Friday, February 3, 2012

காஸாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மீது செருப்பு வீச்சு

பெய்ட் ஹனௌன்(பாலஸ்தீனம்): இஸ்ரேலில் சிறைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் காஸாவுக்குள் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசினர்.

பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியில் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன.

இஸ்ரேல் சிறையில் அடைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் 40 பேர் காஸா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள எரஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை கையில் ஏந்திய படி "பான் கி மூன் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது போதும்" என்று ஆங்கிலம் மற்றும் அரபியில் எழுதிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தனர்.

அதில் 2 பேர் பான் கி மூன் கார் மீது செருப்புகளை வீசினர். மேலும் இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்களை பான் கி மூன் சந்திக்கவில்லை என்பதால் அவரது காரை போகவிடாமல் மனிதச் சங்கிலியாக மாறி மறித்தனர். ஆனால் பாதுகாப்பு படையினர் அவர்களை அங்கிருந்து போகச் செய்தனர்.

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் சிறைகளில் வாடும் உறவினர்களை சந்திக்கும் உரிமையை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று பான் கி மூனிடம் கோரிக்கை விடுக்கத் தான் இங்கு வந்தோம் என்று போராட்டக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் ஜமால் பர்வானா தெரிவித்தார். பான் கி மூன் சிறையில் இருக்கும் பாலஸ்தீனியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஏனோ அவர் பாலஸ்தீனிய கைதிகளின் உறவினர்களை சந்திக்க மறுக்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இஸ்ரேல் சுமார் 7,000 பாலஸ்தீனியர்களை சிறைபிடித்து வைததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment