Friday, December 10, 2010

உணவுப் பணவீக்கம் 8.69 சதவீதமாக உயர்வு-உணவு பொருட்களின் விலை மேலும் உயரும் ஆபத்து



புது தில்லி, டிச.9: தொடர்ந்து 7 வாரங்களாக சரிவைச் சந்தித்து வந்த உணவுப் பணவீக்கம் நவம்பர் 27-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.69 சதவீதமாக உயர்ந்தது. முந்தைய வாரத்தை விட கணிசமான இந்த உயர்வு பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இருப்பினும் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருவதால் ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.




வெங்காயம், பழங்கள் மற்றும் பால் விலை உயர்வு காரணமாக உணவுப் பணவீக்கம் அதிகரித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். நவம்பர் 20-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பணவீக்கம் 8.60 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து மிகக் குறைந்த அளவுக்கு உணவுப் பணவீக்கம் சரிந்தது அதுவே முதல் முறை. கடந்த ஆண்டு இதே காலத்தில் உணவுப் பணவீக்கம் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது.
உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதோடு, தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஆலோசனைக் குழு கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். நடப்பாண்டு குறுவை சாகுபடி அளவு 10 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பணப் பயிர்களான பருத்தி, கரும்பு ஆகியவற்றின் விளைச்சல் 10 சதவீதம் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இப்போது ஏற்பட்டுள்ள கணிசமான உயர்வு தொடர்ந்து நீடிக்கும் என்று கூற முடியாது. நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் (மார்ச்) பணவீக்க விகிதம் 5 சதவீதம் முதல் 6 சதவீத அளவுக்கு குறைந்துவிடும் என்று டியோலைட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் சந்தோ கோஷ் தெரிவித்தார்.


கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் குளிர் ஆகியவை காரணமாக ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் உணவுப் பணவீக்கத்தை விட அதிகரிக்கும் என்று தெரிகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 89 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஆசிய சந்தையில் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நவம்பர் மாதத்தில் பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்த்தப்படாததால், அதன் தாக்கம் ஏதுமில்லை.
மகாராஷ்டிரத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயத்தின் விலை உயர்ந்ததாக ஆக்ஸிஸ் வங்கியின் மூத்த துணைத் தலைவர் செüகதா பட்டாச்சார்ய தெரிவித்தார்.




நடப்பு நிதி ஆண்டில் நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 7.5 சதவீத அளவுக்குக் குறையும் என்று தலைமை  பொருளாதார ஆலோசகர் கெüசிக் பாசு தெரிவித்தார்.


வெங்காயத்தின் விலை 25.8 சதவீதமும், பழங்களின் விலை 18.31 சதவீதமும், பால் விலை 17.76 சதவீதமும் உயர்ந்திருந்தது. இதேபோல முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்தன. பருப்பு விலை 10 சதவீதம் குறைந்திருந்தது. கோதுமை விலை 3 சதவீதம் குறைந்திருந்தது.


உணவு பொருட்களின் விலை மேலும் உயரும் ஆபத்து 

No comments:

Post a Comment