Sunday, February 27, 2011

காமன்வெல்த் போட்டி ஊழல்: கல்மாடி இன்று கைதாகிறார்?

டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி இன்று கைதாவார் என்று தெரிகிறது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை கவனித்த இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடியும், அவர் கீழ் பணியாற்றியவர்களும் ஊழலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. போட்டிகளுக்கான உபகரணங்கள் வாங்கியது, ஒளிபரப்பு உரிமை கொடுத்தது, வீரர்களுக்கு உணவு தயாரிக்க ஒப்பந்தம் விட்டது உள்பட எல்லாவற்றிலும் சுரேஷ் கல்மாடி பல கோடி ரூபாய் சுருட்டியது தெரியவந்துள்ளது.


காமன்வெல்த் ஊழல் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போட்டி அமைப்பு குழு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி வேட்டை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றை ஆய்வு செய்த போது ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுரேஷ் கல்மாடி அனுமதி கொடுத்ததன் பேரில் நடந்து கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.


இதனால் கடந்த ஒரு மாதமாகவே சுரேஷ்கல்மாடி கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானபடி உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காமன்வெல்த்தில் ஊழல் குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்த சுரேஷ் கல்மாடியை கைது செய்யும் நடவடிக்கையை சி.பி.ஐ. தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. ராஞ்சியில் இன்று மாலை தேசிய விளையாட்டு நிறைவு விழா நடக்கிறது. அது முடிந்ததும் சுரேஷ் கல்மாடி எந்த நேரத்திலும் கைதாவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


No comments:

Post a Comment