Tuesday, November 10, 2015

தீரர் திப்புவின் பிறந்த தினம்-கர்நாடகாவில் பதற்றம்

பெங்களூர், நவ.10-
18-வது நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தானின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன

இந்நிலையில், இன்று நடைபெறும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை புறக்கணிப்பதாக பா.ஜனதா அறிவித்தது . இதனிடையே, கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சில மதஅமைப்புகள் அறிவித்து இருந்தன. மத அமைப்புகளின் இந்த அறிவிப்புக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், பாரதிய ஜனதா ஆதரவு வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோடகு மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அங்குள்ள சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது. இந்த பேரணியின் போது, திடீரென மோதல் வெடித்தது.
விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு அமைப்புக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். கல்வீச்சில் முன்னாள் அரசு ஊழியரும் உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் தலைவருமான குட்டப்பா என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்..


இதையடுத்து, அங்கு நிலவிவரும் பதற்றத்தை தணிக்க கூடுதலாக பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோடகு மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment