Tuesday, February 14, 2012

குண்டுவெடிப்பு வழக்கு:ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சவுகானின் கைது திருப்புமுனையாகும்


புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த கமால் சவுகானை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்திருப்பது இவ்வழக்கில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான சவுகானை நேற்று முன்தினம் இந்தூரில் வைத்து என்.ஐ.ஏ கைது செய்தது.
குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வரும் தலைமறைவு ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா ஆகியோரை கைது செய்ய சவுகானின் கைது உதவும் என கருதப்படுகிறது.
சுனில் ஜோஷி கொலை வழக்கிலும் சவுகானிடமிருந்து தகவல் கிடைக்கலாம் என கருதப்படுகிறது. 2007 பிப்ரவரி 28-ஆம் தேதி 68 பேர் பலியான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ரெயில் பெட்டியில் குண்டை நிறுவியவர்களில் சவுகானும் ஒருவர் என என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது. நேற்று க்ரேட்டர் நொய்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுகான் ஒரு நாள் ரிமாண்ட் செய்யப்பட்டார். பின்னர் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் சவுகான் ஆஜர்படுத்தப்படுவார்.


சுனில் ஜோஷி வழக்கு தொடர்பாக முதலில் என்.ஐ.ஏ சவுகானிடம் விசாரணை நடத்தியது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இதர ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோருடன் சவுகானுக்கு இருந்த தொடர்பு கண்டுபிடித்ததை தொடர்ந்து இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக கூறி சவுகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சவுகான் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதை தொடர்ந்து அவரை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது. இதர 3 நபர்களுடன் சேர்ந்து சவுகான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டை வைத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான வன்வாசி கல்யாண் ஆசிரமத்தின் குஜராத் பிரிவு தலைவர் நாபாகுமார் சர்க்கார் என்பவரிடம் தேசிய புலனாய்வு ஏஜன்சி விசாரணை நடத்தியதில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சதித்திட்டம் குறித்து கூடுதல் விபரங்கள் கிடைத்தன. குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் அனைவரும் நெடுங்காலமாக ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் என என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன.


2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனப் படுகொலையை போல இந்தியா முழுவதும் நடத்துவதுதான் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கொள்கை என்றும், அதற்கு சாத்தியமில்லாத சூழல் நிலவியதால் அதிருப்தியடைந்தவர்கள் குண்டுவெடிப்பை நிகழ்த்த துவங்கினார்கள் என்றும் என்.ஐ.ஏ வட்டாரங்கள் கூறுகின்றன.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷத் சோலங்கி தாங்க் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. சோலங்கி அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். மேலும் சுனில் ஜோஷி கொலை வழக்கில் முக்கிய பங்கு வகித்த 3 ஹிந்துத்துவா தீவிரவாதிகளில் சவுகானும் ஒருவர் என்பதை தேசிய புலனாய்வு ஏஜன்சி கூறுகிறது.

No comments:

Post a Comment