Tuesday, February 14, 2012

இந்தியா-ஈரா​ன் நட்புறவை சீர்குலைக்​க இஸ்ரேலே குண்டுவெடிப்பை நிகழ்த்தியு​ள்ளது – ஈரான் குற்றச்சாட்​டு


டெஹ்ரான்:புதுடெல்லியிலும், திப்லிஸிலும் தங்களது தூதரகங்கள் அருகே குண்டுவெடிப்புகளை இஸ்ரேலே நடத்திவிட்டு எங்களின் மீது பழிபோடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் தூதரகத்தின் கார் டெல்லியில் அதிதீவிர பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நேற்று(திங்கள்கிழமை) மதியம் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இது விபத்தா? அல்லது குண்டுவெடிப்பா என்பது குறித்து இறுதி முடிவு வெளியாகவில்லை. ஆனால், இச்சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் ஈரானும், ஹிஸ்புல்லாஹ்வும் உள்ளது என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.


பிரதமர் மன்மோகன்சிங்கின் அதிகாரப்பூர்வ இல்லமான எண்.7, ரேஸ்கோர்ஸ் சாலையில் இருந்து அதிக தூரம் இல்லாத துக்ளக் சாலையில் இஸ்ரேல் தூதரகத்தின் 109 சி.டி 35 எண்டயோட்டா இன்னோவா கார் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. வாகனத்தில் இருந்த இஸ்ரேல் தூதரக பெண் அதிகாரி தால் யஷோவா மற்றும் ஓட்டுநர் மனோஜ் சர்மா ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்த இதர இரு நபர்கள் அருகில் நின்ற வாகனத்தில் இருந்தவர்கள் ஆவர். யஷோவாவிற்கு அறுவை சிகிட்சை செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள், இஸ்ரேலிய தூதரகத்தின் காரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். சிக்னலில் நிற்கும்போது வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்களை காரின் பின்னால் வைத்ததாக நேரடியாக பார்த்தவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் கடந்துசென்ற பிறகு சற்றுநேரம் கழித்து விபத்து நிகழ்ந்துள்ளது. கார் தீப்பிடித்த வேளையில் சிறிய குண்டுவெடிப்பு சத்தமும் கேட்டுள்ளது.
ஃபாரன்சிக் சயன்ஸ் லேபரேட்டரியில் இருந்து நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தினர். தேசிய பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். விரிவான விசாரணை நடந்துவருகிறது. நாட்டில் தூதரகங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.என்.ஜி சிலிண்டர் பொருத்திய இஸ்ரேலிய தூதரக வாகனம்தான் விபத்தில் சிக்கியது. அருகில் உள்ள சி.என்.ஜி பம்பில் இருந்து எரிபொருளை நிரப்பிவிட்டு வெளியே வந்த வாகனம் சற்றுநேரத்தில் வெடித்துள்ளது. வெடிப்பொருட்கள்களின் சிதறல்களை கண்டுபிடித்ததாக போலீஸ் கூறியது. கூடுதல் விசாரணைக்கு பின்னரே குண்டுவெடிப்பின் காரணம் உறுதிச் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சக ஸ்பெஷல் செகரட்டரி கூறியுள்ளார்.
ஜார்ஜியாவிலும் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு குண்டு வைக்கப்பட்டிருந்தது. அதனை அதிகாரிகள் கண்டுபிடித்து அப்புறப்படுத்தினர். இதனிடையே உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேல் தூதரகங்களை அந்நாட்டு அரசு உஷார் படுத்தியுள்ளது.
குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இஸ்ரேல் வெளியுறவு துறை அமைச்சர் அவிக்டர் லிபர்மனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என லிபர்மனுக்கு உறுதி அளித்ததாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.


ஹிஸ்புல்லாஹ் தலைவர் இமாத் முக்னியை இஸ்ரேல் கொலைச் செய்த நான்காவது ஆண்டு நினைவு தினத்தில் இரண்டு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இத்துடன் குண்டுவெடிப்புகளை இணைக்க முயற்சிக்கிறது இஸ்ரேல். இச்சம்பவங்களின் பின்னணியில் ஈரானும், ஹிஸ்புல்லாஹ்வும் செயல்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் ஈரானுடன் உறவை வலுப்படுத்த இந்தியா எடுத்து வரும் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தவும் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் ஒட்டு குண்டு(ஸ்டிக்கிங் பாம்ப்) இதற்கு முன்பு இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் பயன்படுத்தாத புதிய முறையாகும் என போலீசார் கூறுகின்றனர். ஏற்கனவே ஈரானில் அணு விஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டது ஸ்டிக்கிங் பாம்பை அவர்கள் சென்ற காரில் பொருத்தியதன் மூலமாகும். இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஈரானின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மெஹ்மான் பெரஸ்த் கூறுகையில்; ‘புதுடெல்லி, திப்லிஸி(ஜார்ஜியா) ஆகிய இடங்களில் உள்ள தங்களது தூதரகங்களில் இஸ்ரேலே தாக்குதல்களை நிகழ்த்திவிட்டு ஈரான் மீது பழிபோடுகிறது. ஈரானுடன் இந்தியா மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகள் வைத்திருக்கும் நட்புறவை சீர்குலைப்பதே இஸ்ரேலின் திட்டமாகும். இஸ்ரேல் இம்மாதிரியான தீவிரவாத தாக்குதல்கள் மூலம் ஈரானுடன் மனோரீதியான போரை துவக்கியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment