஆதரித்தே வந்தனர்.

எகிப்தில் நடைபெற்றுவரும் மக்கள் திரள் போராட்டத்தின் முன்னணியிலிருப்பது
இளைஞர்களாவர். எகிப்தின் எதிர்காலம் அவர்களின் கைகளில் செல்லும் வேளையில் அங்கு
மக்கள் விரும்பும் அரசியல் வெற்றியை சந்திக்கும்.

முபாரக்கினால் தடைச் செய்யப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் இந்த மக்கள்
திரள் போராட்டத்திற்கு பின்னணியிலிருந்து ஆதரவை தெரிவித்து வருகிறது என
செய்திகள் கூறுகின்றன.

முபாரக்கினால் சிறையிலடைக்கப்பட்டுள்ள இஃவான்களின் தலைவர்களும்,
உறுப்பினர்களும் இந்த மக்கள் திரள் போராட்டத்தினால் மகிழ்ச்சியில்
ஆழ்ந்துள்ளனர். அல்பராதியின் தலைமையில் புதிய அரசு உருவாக வாய்ப்புள்ளது.
ஆனால், அல்பராதி அமெரிக்க ஆதரவாளராக மாறிவிடுவாரோ என்றதொரு சந்தேகமும்
எழுந்துள்ளது.

எகிப்து நாட்டு மக்கள் சர்வாதிகாரத்திற்கெதிராக தங்களை அர்ப்பணித்து நடத்தும்
போராட்டம் வீணாகிவிடாமல் கவனமாக இருப்பார்கள் என நம்புவோம். இனி முபாரக்கிற்கு
எகிப்தில் இடமிருக்காது. கேவலமடைந்த குற்றவாளியாக முத்திரைக் குத்தப்பட்டு
முபாரக் களத்தை விட்டு வெளியேறும் வேளையில் உலகில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக்
கொண்டு ஆட்டம்போடும் சர்வாதிகாரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையவேண்டும்.

ஜனநாயக நாடுகள் என்ற முகவரியில் இன்று உலகில் அறியப்படும் பெரும்பாலான
நாடுகளுக்கு எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாக அமையவேண்டும். எந்த தேசம்
ஊழல்களிலும், முறைகேடுகளிலும் திளைக்கின்றதோ அந்த தேசம் மனித உரிமைகளையும்,
மக்களின் குடியுரிமைகளையும் அடக்கி ஒடுக்கி பின்னர் குற்றவாளி தேசமாக
பரிணமிக்கும்.

இன்று உலகின் பல ஜனநாயக முகமூடியை அணிந்துள்ள நாடுகளின் நிலைமையும் இதுதான்.
மக்களின் விருப்பங்களை விட ஏகாதிபத்திய சக்திகளுக்கும், கார்ப்பரேட்
சக்திகளுக்கும் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தியவர் முபாரக்.
ஏராளமான மக்கள் நல ஆர்வலர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைக்கு ஆளாக்கினார்.
விசாரணையில்லாமலேயே பல ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர் பலர்.
நிரபராதிகளான மக்களை விசாரணை இல்லாமலேயே பல ஆண்டுகள் சிறையிலடைத்தவர்.
கறுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்து தனக்கு பிடிக்காதவர்களை ஒழித்துவிட அவர்
நினைத்தார்.இவையெல்லாம் சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆளும் நாடுகளில் மட்டுமல்ல,
ஜனநாயக முகமூடியை அணிந்துக்கொண்டு ஆட்சி நடைபெறும் நாடுகளிலும் நாம் காண
இயலும்.

இது சற்று குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்கலாம். எகிப்து மக்கள் புரட்சியை
கவனத்தில்கொண்டு இந்நாடுகள் தங்களின் செயல்பாடுகளை மீளாய்வுச் செய்யவேண்டும்.
இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்கூட மனித உரிமை மீறல்களும்,
அப்பாவிகளை அநியாயமாக சிறையில் அடைப்பதும், ஏகாதிபத்திய அழிவு சக்திகள்,
கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும்
நடந்துவருகிறதா? என்பதை பரிசோதனைக்கு உட்படுத்த ஆட்சியாளர்கள் தயாராகவேண்டும்.

உதாரணமாக கூறவேண்டுமெனில், சமீபத்தில் ட்ரான்ஸ்ப்ரன்சி இண்டர்நேசனல் வெளியிட்ட
பரிசுத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்தது 3.3 மதிப்பெண்கள்.
எகிப்திற்கு கிடைத்த மதிப்பெண் 3.1 ஆகும்.இதனை ஆட்சியாளர்கள் கவனத்தில்
கொள்ளவேண்டும்.

மக்களை அந்நியர்களாக மாற்றிவிட்டு ஆட்சியில் நீண்டகாலம் தொடரலாம் என எவரும்
கனவு காணவேண்டாம் என்பதைத்தான் எகிப்தின் மக்கள் புரட்சி நமக்கு உணர்த்துகிறது.

சுய பரிசோதனைக்கு உட்படுத்தி தவறுகளை திருத்துவதற்கு ஆட்சியாளர்கள்
தயாராகுவார்களா?

No comments:

Post a Comment