Friday, October 23, 2015

வெளிச்சத்திற்கு வரும் இலங்கை ராணுவத்தின் போர்குற்றங்கள் : அம்பலப்படுத்திய சிறப்புக்குழு அறிக்கை!.


தமிழர்களுக்கு எதிரான இறுதிகட்டப் போரின்போது இலங்கை ராணுவம் கொடிய போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக எழுந்த புகார்கள் உண்மையான வைதான் என்று அரசு விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள் ளது.


போர்க்குற்றம் தொடர்பாக உள்நாட்டு அளவில் விசாரணை நடத்தும்போது அதில் வெளி நாட்டு நீதிபதிகளையும் சேர்க்க வேண்டும் என்ற ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கையில் 2009-ம் ஆண்டில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதிக் கட்ட போர் நடைபெற்றது. இதில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல் லப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
உள்நாட்டுப் போர் நிறைவடைந் தப் பிறகு காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரிக்க முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பதவிக் காலத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி மாக்ஸ்வெல் பரணகம தலைமையில் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவில் சுரஞ்சன வித்தியாரத்ன, மனோ ராமநாதன், ரத்நாயக்க, சுமதிபால ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
முதலில் காணாமல் போன வர்கள் குறித்து மட்டும் விசாரித்த இக் குழுவின் விசாரணை வரம்பு, போர்க் குற்ற புகார்களை விசாரிப் பதற்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் 178 பக்க விசாரணை அறிக்கையை குழுவின் தலைவர் நீதிபதி மாக்ஸ்வெல் அண்மையில் அதிபர் சிறிசேனவிடம் வழங்கினார். இந்த அறிக்கை நேற்றுமுன்தினம் நாடா ளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவம் கொடுங்குற்றங்களை புரிந்தது என்று சுமத்தப்பட்ட புகார்கள் நிரூபணமாகி உள்ளன. இவற்றை இன்னும் திட்டவட்டமாக நிரூபித்தால் ராணுவத்தில் இடம்பெற்ற சில வீரர்கள் கொடும் குற்றங்களை புரிந்ததும் அது போர்க்குற்றம் என அறுதியிட்டு சொல்லவும் முடியும்.
போர்க் குற்றப் புகார்கள் தொடர் பாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடலாம். இலங்கை சட்டஅமைப்புக்கு உட்பட்டு போர்க்குற்றங்கள் பிரிவு ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
இறுதிகட்டப் போரின்போது நடந்த கொடுமைகளை காட்சிப் படுத்தி ‘நோ பயர் ஸோன்’ என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ போலி அல்ல, உண்மையானதுதான்.
தமிழ் சிறைக்கைதிகளை இலங்கை ராணுவ வீரர்கள் கொடூரமாக கொலை செய்யும் இந்த வீடியோ பதிவுகள் நிஜமானவைதான் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த வீடியோ காட்சிகள் பற்றி நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துவதுதான் நியாயமாகும்.
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைத் தலைவர்களான நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் வெள் ளைக்கொடியுடன் வந்தபோது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் நீதிபதி ஒருவர் தலைமையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்
இறுதிகட்டப் போரின்போது சரணடைய வந்த விடுதலைப் புலிகள் ராணுவத்தால் ஈவிரக்க மின்றி கொல்லப்பட்டனர் என்ற புகார்களை அடியோடு நிராகரித்துவிட முடியாது. சட்ட நியதி மீறி நடந்துள்ள கொலைகள் மற்றும் சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்டது பற்றி நீதிபதி தலைமையில் விசாரிக்கப்பட வேண்டும். ராணுவத்தின் கொடூரத்தால் முடமானவர்கள், ராணுவ காவலில் வைக்கப்பட்டு கொல்லப்பட்டோர் பற்றியும் இந்த விசாரணை யில் சேர்க்கப்பட வேண்டும்.
போர்க்குற்றம் பற்றிய விசாரணை நம்பகத்தன்மை மிக்க தாக இருக்க வேண்டும் என்றால் சர்வதேச நீதிபதிகள் இந்த விசாரணையில் இடம்பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி நிருபர் மக்ரே, இலங்கை இறுதிக்கட்டப் போர் குறித்த செய்திகளை சேகரித்து வெளியிட்டார். அந்த செய்தியில் வெளியான கொடூர வீடியோ காட்சிகள் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.
போர்க்குற்ற செய்தி, வீடியோ காட்சியை சேனல் 4 வெளியிட்டபோது அதை அன்றைய இலங்கை அரசு மறுத்ததுடன் போலி என்றும் வாதிட்டது. அந்த வீடியோ உண்மையானது என்று விசாரணைக் குழு கூறியிருப்பது முன்னாள் அதிபர் ராஜபக்சவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில், இலங்கை போர்க்குற்றம் குறித்து அந்த நாட்டு நீதித் துறை மேற்பார்வையில் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட் டது உண்மை என்று பரணகம குழு அறிக்கை அளித்தி ருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment