Friday, November 15, 2013

நெருங்குகிறது காற்றழுத்த தாழ்வு நிலை: நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர ஏற்பாடு

காற்றழுத்த தாழ்வு நிலை, சனிக்கிழமை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பாக்கப்படுவதால், நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.  


வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை அருகே சனிக்கிழமை கரையை கடக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலின் தென் கிழக்கு திசையில் சென்னையிலிருந்து 750 கிலோமீட்டர் தொலைவில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த தாழ்வு நிலை வெள்ளிக்கிழமை மாலை சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை சனிக்கிழமை மாலை நாகை அருகை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் 60 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்றும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் கடல் கொந்தளிப்பு, சூறைக்காற்று
கடலூரில் கடல் வெள்ளிக்கிழமை மதியம் வரை எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கமான நிலையில் இருந்தது. மதியத்திற்கு பிறகு, கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்தது. முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.புயல் பாதுகாப்பு மையங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள் ஆகியவற்றை, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது, அனைத்து துறை அதிகாரிகளும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல் மின் தடை ஏற்பட்டால், குடிநீர் தேவையை சமாளிக்க, 5 கிராமங்களுக்கு ஓன்று என்ற விகிதத்தில் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சனிக்கிழமை முடிவு செய்யப்படும் என்றார்.

50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வேகம், ஆடிக்காற்று வேகம் அளவு தான் இருக்கும், இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அதே சமயத்தில் 250 மில்லி மீட்டர் அளவு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவு மழை என்பது மிக அதிகம். இதனால் ஏரிகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார் விவசாய சங்க பிரதிநிதி பி.ரவீந்திரன்.
தானே புயலுக்கு பிறகு விழிப்புணர்வு
சுனாமி மற்றும் தானே புயலால் கடலோரப் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் அதன் பிறகு புயல் அறிவிப்பு என்றால், கடலூர் மீனவ கிராம மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். கடலில் ஏற்படும் மாற்றத்தை வைத்து, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுவோம். அதற்கான சூழல் இப்போது இல்லை என்றார் தேவனாம்பட்டணத்தை சேர்ந்த மீனவர் கண்ணதாசன்.
மூன்று நாள் விடுமுறையை பயன்படுத்த முடியாத நிலை
வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு அரசு விடுமுறை. அதிகாரிகள் யாரும் தலைமை இடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  இதனால் இந்த விடுமுறையில் வெளியூர் செல்ல திட்டமிட்ட அரசு ஊழியர்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment