Tuesday, October 27, 2015

சிரிய அகதிகள் : அமெரிக்காவே குற்றவாளி !

சிரியாவிலிருந்து அகதியாகத் தப்பியோடி வந்து, மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததால் கடலில் மூழ்கி, அய்லான் என்ற இளம் சிறுவன் கரையோர மண்ணில் பிணமாகப் புதைந்து கிடந்த காட்சி, உலகெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


குர்து சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அய்லானின் பெற்றோர்கள் தமது குடும்பத்துக்கு கனடாவில் தஞ்சம் கோரியதை அந்நாட்டு அரசு ஏற்க மறுத்துவிட்டதால், ஐரோப்பாவில் ஏதாவதொரு நாட்டில் தஞ்சம் புக அக்குடும்பம் கள்ளத்தனமாக படகில் சென்றபோதுதான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. சிறுவன் அய்லானைப் போலவே இன்னும் பல நூறு பேர் கடந்த சில மாதங்களில் கடலில் மூழ்கி மாண்டு போயுள்ளனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்துள்ள புலம் பெயர்வுகளிலேயே மிகப் பெரியது என்று குறிப்பிடுமளவுக்கு சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் குவிந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் மத்தியத் தரைக்கடலைக் கடந்து இதுவரை 4 லட்சத்துக்கும் மேலான சிரிய மக்கள் அகதிகளாக, வெட்டவெளியில் ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளில் துவண்டு கிடக்கின்றனர்.
உலகின் கார்ப்பரேட் முதலாளிகள் பிற நாடுகளில் மூலதனமிட்டு அந்நாட்டையும் மக்களையும் கொள்ளையிடலாம், மூலதனம் உலகம் முழுவதும் எவ்விதத் தடையுமின்றி பாயலாம் என்ற உலகமயமாக்கக் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்திவரும் ஏகாதிபத்தியவாதிகள், மறுபுறம் ஏழை நாடுகளின் மக்கள் ஏகாதிபத்திய நாடுகளுக்குள் நுழைவதை எதிர்க்கின்றனர். அந்நாடுகளின் போலீசாரால் மிருகத்தனமாக தாக்கப்பட்டு அகதிகள் விரட்டியடிக்கப்படுகின்றனர். தனது நாட்டின் எல்லையில் உள்ள சுரங்க ரயில் பாதையில் அகதிகள் நுழைவதைத் தடுக்க கோடிக்கணக்கில் பிரிட்டிஷ் அரசு செலவிட்டு வருகிறது. ஹங்கேரி அரசானது, செர்பியாவை ஒட்டிய எல்லையில் ஏறத்தாழ 12 அடி உயரமுள்ள முள்வேலியை அமைத்து அகதிகள் நுழைவதைத் தடுக்கிறது. ஐரோப்பாவின் நவ நாஜிக் குழுக்கள் அகதிகளான அந்நியரை வெளியேற்ற வேண்டுமென ஆர்ப்பாட்டங்களை நடத்தி நள்ளிரவில் தீ மூட்டி அச்சுறுத்துகின்றன. இத்தனைக்கும் நடுவிலும் ஐரோப்பிய உழைக்கும் மக்களும் தன்னார்வ நிறுவனங்களும் தப்பியோடிவரும் அகதிகளுக்கு மனிதாபிமான உள்ளத்தோடு உதவிகளைச் செய்து வருவதோடு, அகதிகளை அனுமதித்து மறுவாழ்வளிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
அகதிகள் மீது நாளும் தொடரும் அட்டூழியங்கள் – அடக்குமுறைகள், எல்லைகளிலுள்ள முள்வேலிகளை முறித்துக் கொண்டு உள்ளே நுழையும் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி கண்ணீர் புகைக்குண்டு வீசி விரட்டியடிக்கும் கொடூரம், கண்டெய்னர் லாரிகளில் இரகசியமாக தப்பிக்க முயற்சித்தவர்கள் மூச்சுமுட்டி மாண்டுபோகும் அவலம், மத்தியத் தரைக்கடலில் பிணங்கள் கொத்துக்கொத்தாக மிதந்து கரை ஒதுங்கும் கோரம் – என முதலாளித்துவ உலகின் மனிதாபிமானமற்ற கொடூரத்தைக் கண்டு உலகமே காறி உமிழ்கிறது. அகதிகளின் அவலங்களும் ஐரோப்பிய நாட்டு அரசுகளின் அடக்குமுறைகளும் உலகெங்கும் அம்பலமாகத் தொடங்கி, குறிப்பாக சிறுவன் அய்லான் பிணமாக மண்ணில் புதைந்துள்ள புகைப்படம் வெளியாகி கண்டனங்கள் வலுத்த பிறகுதான், ஐரோப்பிய அரசுகள் வரம்புக்குட்பட்ட அளவுக்கு அகதிகளைத் தற்காலிகமாக ஏற்பதாக அறிவித்துள்ளன.
சிரிய அகதிகள்
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயன்று, படகு கவிழ்ந்து மத்தியத் தரைக்கடலில் தத்தளிக்கும் சிரிய அகதிகளை மீட்கும் கிரேக்க போலீசார்.
சிரியாவிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பியோடுவது ஏன், அந்நாட்டில் எதற்காகப் போர் நடக்கிறது, அதற்கு யார் காரணம் என்பதைப் பற்றி ஊடகங்கள் அரைகுறை உண்மைகளையே கூறிவருகின்றன. இஸ்லாமிய நாடுகள் என்றாலே அங்கு ஜனநாயகமோ, அமைதியோ இருக்காது, அராஜகமும் இனக்குழுக்களின் வன்முறைத் தாக்குதலும்தான் இருக்கும் என்ற கருத்து மக்களின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே அகதிகளுக்கு மனிதாபிமானத்துடன் இடம் கொடுத்து உதவலாம் என்றாலும், இத்தனை இலட்சம் பேர் அகதிகளாக வந்தால் ஐரோப்பிய நாடுகளால் எப்படிச் சமாளிக்க முடியும் என்று வாதிட்டு, இது  இஸ்லாமிய நாடுகள் ஏற்படுத்திய பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், சிரியாவில் கூலிப்படைகள் நடத்தும் போருக்கும், பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அல்லற்படுவதற்கும் முழுமுதற் காரணம் அமெரிக்காதான். நிலையான அமைதிக்கும் ஜனநாயகத்துக்கும் நிற்பதாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள்தான் சிரியாவில் அதிபர் அல் அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்து தமக்கு விசுவாசமான ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் கைக்கூலிகளைக் கொண்டு மத, இன மோதல்களைத் தூண்டிவிட்டு அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைத்து, மனிதப் பேரழிவைத் தோற்றுவித்த கிரிமினல் குற்றவாளிகளாவர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகை மேலாதிக்கம் செய்யும் வெறியோடு புறப்பட்ட அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், பேரழிவு ஆயுதங்களை ஒழிப்பது, போக்கிரி அரசுகளைத் தண்டிப்பது, மனித உரிமை – ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் மேற்காசியாவை மறு காலனியாக்கும் தமது திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.
இதன்படி, ஆப்கானில் அன்றைய சோவியத் வல்லரது தனது படைகளை விலக்கிக் கொண்டு வெளியேறியதும், அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட  தாலிபான்களின் ஆட்சி அங்கு நிலைநாட்டப்பட்டது. இருப்பினும் தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் தத்தமது நலன்களையொட்டி முரண்பாடுகள் எழுந்ததால், பின்லேடனின் அல்-கய்தா இயக்கம் வளரத் தொடங்கி தாலிபான்களும் அதனுடன் இணைந்ததும், அல்-கய்தா இயக்கம் ஆப்கான் மட்டுமின்றி, உலகையே அச்சுறுத்தும் கொடிய பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்டு, அமெரிக்காவின் போர்த்தாக்குதல்களால் ஆப்கான் சிதைக்கப்பட்டு அமெரிக்காவின் மேலாதிக்கம் நிறுவப்பட்டது.
சிரிய அகதிகளின் அவலம்
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல துருக்கி எல்லையில் அனுமதிக்காகக் காத்திருக்கும் சிரிய அகதிகளின் அவலம்.
அதன் பிறகு, இராக்கில் சதாம் உசைனின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு, தனது நோக்கங்களுக்குச் சேவை செய்யும் வகையிலான ஷியா பிரிவு முஸ்லிம்கள் தலைமையில் ஒரு பொம்மை அரசை உருவாக்கி, ஜனநாயகத்தையும் அமைதியையும் நிலைநாட்டிவிட்டதாக அமெரிக்கா கூறிக் கொண்டாலும், சன்னி பிரிவு  பயங்கரவாதக் குழுக்கள் நடத்தும் எதிர்தாக்குதலால் இன்று அந்நாடே குருதிச் சேற்றில் மூழ்கிக் கிடக்கிறது.
அதைத் தொடர்ந்து லிபியாவைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர 2011-ல் அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. லிபிய அதிபர் கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதிகாரத்தைக் கைப்பற்ற அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்ட போட்டி குழுக்களுக்கிடையிலான மோதல்கள் உள்நாட்டுப் போராக முற்றி, இரத்தக்களறியின் நடுவே பல்லாயிரக்கணக்கான லிபிய மக்கள் அகதிகளாக மத்தியத் தரைக்கடல் வழியே ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்தனர்.
மேற்காசியாவுக்கான உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத்தின் ஒரு அங்கமாக, அதன் பிறகு சிரியாவில் ஆட்சி மாற்றம் செய்து தமக்கு விசுவாசமான அரசை நிறுவ இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களை அமெரிக்கா ஊட்டி வளர்த்தது. இராக்கில் நேரடி ஆக்கிரமிப்புப் போரை நடத்திய அமெரிக்கா, இப்போது சிரியாவில் அதுபோல் நேரடி ஆக்கிரமிப்பு செயாமல் வான்வழித் தாக்குதல்களை நடத்துவது, கைக்கூலிகளான உள்நாட்டு தீவிரவாதக் குழுக்களைத் தூண்டிவிடுவது என்ற உத்தியுடன் தனது மேலாதிக்கத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
சிரியா என்பது அரபு ஷேக்குகள் ஆளும் நாடல்ல. இதர அரபு நாடுகளை ஒப்பிடும்போது கல்வியறிவிலும் நாகரிகத்திலும் மேம்பட்ட நாடாகும். ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சியாகவும் ஏகாதிபத்தியங்களுடனான உறவில் இரட்டைத் தன்மை கொண்டதாகவும் இருந்தபோதிலும், சிரியாவின் அல் அசாத் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசாகவே இருந்து வருகிறது. பல்வேறு மத, இன குழுக்கள் இருந்த போதிலும், அந்நாட்டில் மத, இன மோதல்கள் நடந்ததில்லை.
சிரிய அகதிகள்ஆனால், இன்று அந்நாட்டில் கைக்கூலி இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களைக் கொண்டு, இந்த மோதலைத் தீவிரப்படுத்தி அந்நாட்டை குருதிச் சேற்றில் மூழ்கடித்ததே அமெரிக்காதான். 
இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களைக் கைக்கூலிகளாகக் கொண்டு மேற்காசியாவைத் தனது மேலாதிக்கத்துக்கேற்ப மாற்றியமைக்கும் அமெரிக்காவின் போர்த்தந்திரத் திட்டத்தின் விளைவாக, இன்று பல்வேறு இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் மேற்காசிய நாடுகளின் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டன. அமெரிக்காவாலும் முதலான நாடுகளாலும் ஊட்டி வளர்க்கப்பட்ட பல்வேறு இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் இணைந்து இன்று ஐ.எஸ். என்ற மிகப்பெரிய சன்னி பிரிவு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமாக வளர்ந்து, அதன் அட்டூழியங்களும் கொலைவெறியாட்டங்களும் தலைவிரித்தாடுகின்றன.
சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்கா நடத்திவரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான போர்தானேயன்றி, அமெரிக்கா கூறிக்கொள்வது போல அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவது அதன் நோக்கமல்ல. எண்ணெய் வளமிக்க மேற்காசியப் பிராந்தியம் தனது மேலாதிக்கத்தின் கீழ் இருக்க வேண்டுமென்பதற்காகவே, மத – இனப் பிரிவுகளுக்கிடையே மோதலைத் தூண்டி, இத்தகைய முறுகல்நிலையும் போர்த்தாக்குதல்களையும் தொடர்ந்து நீடிக்கச் செய்து, நிரந்தரமாகத் தலையிடுவதற்கான முகாந்திரத்தை உருவாக்கிக் கொள்வதென்பதே அமெரிக்காவின் உத்தியாக உள்ளது.
இந்த உண்மைகளை மூடிமறைத்துவிட்டு, சிரியாவில் உள்நாட்டுப் போர் நடப்பதால்தான் அகதிகள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், அகதிகள் குவிவதால் ஐரோப்பிய கண்டமே நெருக்கடியில் சிக்கி இக்கட்டான நிலைமைக்கு ஆளாகி நிற்பதைப் போலவும் ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது ஊடகங்களும் கூசாமல் புளுகி வருகின்றன.

No comments:

Post a Comment