Tuesday, January 3, 2012

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் 2 கோடி: முதல்வர் ஜெயலலிதா!


ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையை 2 கோடி ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"விளையாட்டு வீரர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இளைஞர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தினை வளர்க்கும் நோக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுப் பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு வளர்ச்சி வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற ஆணையம் உருவாக்கப்பட்டது.


கடந்த 2002ம் ஆண்டு ஆட்சி காலத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நடத்தப்படும் தேசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசியா மற்றும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவ படுத்தும் வகையில் ஊக்கத்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊக்கத்தொகையை இந்த ஆண்டு முதல் மேலும் உயர்த்தி வழங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ஒரு கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்ச ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாயாகவும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு 25 லட்ச ரூபாயிலிருந்து 50 லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டி, காமன் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை 20 லட்ச ரூபாயிலிருந்து 50 லட்ச ரூபாயாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 15 லட்ச ரூபாயிலிருந்து 30 லட்ச ரூபாயாகவும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு 10 லட்ச ரூபாயிலிருந்து 20 லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தெற்காசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ஊக்கத்தொகை ஒரு லட்ச ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாயாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்ச ரூபாயாகவும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தெற்காசிய மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளின் குழுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றால் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாயாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்ச ரூபாயாகவும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சரூபாயாகவும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திலிருந்து தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்வதற்காக விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் வீரர்களின் எண்ணிக்கையை 860லிருந்து 1,100 ஆக உயர்த்தியும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு என செயல்படும் உயர்தர விளையாட்டு விடுதியில் பயிற்சி பெறும் வீரர்களின் எண்ணிக்கையை 50லிருந்து 80 ஆக உயர்த்தியும் முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனால் அரசுக்கு ஆண்டு தோறும் செலவீனமாக 83 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயும், தொடர் செலவீனமாக ஒரு கோடி ரூபாயும் ஏற்படும்."
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment