Sunday, January 1, 2012

புரசைவாக்கம் இமாம் மவ்லானா நிஜாமுத்தீன் ஹழ்ரத் வஃபாத் - K-Tic விடுக்கும் இரங்கல் செய்தி



நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும்,  பன்னூல் ஆசிரியரும், திருக்குர்ஆன் விரிவுரையாளரும், சென்னை புரசைவாக்கம் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாமும் தமிழகத்தின் மிகப் பெரும் தப்லீக் அறிஞரும் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைஃக் கே.ஏ. முஹம்மது நிஜாமுத்தீன் மன்பயீ ஹழ்ரத்அவர்கள், இன்று சனிக்கிழமை (31.12.2011) மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
  
சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது.
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். இதற்காக தென்னகத்தின் தாய்க்கல்லூரியாம் வேலூர் ஜாமிஆ அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி கலாசாலையை தலைமையிடமாக கொண்டு 1996 முதல் செயல்படும் 'ஹைஅத்துஷ் ஷரீய்யா' என்ற ஷரீஅத் பேரவையில் சிறப்பான முறையில் செயலாற்றி வந்தார்கள் ஹழ்ரத் அவர்கள்.
சன்மார்க்கக் கோட்டையாகிய லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் பட்டம் (தஹ்ஸீல்) பெற்று, தப்லீக் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் அவர்கள்.
தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், தப்லீக் இஜ்திமாக்களிலும் ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன.

தமிழக மக்களின் இறைநம்பிக்கை(ஈமான்)யை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்.
யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.

No comments:

Post a Comment