Saturday, February 4, 2012

குவைத் தேர்தல்:இஸ்லாமியவாதிகள் தலைமையிலான எதிர்கட்சியினருக்கு வெற்றி


குவைத் சிற்றி:குவைத் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமியவாதிகளின் தலைமையிலான எதிர் கட்சியினர் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளனர். மொத்தம் 50 இடங்களில் 23 இடங்களை கைப்பற்றிய இஸ்லாமியவாதிகள் தலைமையிலான எதிர்கட்சியினர் மொத்தம் 34 இடங்களை கைப்பற்றியுள்ளனர். முந்தைய பாராளுமன்றத்தில் 4 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இம்முறை ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.


ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் குவைத் அமீர் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு  தேர்தல் நடத்த தீர்மானித்தார். கடந்த ஆறுவருடங்களில் குவைத்தில் நடைபெறும் நான்காவது தேர்தலாகும்.
மக்களிடையே அரசுக்கு எதிரான உணர்வு தீவிரமடைந்துள்ளதை கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலின் வாக்குபதிவு சதவீதம் எடுத்து காட்டியது. 2009-ஆம் ஆண்டு 58 சதவீத வாக்குகளே பதிவாயின. ஆனால், இம்முறை 62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. எதிர்கட்சி எம்.பிக்கள் தலைமையிலான போராட்டம் காரணமாக அரசு பாராளுமன்றத்தை கலைத்தது. ஆளுங்கட்சியைச் சார்ந்த பல பிரமுகர்களும் தோல்வியை தழுவினர்.
பழங்குடியினரின் செல்வாக்கு மிகுந்த இரண்டு மாகாணங்களில் மொத்த 20 இடங்களில் 18 இடங்களை இஸ்லாமியவாதிகள் தலைமையிலான எதிர்கட்சியினர் கைப்பற்றினர். அதேவேளையில் எதிர்கட்சியினரின் வெற்றி, வெகுஜன எதிர்ப்பு போராட்டங்களுக்கு தீர்வு ஆகாது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment