Monday, November 9, 2015

பிகார் தேர்தல் முடிவு: வெறுப்பு அரசியலுக்கு கிடைத்த தோல்வி- எஸ்.டி.பி.ஐ அறிக்கை

பிகார் தேர்தல் முடிவு மத்தியில் ஆளும் பாஜக அரசின் வெறுப்பு அரசியலுக்கு கிடைத்த தோல்வி என்று எஸ்.டி.பி.ஐ கூறியுள்ளது.


இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பிகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் நாட்டின் பன்முகத்தன்மையை கேள்விக்குறியாக்கி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலையும் மேற்கொண்ட பாஜகவுக்கும், சங்பரிவார் அமைப்புகளுக்கும் பிகார் மக்கள் தகுந்த பாடம் கற்பித்துள்ளனர்.

மதச்சார்பின்மை, நாட்டின் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, மற்றும் இடஒதுக்கீடுக்கு எதிராக பாஜகவும், சங்பரிவார் அமைப்புகளும் கூர்தீட்டிய வேளையில், பிகார் மக்கள் சமூகநீதியை காக்கும் வகையில் மகா கூட்டணிக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர்.


மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியில், நாட்டின் சகிப்புத்தன்மை மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான பாஜகவினரின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. குறிப்பாக தாத்ரி படுகொலையும், அதுதொடர்பான பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் செயல்பாடுகளும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாஜகவை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது.


கார்ப்பரேட் பலம், வளர்ச்சி முழக்கம் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, வளர்ச்சிக்கு பதிலாக, அந்த வெற்றியை தக்கவைக்க மேற்கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சியை பிகார் மக்கள் முறியடித்துள்ளனர். மோடியின் வெற்று வளர்ச்சி முழக்கத்தை பிகார் மக்கள் நிராகரித்துள்ளனர்.

மொத்தத்தில் இந்தத் தேர்தலில் பாஜகவின் சதிகளுக்கு சற்றும் இடம் கொடுக்காமல், எதிரெதிர் துருவமாக இருந்த ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதாதளமும், சமூக நீதியை காக்கவும், நாட்டின் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மையை காக்கவும் ஒற்றுமையாக களத்தில் நின்று இத்தகைய பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்வரும் தமிழக தேர்தலிலும் பாஜகவின் இத்தகைய பன்முகத் தன்மைக்கு எதிரான வெறுப்பு அரசியலுக்கு, தமிழக வாக்காளர்கள் பாடம் கற்பிப்பார்கள். அதன்மூலம் பீகார் மக்களைப் போன்று சமூகநீதியை காப்பதில் முன்னணியில் இருக்கும் தமிழக மக்களும் பாஜகவை துடைத்தெறிவார்கள் என்பதை தெரிவித்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment