Saturday, February 5, 2011

மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை!!!

புதுடெல்லி,பிப்.5:2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில
முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

பாரபட்சமாக நடந்துக்கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும்,
பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது
குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

[image: INDIAREACTS.jpg]

2010 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி விசாரணையை பூர்த்திச் செய்து முத்திரை
வைக்கப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி சமர்ப்பித்த அறிக்கையை
டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதிலும், வகுப்புவெறியை தூண்டிவிட்ட
பத்திரிகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் மோடி தோல்வியடைந்தார் என
அவ்வறிக்கை கூறுகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலத்தில்
சட்ட-ஒழுங்கு பிரச்சனை திருப்தியாக உள்ளதாக குஜராத் அரசு தவறான அறிக்கை
வெளியிட்டதையும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

மோடியை குற்றமற்றவராக்கி எஸ்.ஐ.டி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஏற்கனவே
செய்திகள் வெளியாகியிருந்தன. மோடியின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கான
முயற்சிகளுக்கு கிடைத்த பதிலடி இவ்வறிக்கை என அப்பொழுது அத்வானி உள்ளிட்ட
பா.ஜ.க தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

பா.ஜ.கவின் எதிர்பார்ப்புகளுக்கு கடுமையான பதிலடி தரும்விதத்தில் முஸ்லிம்
இனப்படுகொலையில் மோடியின் பங்கைக் குறித்து எஸ்.ஐ.டியின் அறிக்கை விரிவாக
கூறுகிறது.

வகுப்புவாத சிந்தனையோடு செயல்பட்டார், உணர்ச்சியைத் தூண்டும் உரைகளை
நிகழ்த்தினார், முக்கியமான ஆதாரங்களை அழித்தார், சங்க்பரிவார உறுப்பினர்களை
அரசு தரப்பு வழக்கறிஞராக நியமித்தார், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை
மறுத்தார், இனப்படுகொலை நிகழும் வேளையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் சட்ட
விரோதமாக அமைச்சர்களை நியமித்தார். பாரபட்சமின்றி நடந்துக்கொண்ட அதிகாரிகளை
தொந்தரவுச் செய்தார் ஆகிய காரியங்களில் மோடி குற்றவாளி என எஸ்.ஐ.டியின் அறிக்கை
தெளிவுப்படுத்துகிறது.

அரசுத்துறைகள் ஒன்று செயலிழந்து போனது அல்லது கலவரத்தை மேலும்
கொளுந்துவிட்டெரியும் விதத்தில் செயல்பட்டது என அறிக்கை விரிவாக கூறுகிறது.

தீங்கு விளைவிக்கக்கூடிய, குற்றகரமான விமர்சனங்களை முஸ்லிம்களுக்கு எதிராக
தெரிவித்த மோடி உயர்ந்த பதவியிலிருந்துக் கொண்டு சிந்தனையற்ற பொறுப்பற்ற
முறையில் நடந்துக் கொண்டார் என எஸ்.ஐ.டியின் அறிக்கை கூறுகிறது.

*எஸ்.ஐ.டியின் அறிக்கையில் முக்கிய பகுதிகள்*:
1.குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா உள்பட மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள்
கொடூரமாக தாக்கப்பட்ட பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வரும், அரசும்
நடந்துக்கொண்டது. எல்லா வினைகளுக்கும் எதிர்வினைகள் உண்டு என்று கூறி
முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தை நியாயப்படுத்தினார் மோடி. கோத்ராவிலும், அதன்
சுற்று வட்டாரங்களிலும் குற்ற வாசனையுடையவர்கள் இருக்கின்றார்கள் என மோடி
குற்றஞ்சாட்டியது ஹிந்து-முஸ்லிம் பிரிவினரிடையே மேலும் உணர்ச்சியை
தூண்டிவிட்டது.

2.அசோக் பட், ஐ.கே.ஜடேஜா ஆகிய அமைச்சர்களை அஹமதாபாத் நகர போலீஸ் கட்டுப்பாட்டு
அறையிலும், மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் நியமித்தார். இனப்படுகொலை
நடைபெறும் பொழுது போலீஸ் நடவடிக்கைகளை இவர்கள் சீர்குலைத்ததற்கு காரணம் உள்துறை
அமைச்சகத்தின் பொறுப்பையும்
ஏற்றுக்கொண்டிருந்த மோடியின் ஆசீர்வாதத்தோடுதான். அசோக் பட் தொடர்ந்து
வி.ஹெச்.பி தலைவர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தார் என்பதை அவரது மொபைல் ஃபோன்
ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

3.இனப் படுகொலைகள் நடைபெறும் வேளையில் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்ட
நேர்மையான அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கு மாற்றம் செய்தார்.
பா.ஜ.க தலைவர்களின் சொல்லுக்கு கீழ்படியாததால்தான் உள்துறை அமைச்சகத்தின் கீழ்
இந்த இடமாற்றங்கள் நடந்தேறின.

4.இனப்படுகொலை நடந்த வேளையில் பரிமாறப்பட்ட வயர்லெஸ் செய்திகள் அழிக்கப்பட்டன.
இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கைக் குறித்து ஒரு ஆவணமும் மீதம் வைக்காமல்
அழிக்கப்பட்டன.

5.தலைநகரான அஹ்மதாபாத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைச் செய்யப்பட்ட
பகுதிகளுக்கு செல்லாமல், ஒரேநாளில் 300 கி.மீ பயணம் செய்து ரெயில் எரிக்கப்பட்ட
கோத்ராவுக்கு சென்று பாரபட்சமாக நடந்துக் கொண்டார். இந்த செயலுக்கு மோடி எந்த
காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

6.வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களை அரசுதரப்பு வழக்கறிஞர்களாக
நியமித்தார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களெல்லாம் ஏதேனும் வகையில்
சங்க்பரிவார்களுடன் தொடர்புடையவர்கள்.

7.2002 பிப்ரவரி 28-ஆம் தேதி வி.ஹெச்.பி அறிவித்த சட்டவிரோத முழு அடைப்பினை
தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. முழு அடைப்பிற்கு பா.ஜ.க ஆதரவு
தெரிவித்தது.

8.பிப்ரவரி 28-ஆம் தேதி நரோடாவில் மதியம் 12 மணி தாண்டிய பிறகும், மேகானி
நகரில் மதியம் இரண்டு மணிவரையும் போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை.
அப்பொழுது நிலைமை கைநழுவிப் போனது.

9.நரோடா, குல்பர்க் சொசைட்டி கூட்டுப் படுகொலைகளில் போலீஸ் ஆழமாக
விசாரிக்கவில்லை. வி.ஹெச்.பி, பா.ஜ.க தலைவர்களின் ஃபோன் ஆவணங்களை
பரிசோதிக்கவில்லை.

10.அமைச்சர்களான கோர்தான் ஸதாஃபியா, மாயாபென் கோட்னானி ஆகியோருக்கு எதிராக
தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

ரெய்டுகள் நடத்துவதற்கும், கைதுச் செய்வதற்கும் அதிகாரமில்லாததால் மோடி
உள்ளிட்டவர்களின் வாக்குமூலத்தை பதிவுச்செய்து, ஆவணங்களை பரிசோதித்தும் அறிக்கை
தயார் செய்ததாக எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment