Thursday, December 9, 2010

மீரா சங்கரிடம் சோதனையிட்டதை ஏற்கமுடியாது: எஸ்.எம்.கிருஷ்ணா

புதுதில்லி, டிச.9: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரிடம் சோதனை நடத்தப்பட்டது ஏற்க முடியாதது என்றும் இதை அமெரிக்க அரசிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.



கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்த கிருஷ்ணா, இந்திய அரசால் இதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் மீண்டும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.



மீரா சங்கர் கடந்த டிசம்பர் 4-ம் தேதியன்று மிஸ்ஸிஸிப்பியில் விமான நிலைய பாதுகாப்பு வரிசையில் இருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் உடல் முழுவதும் சோதனையிடப்பட்டார். தான் தூதர் எனக் கூறியும் அவரிடம் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

மிஸ்ஸிஸிப்பி பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் பால்டிமோர் செல்வதற்காக மீரா சங்கர் ஜாக்ஸன்-ஈவர்ஸ் சர்வதேச விமானநிலையம் வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

விமானநிலைய அதிகாரிகளிடம் தூதரக ஆவணங்களை மீரா சங்கர் காட்டியுள்ளார். எனினும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீரா சங்கரை கைகளால் உடல் முழுவதும் சோதனையிட்டதாக நேரி்ல் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட இந்திய நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் அமெரிக்க விமானநிலையங்களில்  இதுபோன்ற சில அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.

செப்டம்பரில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலின் பிறந்த தேதியும், அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள மற்றொரு பிரபுல் படேலின் பிறந்த தேதியும் ஒன்றாக இருந்ததால் அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகளால் அமைச்சர் பிரபுல் படேல் விசாரிக்கப்பட்டார். தற்போது மீரா சங்கரை உடல் முழுவதும் சோதனையிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment