Wednesday, November 6, 2013

சமூக ஆர்வலர் கொலை: குஜராத் பாஜக எம்.பி. கைது


டெல்லி: குஜராத் மாநிலத்தில் சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. டினு போகா சோலங்கியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் கிர் வனப்பகுதி உள்ளது. இந்த கிர் வனப்பகுதிதான் இந்தியாவிலேயே சிங்கங்கள் வாழும் ஒரே இடமாகவும் திகழ்கிறது. அத்துடன் இந்த வனப்பகுதியில் தாதுமணல் அதிகமாகவும் கிடைக்கிறது.
கிர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக தாது மணல் வெட்டி எடுப்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா அம்பலப்படுத்தி வந்தார். இந்நிலையில் அவர் குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று காலை ஜூனாகத் ;லோக்சபா தொகுதி எம்.பி.யான சோலங்கியை சிபிஐ அதிகாரிகள் டெல்லி தலைமையகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இறுதியில் சோலங்கி கைது செய்யப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் காஞ்சன் பிரசராத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் சோலங்கியின் உறவினர் உட்பட 6 பேரை ஏற்கெனவே குஜராத் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமும் தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment