Monday, November 4, 2013

மேடை நாகரீகம் தெரியாத மோடி!

இன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும், பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் காட்சியளித்தனர் - நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர் என்பது, ஆரோக்கியமான ஒன்றே!



அதேநேரத்தில், தன்னைப் பிரதமராகவே நினைத்து மிதந்து கொண்டிருக்கும் நரேந்திர மோடி, ஆரோக்கியமான ஒரு பண்பாட்டைக் கடைப்பிடித்தாரா என்றால், இல்லை என்பது தான் அதற்குரிய பதிலாகும்.
சர்தார் வல்லபாய் படேல் அருங்காட்சியகம் திறப்பு விழா நிகழ்ச்சி அது; அந்த விழாவில் வல்லபாய் படேலைப்பற்றிப் புகழ்வது சரிதான் - யாருக்குச் சிலை திறக்கப்படுகிறதோ அவரைப் பற்றித்தானே பெருமையாகப் பேசவேண்டும் - அதுதானே மரபும்!
மோடி எப்படிப் பேசினார்? வல்லபாய் படேல் மட்டும் பிரதமராகப் பொறுப்பு ஏற்றிருந்தால் ஆட்சி எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும் என்று பேசுகிறார் என்றால் அதன் பொருள் என்ன?
ஜவகர்லால் நேரு பிரதமராகப் பொறுப்பு ஏற்றதால் நாடு வளர்ச்சி அடையவில்லை என்று மறைமுகமாகச் சொல்லுவதாகத்தானே பொருள்?
பிரதமராக இருக்கக் கூடிய மன்மோகன்சிங் அந்த மேடையில் வீற்றிருக்கும்போது, அப்படிப் பேசுவது சரியானதுதானா? நாகரிகம்தானா?
படேலைப் பொறுத்தவரை இந்துத்துவா சாயல் கொண்டவர் என்ற கருத்துண்டு. காந்தி யாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ். அல்ல - இந்து மகாசபைக்காரன் என்று முதலில் சொன்னார்; பின் அந்தக் கருத்தை மாற்றிக் கொண்டார்.
அதேநேரத்தில் 1949 டிசம்பர் 22 ஆம் தேதியன்று, இரவோடு இரவாக பாபர் மசூதி வளாகத்துக்குள், ராமன் பொம்மையைக் கொண்டு வைத்தது காவிவெறிக் கும்பல்.

அதனை அப்புறப்படுத்தவேண்டும்  என்று பிரதமர் நேரு கூறினாலும், துணைப் பிரதமராக இருந்த வல்லபாய் படேலும், உத்தரப்பிரதேச முதலமைச்சராகவிருந்த கோவிந்த வல்லப பந்தும் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை.  பிரதமர் நேரு கருதியபடி - திருட்டுத்தனமாக உள்ளே திணிக்கப்பட்ட ராமன் பொம்மையை அன்று அப்புறப்படுத்தியிருந்தால், பிற்காலத்தில் மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காதே!
படேல் மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மதிப்பும், அனுதாபமும் இருப்பதற்குக் காரணம் அன்று அவர் நடந்துகொண்ட விதம்தான். அதே உணர்வோடுதான், நேருவை மறைமுக மாகத் தாக்கும் தன்மையிலும், படேலைப் பெருமைப்படுத்தும் வகையிலும், பேசியதன் உட்பொருளும், இரகசியமுமாகும்.
ஒரு பொது மேடையில் இப்படி ஜாடை பேசுவதெல்லாம் கீழ்க்குணம் என்பதை, நரேந்திர மோடியிடம் எதிர்பார்க்க முடியுமா?
இன்னும் கேவலம் என்னவென்றால், பிரதமர் மன்மோகன்சிங் பேசும்போது, பி.ஜே.பி.காரர் களும், சங் பரிவார்க் கும்பலும் கூச்சல் போட்டுள்ளனர்.
அவர்களைப் பொறுத்தவரை மோடிமுதல் பஜ்ரங்தள் வரை அனைவரும் ஒரே தகுதி உடையவர்கள்தான்.
அதேநேரத்தில், எதைப்பற்றியும் கவலைப் படாமல், பிரதமர் மன்மோகன்சிங் பதற்றப் படாமல், பண்பாட்டோடு தன் சொற்பொழிவை நிகழ்த்தியுள்ளார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
பிரதமராக வர ஆசைப்படுவது என்பது ஒன்று. அதற்குத் தகுதியாகத் தம்மை ஆக்கிக் கொள்வது என்பது மற்றொன்று என்பதை வாக்காளர்கள் முதலில் தெரிந்துகொள் வார்களாக!

No comments:

Post a Comment