Monday, December 13, 2010

ராணுவ ரகசியங்கள் சீனாவுக்கு கடத்தல்: நாகாலாந்து பிரிவினைவாத தலைவர் வாக்குமூலம்

தில்லி, டிச. 12: நாகாலாந்து பிரிவினைவாத இயக்கம் மூலம் இந்திய ராணுவ ரகசியங்கள் சீனாவுக்கு கடத்தப்படும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் கைது செய்யப்பட்ட "நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து' பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர் அந்தோனி சிம்ரேவிடம் (50) நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.


அக்னி ஏவுகணைத் தளங்கள், சுகோய் விமானத் தளங்கள், அதிநவீன ராடார்கள் நிறுவப்பட்டுள்ள இடங்களின் வரைபடங்கள் சீனாவுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டுள்ளன.

இந்திய ராணுவ ரகசியங்கள் அடங்கிய 110 பக்க ஆவணங்கள் அந்தோனி சிம்ரேவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 45 பக்கங்கள் முக்கியமான ராணுவ ரகசியங்களாகும்.
   
வடகிழக்கில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம்கள், ராணுவ தளவாடக் கிடங்குகள் குறித்த துல்லியமான வரைபடங்களும் அந்தோனி சிம்ரே கைவசம் உள்ளன.
  
இந்த ரகசிய ஆவணங்கள் அவருக்கு எப்படி கிடைத்தன என்பது குறித்து "ரா' உள்ளிட்ட உளவு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

ஆயுதங்கள் விநியோகம்: நாகாலாந்து பிரிவினைவாத இயக்கங்களுக்கு சீனா ஆயுதங்களை விநியோகம் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடிக்கடி பெய்ஜிங் சென்றுள்ள அந்தோனி சிம்ரே, மத்திய சீனாவில் உள்ள நிறுவனத்திடம் இருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்து வந்துள்ளார்.
சீனாவில் இருந்து கப்பல் மூலம் அனுப்பப்படும் ஆயுதங்கள் வங்கதேசம், மியான்மர் வழியாக பயங்கரவாதிகளுக்கு கைமாறுவதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

தங்கள் இயக்கத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய கடந்த ஏப்ரலில் தாய்லாந்து நிறுவனம் மூலம் முன்பணம் அளிக்கப்பட்டதாகவும், விரைவில் அவை கப்பல் மூலம் வந்து சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு மிகக் குறைந்த விலையில் சீனா ஆயுதங்களை வழங்கி வருவதாகவும் சிம்ரே தெரிவித்துள்ளார்.

 மத்திய அரசுடன் அமைதிப் பேச்சில் ஈடுபட்டுள்ள "நேஷனல் சோஷலிஸ்ட் கவுன்சில் ஆப் நாகாலாந்து' அமைப்பு, மறுபுறம் ஓசையில்லாமல் ஆயுதங்களைக் கொள்முதல் செய்து வருவது மத்திய உள்துறை அமைச்சகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய ராணுவ ரகசியங்களைக் காப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம், அதே சமயம் சீனாவுடனான உறவை மறுபரிசீலனை செய்வதும் காலத்தின் கட்டாயம் என்று உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment