Wednesday, December 15, 2010

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.96 உயர்ந்தது

புது தில்லி, டிச.14: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.96 உயர்த்தப்பட்டது. இது செவ்வாய்க்கிழமை நள்ளிரவே அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 90 அமெரிக்க டாலர்களாக விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலையை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (ஐஓசி) மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:


பெட்ரோல் விலையை நேற்றே (திங்கள்கிழமை) உயர்த்தியிருக்கவேண்டும். ரூ. 1.90 முதல் ரூ. 1.95 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை முடிந்தவுடன் பெட்ரோல் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அது ரத்தானது. மேலும் 2 நாள்கள் காத்திருக்குமாறு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் கூறிவிட்டது.

கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து விட்டதால் ஐஓசி, பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்பிசிஎல்) ஆகிய நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ. 4.17 என்ற அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.


இந்த நஷ்டத்தை சமாளிக்க பெட்ரோல் விலையை உயர்த்தியே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு டிசம்பர் 22-ம் தேதி தீர்மானிக்கும்.

கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 89.94 அமெரிக்க டாலராக திங்கள்கிழமை விற்பனையானது.
டிசம்பர் மாதத்தில் சராசரியாக பீப்பாய்க்கு 88.47 அமெரிக்க டாலர் என்ற விலையில் கச்சா எண்ணெயின் விலை இருந்தது.

இதற்கு முன்பு கடந்த மாதம் 9-ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. லிட்டருக்கு 32 காசுகள்என்ற அளவில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது என்றார் அவர்.


இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 என உயர்த்தியுள்ளதாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55.87 ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஐஓஎல், எச்பிசிஎல் நிறுவனங்களும் விலை உயர்வை ஓரிரு நாள்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்தி:தினமணி 

No comments:

Post a Comment