Friday, February 3, 2012

தினமலர் ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!




இசுலாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக மதத்துவேசத்தைப் பரப்புதல், பிராமனரல்லாத சாதியினருக்கு எதிராக சாதிய துவேசத்தைப் பரப்புதல் ஆகிய கொள்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் எந்த நாளிதழ் செயல்பட்டு வருகிறது என்பதை சமூக நல்லிணக்கத்தை விரும்பும் நடுநிலையாளர்கள் அறிவர்.
குறிப்பிட்டதொரு மேல்ஜாதியினரால் நடத்தப்படும் தினமலர் என்ற நாளேடு, கடந்த 29-01-2012 அன்று "வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா: "கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்" என்று தலைப்பிட்டு, வன்னியர்களைத் திட்டமிட்டு அவமானப்படுத்தும் நோக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தது. அதில்,

1) வன்னியர்கள் வறுமை காரணமாக, சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு. தற்போது, நாகரிக வளர்ச்சியின் காரணமாக, சமூகத்தில் தங்களை மேம்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

2) சமூகத்தில் தங்களை மேம்படுத்தப்பட்டவர்களாக உயர்த்திக் கொண்டாலும், இன்றளவும் சண்டைக்கும், அடாவடிக்கும் பெயர் போனவர்கள் என்ற எண்ணம் பிற சமூகத்தினரிடம் உள்ளதன் காரணமாக வன்னியர்கள் என்றால், அவர்களிடம் வரவு செலவு, கொடுக்கல் வாங்கல் கூடாது என்பதை, எழுதப்படாத விதியாக பிற சமூகத்தினர் கடைபிடிக்கின்றனர்.

3) சமூகத்தில் மேம்பட்ட நிலைக்கு வந்துள்ள வன்னியர்கள் பலர், தொழில் ரீதியான பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், தங்களை, "கவுண்டர்" என சமூகத்தில் அறிமுகம் செய்து கொண்டு வலம் வருகின்றனர்.





4) அரசியில் ரீதியாக வளர்ச்சி கண்டுள்ள பலர் தங்களை, "வன்னியர்" என அரசியலுக்காக வெளியில் கூறினாலும், தங்கள் சமூகத்தினர் மத்தியில், "கவுண்டர்" என அடையாளம் காட்டுவதை தான் பெருமையாக கருதுகின்றனர். "கவுண்டர்" என வலம் வரும் பலர், தற்போது தங்களை, "கொங்கு வேளாள கவுண்டர்" என, மாற்றிக் கொள்ளவும் துவங்கி விட்டனர்.

என்று வன்னியர்களை அவமானப்படுத்தும் விதத்திலும் இழிவுபடுத்தும் விதத்திலும் எழுதியுள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது பெரும்பான்மை சமூகமான வன்னியர்களைக் குறித்து பிறசமூகத்தவர்களிடம் தவறான கருத்துருவாக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வேண்டுமென்றே தினமலர் இவ்வாறு எழுதியுள்ளதை நடுநிலையாளர்களும் அரசியல் தலைவர்களும் கண்டிக்காதது ஆச்சரியமாக உள்ளது.

"மாட்டுக்கறி சாப்பிடும் மாமீ நான்" என்று முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து, நக்கீரன் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டது. தங்கள் அபிமான தலைவர் குறித்த அவதூறான செய்தி காரணமாக உணர்ச்சிவயப்பட்ட தொண்டர்கள் அவ்வாறு செயல்பட்டுள்ளதை முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கண்டித்தனர். ஆனால், ஒட்டுமொத்த வன்னிய சமூகத்துக்கு எதிராக தினமலர் நாளேடு சாதியக்குழப்பம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக எழுதியுள்ளதை நியாயாவன்கள் எவரும் கண்டிக்கவில்லை.

சமூக குழப்பம் ஏற்படுத்தும் விசமிகளை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யலாம் என்றிருக்கும்போது தினமலர் நாளேடு ஆசிரியரையும் ஏன் அவ்வாறு குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையிலடைக்கக்கூடாது? என்பதே சட்டத்தை மதிக்கும் மக்களின் விடைதெரியா கேள்வியாக உள்ளது.
ஈழத்தமிழர்கள் கொத்துகொத்தாக குண்டுவீசி அழிக்கப்பட்ட போர்ச்சூழலில் தமிழீழ துரோகி கருணாவின் பேட்டியை தொடராக வெளியிட்டு மகிழ்ந்தது தினமலர்.

அதுபோல், இசுலாமியர்கள் குறித்து மாதமொன்று என்றளவில் மததுவேச நச்சுக்கருத்தை விதைத்து தீவிரவாதம் வளர்த்து வருகிறது. கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டங்கள் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிர்நாடி பிரச்சினை. இவ்விசயத்தில் போராட்டதாரர்களுக்கு உதவும் கிறித்தவ தொண்டு நிறுவனங்களையும் கொச்சைபடுத்தி VHP, RSS போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதைப்போல் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபவதற்காக கிறித்தவ தொண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு பணம் வந்துள்ளதாக பொய்க்கருத்தை பரப்பி வருகிறது.

"வன்னியர்கள் நிலை: தினமலர் தரும் விளக்கம்" எனும் செய்தியை மறுநாள் 30.01.2012 வெளியிட்ட தினமலர். "சுயநலமாக செயல்படும் ஒரு சிலரின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டும் வகையில் தான், 'வாழ்வாதாரத்தை உயர்த்த கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்'' என்ற தலைப்பிலான கட்டுரை வெளியானது. யாருடைய மனதையும் புண்படுத்தும்படி இந்த கட்டுரை வெளியிடப்படவில்லை. வன்னியர்களின் பின்தங்கிய நிலையை வெளிப்படுத்தும் வகையில் வெளியான இந்த கட்டுரை, சிலருடைய மனதை புண்படுத்தியதாக அறிகிறோம். அப்படி யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறோம்." என்று சப்பைக் கட்டியுள்ளது ஏற்கக் கூடியதல்ல.

ஒரு சாதியிலிருந்து இன்னொரு சாதிக்கு மாறினால் உயர்ந்தவராகலாம் என்ற சாதிய குரோத மனப்பான்மையை ஊக்குவித்து சமூகங்களிடையே கலகம் ஏற்படுத்தல், மதத்துவேசம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுதல், ஆபாசம், மூடநம்பிக்கை என்று தமிழ் கலாச்சாரத்திற்கும் இந்திய பண்பாட்டிற்கும் எதிராகச் செயல்பட்டு வரும் தினமலர் நாளேட்டை இந்திய பத்திரிக்கை கவுன்ஸிலும், தமிழக அரசும் இதுவரை தடை செய்யாமல் வேடிக்கை பார்த்து வருவது இரண்டு கோடி வன்னியர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment