Saturday, February 11, 2012

மும்பை இரட்டை குண்டுவெடிப்பு: 3 பேரின் தூக்கு தண்டனையை உறுதிச்செய்தது உயர்நீதிமன்றம்


மும்பை:மும்பை இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லஷ்கர்-இ-தய்யிபா உறுப்பினர்கள் என கூறப்படும் 3 பேருக்கு மும்பை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதிச்செய்துள்ளது.


அஸ்ரத் அன்சாரி(32), ஹனீஃப் சையத் அனீஸ்(46), பஹ்மிதா சையத்(43) ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதில் ஹனிப் அனீஸ், பெஹ்மிதா ஆகியோர் கணவன் மனைவி ஆவர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அப்பீல் மனு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2003 ஜூலை  28-ஆம் தேதி மும்பை இந்தியா கேட்டிலும், ஸவேரி பஸாரிலும் 57 பேரின் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தை சார்ந்தவர்கள் என கூறப்படும் 3 பேர் இணைந்து குண்டுவெடிப்பிற்கு சதி திட்டம் தீட்டியதாக அரசு தரப்பு வாதிட்டது. ஏழு பேர் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். இதில் 3 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் விடுதலையானார்கள். ஒருவர் அப்ரூவராக மாறினார். இன்னொரு நபர் விசாரணையின் போது மரணமடைந்தார்.

No comments:

Post a Comment