Tuesday, December 10, 2013

சிங்கப்பூர் கலவரம்.. உண்மையில் நடந்தது என்ன?

பொது ஒழுக்கம், போக்குவரத்து விதிகளில் கறார், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்காமை போன்றவை சிங்கப்பூருக்கே உரிய சிறம்பம்சங்களாகும். ஆனால் இவை அனைத்தும் நேற்று சில மணி நேரம் மீறப்பட்டதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் சிங்கப்பூர்வாசிகள். குறிப்பாக அங்கு வேலைக்குப் போய் செட்டிலாகியுள்ளத இந்தியர்கள் - தமிழர்கள். சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று. மக்கள் தொகையில் பத்து சதவீதமுள்ளனர் தமிழர்கள்.


இந்த கலவரத்துக்கு தமிழர்கள் காரணம் என ஊடகங்களில் பரவும் செய்திகள் மற்றும் அதுகுறித்த விமர்சனங்கள் சிங்கப்பூர் தமிழர்களை பெரிதும் பாதித்துள்ளது. "இந்த கலவரச் செய்தி காதில் விழுந்ததிலிருந்து என்னால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சும்மாவே 'போன இடத்தில் தமிழர்கள் அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு போகவேண்டியதுதானே' என்பார்கள். இப்போது கேட்கவே வேண்டாம்... என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை. சிங்கப்பூரில் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை," என்கிறார் சிங்கப்பூர் வாழ் தமிழர் ரமேஷ். சரி அப்படி என்னதான் நடந்தது? "இது ரொம்ப சாதாரண சம்பவம். ஆனால் தேவையில்லாமல் பெரிய கலவரமாக்கிவிட்டார்கள். ஆனால் அத்தனையையும் ஜஸ்ட் 2 மணி நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது சிங்கப்பூர் அரசு. லிட்டில் இந்தியா பகுதியில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் கூட்டம் அலைமோதும். கூட்டம் என்றால் உங்க ஊரு கூட்டம் எங்க ஊரு கூட்டமில்லை... நம்ம தி நகர் ரங்கநாதன் தெருவைவிட அதிகமாக இருக்கும் நெரிசல். அந்தப் பகுதியில் பீர் போன்ற மதுவகைகளை வெளியில் வைத்தே குடிக்க அனுமதி கொடுத்துள்ளது அரசு. பணியாளர்கள், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷைச் சேர்ந்த இளைஞர்கள்தான் நிறைய அங்கு வந்து குடிப்பார்கள். குடிபோதையில் பஸ் ஏறப்போன இளைஞன் தவறி விழுந்துவிட்டான். அந்த விபத்தில் அங்கேயே அவன் இறந்துவிட்டான். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பொதுச் சொத்துகள் சேதமாக்கப்பட்டு, போலீசார் தாக்கப்பட்டு, ஒரு ஆம்புலன்ஸ் கூட எரிந்துவிட்டது. இந்த கலவரம் தொடர்பாக 27 பேரை சிங்கப்பூர் போலீஸ் கைது செய்துள்ளது. கலவரம் நடந்த பகுதியில் வைக்கப்பட்ட சிசிடிவி காமிராவில் பதிவான முகங்களை வைத்து கலவரக்காரர்களை அடையாளம் கண்டு வருகிறார்கள் போலீசார். கலவரம் நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. ஏற்கெனவே வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது. இனி வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கான நிபந்தனைகள் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி," என்கிறார் ரமேஷ்.

source at: http://tamil.oneindia.in/news/

No comments:

Post a Comment