Wednesday, February 1, 2012

நிலபேர ஊழல்:எடியூரப்பாவின் அப்பீல் தள்ளுபடி


பெங்களூர்: நிலபேர ஊழல் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி எடியூரப்பா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
பெங்களூர் அருகேயுள்ள அரகெரே, தேவரசிக்கன ஹள்ளி, கெட்டத ஹள்ளி ஆகிய இடங்களில் பெங்களூர் வளர்ச்சி ஆணையம் (பிடிஏ) கையகப்படுத்திய நிலத்தை விடுவித்து தனது மகன்களுக்கு சாதகமாகச் செயல்பட்டதாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் ராகவேந்திரா, மருமகன் சோஹன்குமார் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குரைஞர் சிராஜின் பாஷா மற்றும் பால்ராஜ் ஆகியோர் சிறப்பு லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் தனி மனு தாக்கல் செய்தனர்.


இது தொடர்பான விசாரணை லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்தபைரே ரெட்டி, எடியூரப்பாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.
பத்ரா மேலணை திட்டப் பணிகள் தொடர்பாக எடியூரப்பா மீது மதச்சார்பற்ற ஜனதா தள செய்தித் தொடர்பாளர் ஒய்.எஸ்.வி.தத்தா, லோக் ஆயுக்த சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.
இது குறித்து திங்கள்கிழமை விசாரித்த லோக் ஆயுக்த போலீஸார், ஆர்.என்.இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு கட்டுமானப் பணி ஒப்பந்தம் அளித்துள்ளதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இது எடியூரப்பாவுக்கு ஆறுதலை அளித்தது. இந்நிலையில் நில முறைகேடு வழக்கில் மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது அவரது ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment