Tuesday, November 5, 2013

செவ்வாய் கிரகத்துக்கு பிற்பகல் புறப்படுகிறது "மங்கள்யான்'

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்படுகிறது.


ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் வானிலை தெளிவாக உள்ளதால் ராக்கெட்டை ஏவுவதில் எவ்விதப் பிரச்னையும் இருக்காது என பி.எஸ்.எல்.வி. சி-25 திட்ட இயக்குநர் பி.குன்னிகிருஷ்ணன் தெரிவித்தார்.
ராக்கெட்டில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் அனைத்து பாகங்களும் சரியாக உள்ளன. பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மங்கள்யானுடன் விண்ணில் பறக்கத் தயாராக உள்ளது என அவர் மேலும் கூறினார்.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்புகிறது.

மொத்தம் ரூ.450 கோடி செலவிலான இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுóத்தபடியாக செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். 
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கில் செல்லும் வகையில் நிலைநிறுத்தப்படுவதால் சுமார் 10 நிமிஷங்களுக்கு விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரேடார்கள் மூலம் பார்க்க முடியாது.
விண்ணில் தொடர்ந்து தனது பாதையைப் பெரிதாக்கிக்கொண்டே வரும் விண்கலம் டிசம்பர் 1-ம் தேதி நள்ளிரவு செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும்.
தொடர்ந்து 280 முதல் 300 நாள்கள் பயணித்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை விண்கலம் அடையும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment