Tuesday, December 14, 2010

என் மகன் நிரபராதி: அசாஞ்சே தாயார்

மெல்போர்ன்,டிச.12: ஜூலியன் அசாஞ்சே பாலியல் பலாத்காரம் செய்தான் என்ற குற்றச்சாட்டை என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது என்று அவரது தாயார் கிறிஸ்டினே அசாஞ்சே தெரிவித்தார்.


ஜூலியன் அசாஞ்சே ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மீது அக்கறையும், பொறுப்பும் கொண்ட உயரிய மனிதன். அப்படிப்பட்டவன் யாரையும் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்க நூறுசதவீதம் வாய்ப்பில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை கைப்பற்றி, உலக நாடுகளுடன் நல்லுறவு வைத்துள்ளதுபோல் நாடகமாடிவந்த அந்நாட்டின் போலித்தனத்தை வீதிக்கு கொண்டுவந்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விக்கி லீக்ஸ் இணையதளத்தின் தலைவர் ஜூலியன் அசாஞ்சே (39). அசாஞ்சே வெளியிட்ட தகவல்களால் உலக நாடுகள் அமெரிக்கா மீது கடும் அதிருப்தியில் உள்ளன. அந்நாட்டுடன் இனிமேலும் உறவு தேவையா என்றுகூட சில நாடுகள் யோசிக்கத் தொடங்கியுள்ளன.


 இதனால் அசாஞ்சே மீது அமெரிக்கா கடும் கோபம் அடைந்துள்ளது. அவருக்கு பல்வேறு விதத்தில் மிரட்டல் விடுத்து அவரை பழிவாங்கத் துடிக்கிறது.


இதுபோன்ற நிலையில் ஸ்வீடனுக்கு சென்றபோது ஜூலியன் அசாஞ்சே பாலியல் பலாத்காரம் செய்ததாக திடீரென குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி அந்நாடு கைது வாரண்டையும் பிறப்பித்தது.


இதையடுத்து லண்டனில் தங்கியிருந்த அசாஞ்சேயை ஸ்காட்லாந்து போலீஸôர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். அவரை ஸ்வீடனுக்கு கொண்டுவந்து விசாரிக்க அந்நாட்டு போலீஸôர் முயற்சித்து வருகின்றனர்.


இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள அசாஞ்சேயின் தாயார் கிறிஸ்டினேவை செய்தியாளர்கள் சந்தித்து அசாஞ்சே மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அசாஞ்சே மீதான புகாரை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.



அசாஞ்சே சில நாடுகளின் திரைமறைவு சதி செயல்களை அம்பலப்படுத்தி வருகிறான். இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சட்டப்படி அவனை எதிர்கொள்வதற்குப் பதிலாக குறுக்கு வழியில் அவனுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுகின்றனர். இதை நினைக்கையில் கவலை அளிக்கிறது. அசாஞ்சேக்கு எதிராக சதித் தீட்டப்படுவது குறித்து பத்திரிகைகளில் வெளிவரும் செய்தியை படிக்கும் போது அவனுக்கு ஏதாவது விபரீதம் நேர்ந்திடுமோ என்று பயமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. தாய்மை உணர்வில் பிற தாய்களைப் போலத்தான் நானும் என்றார் கிறிஸ்டினே.

 அசாஞ்சே எனது மகன் என்பதில் பெருமை அடைகிறேன். அவன் துணிச்சலானவன். அவனது துணிச்சலையும், சமூகப் பொறுப்பையும் நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


அசாஞ்சேவின் துணிச்சலைப் பாராட்டி உலகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் அவருக்கு ஆதரவு பெருகி வருகிறதே என்று கேட்டதற்கு, இது எனக்கும், அசாஞ்சேவுக்கும் ஆறுதல் தரக்கூடிய விஷயம்தான். உலகத்தின் கடைக்கோடியில் வாழும் பாமரர்கள்கூட எனது மகனுக்கு ஆதரவு தருவதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

 அசாஞ்சே ஒரு ஆஸ்திரேலிய குடிமகன். அவனை காப்பாற்றுவது ஆஸ்திரேலிய அரசின் தலையாயக் கடமை. ஆனால் ஆஸ்திரேலிய அரசு கடமை தவறிவிட்டது. பிரதமர் ஜூலியா கில்லார்டு அசாஞ்சேயை கிரிமினல் குற்றவாளி என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நன்றி:தினமணி 

No comments:

Post a Comment