Tuesday, December 14, 2010

அப்சல்குரு விவகாரம்; பி.ஜே.பிக்கு மந்த புத்தியா..? சிதம்பரம் தாக்கு!


மதவாத பாரதீய ஜனதாகட்சி தனது தேசபக்தியை  காட்ட அவ்வப்போது கிளப்பும் விவகாரம் அப்சல்குரு சம்மந்தப்பட்டதாகும். அப்சல்குருவை ஏன் தூக்கில் போடவில்லை என்று கேட்டு தங்களின் தேசபக்தியை[?] அவ்வப்போது புதுப்பித்துக்  கொள்வார்கள். நாடாளுமன்றத்  தாக்குதல் விசயத்தில் அப்சல்குருவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதும், அவர் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்திருப்பதும், அது பற்றி ஜனாதிபதிதான் முடிவெடுக்கவேண்டும் என்பதும் சிறுபிள்ளையும் அறிந்த விஷயம்.

ஆனால் இதையெல்லாம் மறைத்து, காங்கிரஸ் அரசுதான் அப்சல்குருவை காப்பாற்றி வருவது போன்று நாடகமாடி  மக்கள் குழப்புகிறது பாஜக.
இந்நிலையில் நாடாளுமன்றத் தாக்குதல் நடந்த 9 வது ஆண்டு தினமான நேற்று, [13 -12 -2010 ]பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற மக்களவையில், இந்த நிகழ்ச்சியின்போது பா.ஜனதாவுக்கும் அரசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அப்சல் குருவுக்கு இன்னும் தண்டனையை நிறைவேற்றாமல் மத்திய அரசு மவுனமாக இருப்பது ஏன்? என்று, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ் கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், உணர்வுபூர்வமான இந்த தியாகிகள் நினைவு தினத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை என்று கூறி, அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாததற்கான காரணங்களை விளக்கினார். அவர் கூறியதாவது;

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்புகிறார்கள். பா.ஜனதா கூட்டணி ஆட்சியின்போது இதுபோன்று அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களில் இதுவரை ஒன்றில் கூட முடிவு எடுக்கப்படவில்லை.

அதன்பின் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது எனக்கு முன்பு உள்துறை மந்திரி பொறுப்பு வகித்த சிவராஜ்பட்டீல், அந்த 14 மனுக்களுடன் மேலும் 14 கருணை மனுக்களை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார். அவைகளில் இரண்டு மனுக்கள் மீது முடிவு எடுக்கப்பட்டு உள்ளன.

அதன்பின் பொறுப்பு ஏற்ற நான் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அனைத்து மனுக்களும் ஜனாதிபதியால் மறு ஆய்வு செய்யப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன. 5 அல்லது 6 மனுக்களில் ஜனாதிபதி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். மற்ற மனுக்களுக்கு அவருடைய முடிவுக்காக காத்து இருக்கிறேன்.
இதுபற்றி பலமுறை நான் விளக்கம் அளித்துவிட்டேன். அப்படி இருந்தும் மீண்டும் மீண்டும் அவர்கள் (பா.ஜனதா) கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனவே, அவர்கள் மந்த புத்தி உள்ளவர்களா? அல்லது வேண்டுமென்றே காது கேட்காதது போல் நடிக்கிறார்களா? என்று புரியவில்லை.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

இனியேனும் பாஜக, அப்சல் விஷயத்தில் நாவடக்கம் பேணி, தன்னைக் காத்துக்கொள்ளுமா என்று பார்ப்போம்.


-- 

No comments:

Post a Comment